ஜம்முனு வாழ காம்கேரின் OTP-89: ‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்பதை ஐடி கார்டாக பயன்படுத்தலாமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 89
மார்ச் 30, 2021

‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்பதை ஐடி கார்டாக பயன்படுத்தலாமா?

ஒரு முறை தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக காலை ஆறு மணி பதிவு வெளியிட தாமதமாகியது. காரணம் லேப்டாப்பில் இண்டர்நெட் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்லி மொபைலில் இருந்து  முன்னறிவிப்பை மட்டும் வெளியிட்டிருந்தேன்.

அதற்கு பலரும் நன்றி சொல்லி இருந்தார்கள். சாதாரண முகநூல் பதிவுக்கே இத்தனை பொறுப்பாக காரணங்களைச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் செய்கின்ற வேலையில் எப்படி நேர்மையாக இருப்பீர்கள் என்றெல்லாம் பாராட்டி இருந்தார்கள்.

ஒருசிலரின் பின்னூட்டம் வியப்பாக இருந்தது. காரணம் பிறரை விமர்சனம் செய்வதாகச் சொல்லி எப்படி எல்லாம் தங்கள் அறியாமையை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என அவர்கள் மீது பரிதாபமே உண்டானது.

அப்படிப்பட்ட ஒரு பின்னூட்டமே, ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது.  ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது எந்த இடத்தில் பயன்படுத்தலாம். நன்றாக பாடத் தெரிந்தவருக்கு சபையில் ஏதேனும் ராகம் மறந்து போனால் தவறாகப் பாடினால் சொல்லலாம். கம்ப்யூட்டரில் புரோகிராம் எழுதும்போது சிறிய லாஜிக் கூட வராமல் தப்பும் தவறுமாக எழுதினால் சொல்லலாம். நன்றாக சமைப்பவர் உப்பை அள்ளி கொட்டி சமைத்திருந்தால் சொல்லலாம்.

ஆனால், சபையில் பாடிக்கொண்டிருக்கும்போது மைக் செட்டில் ஏதேனும் பிரச்சனை ஆகி பார்வையாளர்களுக்கு பாடுபவரின் குரல் சரியாக சென்று சேரவில்லை என்பதும், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதித்து புரோகிராமர் எழுதும் லாஜிக்கை இயக்க விடாமல் செய்வதும், சமைத்து வைத்தவரின் சாம்பாரில் வேண்டும் என்றே உப்பை அள்ளிக்கொட்டி அவருக்கு கெட்ட பெயர் வாங்கி வைக்கும் பொறாமை உறவினர் வீட்டில் இருப்பதும் எப்படி யானைக்கும் அடி சறுக்கும் என்ற பிரிவின் கீழ் வரும்?

தினந்தோறும் காலை ஆறு மணிக்கு என் பதிவை சுடச்சுடப் படித்துவிட காத்திருக்கும் அன்பர்களுக்காக  ‘தொழில்நுட்பப் பிரச்சனையினால் பதிவை வெளியிட தாமதம் ஆகும்’ என்ற தகவலை வெளியிட்டால் அதற்குப் பாராட்டெல்லாம் தேவையில்லை, இதுபோன்ற புரிதல் இல்லாத பின்னுட்டங்களைத் தவிர்க்கலாம்.

‘எனக்கு எழுதவே வரவில்லை. கான்செப்ட்டே கிடைக்கவில்லை, கற்பனை வறட்சி உண்டாகிவிட்டது’ என வருத்தப்பட்டிருந்தால் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என பின்னூட்டமிடலாம். தவறே இல்லை. ஆனால் கடவுள் அருளால் அந்த நிலை இதுவரை வரவில்லை.

முகநூலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் பலரும் மிகுந்த பிரயத்தனப்பட்டு தங்கள் இயல்பான குணத்தை மூடி மறைத்து நல்லவர் என்ற முலாம் பூசி பழகவே முற்படுவர். ஆனாலும் அவர்கள் ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன் தடயங்கள் அவ்வப்பொழுது அவர்கள் பேச்சில், நடவடிக்கையில் என ஆங்காங்கே வெளிப்பட்டு அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும். அது அவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

என் 27 வயதில் என் வயதை ஒத்த ஒரு நிறுவனத் தலைவரிடம் பிசினஸ் சம்மந்தமாக பேசி முடித்து பொதுவான சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சின் ஊடே அவர் சொன்ன கருத்து இன்றளவும் அவர் முகத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

அவருடைய நண்பரின் அம்மாவும் அவரது மாமியாரும் வீட்டில் நைட்டிதான் போட்டுக்கொண்டிருப்பாராம். அதை அவர் விமர்சனம் செய்த விதம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘வீடுகளில் அம்மா, பாட்டி, அத்தை இவர்கள் எல்லாம் நைட்டி அணிவதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. பெரியவர்களே இப்படி இருந்தால் அவர்கள் வீட்டு இளம்பெண்கள் எப்படி உடை அணிவார்கள் என பார்த்துக்கொள்ளுங்கள்…’

இப்படி விமர்சனம் செய்தவர் தன்னை பொதுவாகவே பரந்த மனப்பான்மை உள்ளவராகவும் பரோபகாரராகவும் காட்டிக்கொள்பவர். ஆனால் நைட்டி விஷயத்தில் கோட்டை விட்டார்.

இன்னும் ஒருசிலர் சின்ன சின்ன விஷயங்களில் தங்கள் நேர்மையை காட்டி பிறரிடம் இவர் நல்லவர் என்ற பெயரைப் பெற்றுவிடுவர். அதையே ஒரு பிராண்டாக வைத்துக்கொண்டு பெரிய விஷயங்களில் நேர்மையில்லாமல் நடந்துகொள்வர். இதனால் அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவர் மீது அத்தனை கோபமோ வெறுப்போ வராது.

உதாரணத்துக்கு தம் வீட்டு பணியாளர்களுக்கு நல்ல சம்பளமும் அவ்வப்பொழுது நல்ல துணிமணிகளும் வாங்கிக்கொடுத்து நல்ல பெயர் எடுத்தல். வீட்டு செல்லப் பிராணிகளிடம் அன்பாக இருத்தல். தன் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதையும் கேட்காததையும் வாங்கிக்கொடுத்து அசத்துதல். இப்படி வெளிப்பார்வைக்கு ‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்ற பெயரை பெற்று வைத்திருக்கும் பலர் சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களையும் சர்வ சாதாரணமாக செய்வதில் வல்லவராக இருப்பார்கள். இதுபோன்ற இவர்களது முறையற்ற செயல்பாடுகளை மற்றவர்கள் தூற்றாமல் இருக்கவே ‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்ற பிராண்டை அவர் பெறுவதற்கு எடுக்கும் சின்ன சின்ன விஷயங்களில் அவர்கள் காட்டும் அத்தனை அக்கறை. *விதிவிலக்குகள் உண்டு.

சில குழந்தைகளில் கூட இந்த மனோபாவத்தைக் காணலாம். தன் அம்மாவிடம் ‘இப்போ குளிக்கப் போகட்டுமா?’, ‘இப்போ சாப்பிடட்டுமா?’, ‘இப்போ தூங்கட்டுமா?’ என்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அனுமதி கேட்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெரிய பெரிய விஷயங்களில் தங்கள் அப்பா அம்மாவின் சம்மதம் இன்றி தங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். பெற்றோர்களின் கண்களில் இருந்து பிள்ளைகள் செய்யும் தவறுகள் எப்படி மறைகின்றன என்றால், பிள்ளைகள் தங்களிடம் கேட்காமல் எதையுமே செய்யமாட்டார்கள் என்ற பிம்பத்தை பிள்ளைகள் உருவாக்கி வைத்திருப்பதுதான்.

எனக்குத் தெரிந்த நண்பரின் மகன் அயல்நாட்டில் படிக்கச் சென்றார். அங்கிருந்து போன் செய்து ‘அம்மா, எனக்கு இந்த டிஷ் சாப்பிட ஆசையா இருக்கு… நண்பர்கள் அதைத்தான் சாப்பிடுகிறார்கள்… நானும் சாப்பிடட்டுமா?’ என்று கேட்பதை பெருமையாக பகிர்ந்துகொண்டார். இதுபோல ‘நான் சினிமாவுக்கு நைட் ஷோ போகட்டுமே?’, ‘நண்பர்களுடன் வீக் எண்ட் டூர் போகட்டுமா?’ என்பதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து தங்கள் மகன் அனுமதி கேட்பதை பெருமையாக சொன்னவர்களின் தலையில் ஒருநாள் இடியாக ஒரு செய்தி வந்திறங்கியது.

அவர்களின் மகன் தன்னுடன் படித்த ஒரு அயல்நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்டு விட்டதை அவருடைய மகனின் நண்பர்கள் மூலம் அறிந்து துடிதுடித்தனர்.

இப்படித்தான் சின்ன சின்ன விஷயங்களில் நல்ல பெயரை எடுத்து வைத்துக்கொண்டு அதையே ஒரு பாஸ்போர்ட் போல, விசா போல, ஐடி கார்டு போல பயன்படுத்தி தாங்கள் செய்கின்ற பெரிய தவறுகளை நியாயப்படுத்தவும் செய்வார்கள். நான் இளைஞர்களை மட்டும் சொல்லவில்லை. வயதில் மூத்தோர்களையும் சேர்த்தே சொல்கிறேன்.

மேடம், சார் என மரியாதை அடைமொழி கொடுத்து அழைப்பது பண்பான செயல் என நான் அடிக்கடி வலியுறுத்துவதால் வார்த்தைக்கு வார்த்தை ‘மேடம், மேடம்’ என சொல்லிவிட்டு தங்கள் தரம்தாழ்ந்த பின்னூட்டங்களை போட்டு காயப்படுத்துபவர்களும் இந்தப் பிரிவின் கீழ்தான் வருவார்கள்.

நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் ஆழ்மன எண்ணங்களை எத்தனைதான் மூடி மூடி வைத்தாலும், அதன் தாக்கம் நம் உடல்மொழியிலாவது வெளிப்பட்டுவிடும். வினை விதைத்தால் வினைதானே முளைக்கும். வினையை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்த்தால் கிடைக்குமா? எனவே நல்லவற்றை விதைத்தால் நல்லவற்றை அறுவடை செய்யலாம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon