ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 88
மார்ச் 29, 2021
‘கெளரவ’ பட்டங்களும் விருதுகளும் கெளரவப்படுத்த அல்லவா செய்ய வேண்டும்?
முன் குறிப்பும், முக்கியக் குறிப்பும்: என் 28 வருட பிசினஸ் அனுபவத்தில், மிக நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் இந்தப் பதிவில் குறிப்பிட்டதைப் போல பலநூறு முறை விருது கொடுக்கிறேன் என பல நிறுவனங்கள் வந்திருக்கிறார்கள். என் நேர்மையான கொள்கைகளுக்காகவும் நேர்வழிப் பயணத்துக்காகவும் எல்லாவற்றையும் மறுத்திருக்கிறேன். ஆனால் விவரம் முழுவதையும் கேட்டு உள்வாங்கிக்கொள்வேன். ஏனெனில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் அறியவும் பிறருக்கு விழிப்புணர்வு கொடுக்கவும். முழுக்க முழுக்க உங்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு இது. அதுவும் அண்மையில் ஏற்பட்ட அனுபவம் என்பதால் பகிர்ந்துள்ளேன். இதற்கு முன்பும் அவ்வப்பொழுது பகிர்ந்து உள்ளேன். தொடர் வாசகர்கள் அதனை நன்கறிவர். எனவே, விருது குறித்து நீண்ட விவாதங்களை பின்னூட்டத்தில் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பதில் அளிக்க நேரம் இல்லை என்பதால் இந்த வேண்டுகோள்.
—-
கடந்த வாரம் எனக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதாக ஒரு நிறுவனத்தில் இருந்து போன் செய்தார்கள். அவர்கள் அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளம் சார்பாக இந்தியாவில் இருந்து இயங்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். இங்கு உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்த அடிப்படையில் வருடந்தோறும் கெளரவ டாக்டர் பட்டம் அளித்து வருகிறார்கள் என்றும் அவர்களே தங்கள் பின்னணியை முன்னிலைப்படுத்துகிறார்கள்.
விருது கொடுக்கட்டும். கெளரவிக்கட்டும். சிறப்பிக்கட்டும். எல்லாம் சரிதான். அதற்கு அவர்கள் விதிக்கும் இரண்டே இரண்டு நிபந்தனைகள்தான் உறுத்துகிறது.
ஒன்று இந்தியாவில் நம் நாட்டில் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு லட்சத்தின் கால்பாகம் கட்டணத்தை டிடி எடுத்து அனுப்ப வேண்டும். அடுத்ததாக கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஹாலுக்கு சென்றுவர லட்சத்தில் ஐந்து சதவிகித கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அந்தக் கட்டணம் கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக நம்முடன் அழைத்துச் செல்லும் இரண்டு நபர்கள் ஏ.சி அறையில் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்திருப்பதற்காக, அங்கு நமக்கு சாப்பிடக் கொடுக்கும் காபி, டீ, டிபன் போன்றவைக்காக, சால்வை, ஷீல்ட், சர்டிஃபிகேட் இத்யாதி இத்யாதி இவற்றுக்காக என்று அவர்களே எந்த தயக்கமும் இன்றி சொல்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள். நிறுவனம் என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள். வாங்குகிற சம்பளத்துக்கு பணி புரிகிறார்கள். அவ்வளவுதான்.
இதுபோல பணம் கொடுத்து டாக்டரேட் பட்டம் பெறுவதில் விருப்பம் இல்லை. அப்படிச் செய்வது என்னையே நான் தாழ்த்திக்கொள்ளும் செயல். என் திறமையை கொச்சைப்படுத்தும் செயல்பாடு. ஆனாலும் அவர்கள் பின்னணி குறித்து தெரிந்துகொள்வதற்காக யார் யாருக்கெல்லாம் விருது கொடுக்கிறீர்கள் என விரிவாக விசாரித்தேன்.
‘இந்த பட்டத்தை வைத்து நான் என்ன செய்வது?’
‘டாக்டர் என நீங்கள் உங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளலாம் மேடம்’
‘இதுபோல கெளரவ டாக்டர் பட்டங்களை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளக் கூடாது என சட்டம் இருக்கிறதே?’
‘உங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் அழைப்பிதழ்களில் போட்டுக்கொள்ளலாம் மேடம்’
இப்படியாக எனது கேள்வியும் அவர்களின் பதிலும் நீண்டுகொண்டே இருந்தன.
சமீபத்தில் கலைமாமணி விருது வாங்கியவர்களில் ஒரு சிலருக்கு கெளரவ டாக்டரேட் பட்டம் கொடுப்பதாகச் சொல்லி அவர்களுக்கு இவர்கள் அனுப்பிய கடிதத்தை எனக்கு சாட்சிக்காக அனுப்பி வைத்தார்கள்.
நான் இப்படி விரிவாக கேட்பதால் எனக்கு விருப்பம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களின் அரசியல் மற்றும் சில பின்னணிகள் குறித்த புகைப்படங்களை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.
ஒரு மணி நேரம் கொடுத்து ‘யோசித்து சொல்லுங்கள்… விருதைப் பெற முழு தகுதியானவர் நீங்கள்தான்…’ என்றெல்லாம் சொல்லி ஊக்கப்படுத்தினார்கள்.
ஆனால் பொதுவாகவே நான் எல்லாவற்றையுமே விரிவாக தெரிந்துகொள்ளும் மனப்பாங்கில் இருப்பதால் அவர்களிடம் விஷயத்தை மட்டும் விரிவாக கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு சதவிகிதம் கூட இதுபோல பணம் கொடுத்து வாங்கும் பட்டங்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்பது அவர்களுக்குத் தெரியாதல்லவா?
கடந்த 18 வருடங்களாக, எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக வருடா வருடம் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படும் வல்லுநர்களுக்கு, அவர்களின் தகுதியின் அடிப்படையில் ‘மட்டுமே’ ஸ்ரீபத்மகிருஷ் விருதுகள் கொடுத்து கெளரவிக்கிறேன். நான் எதற்கு விருதுகளுக்கு ஆசைப்படப் போகிறேன். விருது வாங்கும் நிலையில் இருந்து விருதுகள் கொடுக்கும் நிலைக்கு என்னை நானே உயர்த்திக்கொண்டுள்ளேன் என்பதை எல்லாம் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் அதை எல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவர்கள் என் பின்னணி குறித்து தெரிந்துகொண்டல்லவா என்னிடம் பேசவே ஆரம்பித்திருப்பார்கள்.
நான் ஒரு ஐடி நிறுவனம் நடத்துகிறேன் என்பதை மட்டும் தெரிந்துகொண்டு என்னை அணுகியவர்களிடம் எத்தனை சொல்லி புரிய வைத்தாலும் புரியப் போவதில்லை என்பதால் பேச நினைத்தவற்றை மனதுக்குள் அடக்கினேன்.
என் நேர்மையான குணத்தையும், பணம் புகழ் செல்வாக்கு எதற்குமே அசைந்துகொடுக்காமல் நேர்வழியில் பயணம் செய்யும் என் பக்குவத்தையும் அவர்கள் அறிந்திருந்தால் எனக்கு போனே செய்திருக்க மாட்டார்களே?
ஒரு மணி நேரத்தில் திரும்பவும் போன் அழைப்பு. எனக்கு விருப்பமில்லை என்று சொன்னேன். உடனே அவர்கள் ‘கட்டணத்தில் வேண்டுமானால் குறைத்துக்கொள்கிறோம்’ என சொல்லி தோராயமாக ஒரு கட்டணம் சொல்லி அதை குறைத்துக்கொள்ளலாம் என சொன்னார்கள். நான் என் பதிலிலேயே உறுதியாக இருந்தேன்.
திரும்பவும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் என தொடர்ச்சியாக தொடர்புகொண்டு மேலும் கட்டணத்தை குறைத்துக்கொள்கிறோம் என பேரம் பேசியபடி இருந்தார்கள்.
இப்படி பேரம் பேசியாவது விருதும், பட்டமும் கொடுத்து கொண்டாட வேண்டிய நிலை ஏன் என்று கேட்டதற்கு வருடத்துக்கு இத்தனை பேருக்கு விருதுகொடுக்க வேண்டும் என்பது எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள் (?) என சொன்னார்கள்.
ஒரு கட்டத்தில் ‘என்னை தொந்திரவு செய்யாதீர்கள், எனக்கு கட்டணம் கொடுத்து விருதுகள் பெறுவதில் விருப்பம் என்றுமே இருந்ததில்லை என ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா? ஏன் திரும்பத் திரும்ப தொந்திரவு செய்கிறீர்கள்? இதுவே என் கடைசி வார்னிங்… இனி எந்த விதத்திலும் விருதுக்காக என்னை அழைக்காதீர்கள்…’ என கடுமையாக பதில் கொடுத்தேன்.
ஆனாலும் அவர்கள் விடவில்லை. அவர்களிடம் கெளரவ டாக்டரேட் பட்டம் பெற்ற நபர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை எல்லாம் அனுப்பியபடியே இருந்தார்கள். இப்படியெல்லாம் செய்து என்னை விருது வாங்குவதற்கு மோட்டிவேட் செய்கிறார்களாம்.
கடைசியாக ஒரு எச்சரிக்கை தகவலை மெசஞ்சர், வாட்ஸ் அப், இமெயில் எல்லாவற்றிலும் அவர்களுக்கு அனுப்பி விட்டு அத்தனையிலும் அவர்களின் தொடர்பை ப்ளாக் செய்தேன்.
இதுபோல கட்டண விருதுகள் பெருகிவிட்டதால், உண்மையிலேயே எனக்கு ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க முன்வந்தாலும் அதற்கு எப்படி மக்களிடம் மதிப்பு இருக்கும் என்ற வருத்தமே உண்டானது.
இதை எழுத வேண்டாம் எனதான் நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் நிறுவனத்தில் இருந்தே வேறு நபர்கள் மூலம் தொடர்பு செய்தபடி இருந்ததால் பொதுவெளியில் பகிர்கிறேன். தொந்திரவு அதிகமானால் அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையப்பெறும்.
இது என்னடா விருதுகளுக்கு வந்த சோதனை?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP