ஜம்முனு வாழ காம்கேரின் OTP-93: சொல்லத்தான் நினைக்கிறேன்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 93
ஏப்ரல் 3, 2021

சொல்லத்தான் நினைக்கிறேன்!

சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்கின்ற என்பது போன்ற பின்னூட்டங்கள் நீக்கப்படும். ஏனெனில் புத்தகங்களில் எப்படி வக்கிரமான புத்தகங்கள் உள்ளதோ, சினிமாக்களில் எப்படி மோசமான காட்சிகள் உள்ளதோ, யு-டியூப் சேனல்களில் எப்படியெல்லாம் காட்சிகளை வைத்து மக்களை ஈர்க்கிறார்களோ, டிக்டாக் தடை செய்யப்படாத காலத்தில் அதில் நம் பெண்கள் உடல் அசைவுகளை எப்படி பகிரங்கமாக வெளிப்படுத்தி லைக்குகளை அள்ளினார்களோ அதுபோல சீரியல்களை இந்தப் பதிவில் சொல்லி உள்ளேன்.

எலக்‌ஷன் செய்திகளுக்காக, சமீபமாக கொஞ்சம் தொலைக்காட்சி சேனல்கள் அதிகம் பார்க்கிறேன்.

செய்திச் சேனல்களை மாற்றிக்கொண்டே வரும்போது கண்களில்படும் சீரியல்களின் காட்சிகள் அதிர்ச்சியாக இருந்தன. பெண்களை கொடூரமான முகபாவனையில் காண்பிப்பதும் அவர்களை ‘தாதா’ கணக்கில் உருவகப்படுத்துவதும் சீரியல்களில் காலம்காலமாக நடந்துகொண்டிருக்கும் விஷயம்தான். ஆனால் அதைவிட வருத்தத்தை உண்டு செய்த நெருக்கமான ஆண், பெண் காட்சிகள்.

திரைப்படங்களை நாமாக வலுக்கட்டாயமாக பார்த்தால்தான் உண்டு. ஆனால் சீரியல் காட்சிகள் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. அதில் வரும் நெருக்கமான காட்சிகள் நெருடுகின்றன.

முன்பெல்லாம் இத்தனை நெருக்கமான காட்சிகள் சீரியல்களில் வந்ததில்லை. இப்போது இதுபோன்ற காட்சிகளை வைத்தே டி.ஆர்.பி ரேட்டைக் கூட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட காட்சிகளை வைக்காமல் காதல், நேசக் காட்சிகளை காட்ட முடியாதா என்ன?

புத்தகமாகட்டும், சினிமாவாகட்டும், சின்னத்திரை நிகழ்ச்சிகளாகட்டும் யு-டியூப் சேனலாகட்டும் எல்லாமே நம் தேர்வுதான்.  ஆனாலும் அங்கிங்கெனாதபடி சின்ன சின்னதாய் காட்சிகளில் வக்கிரங்கள் கூடுவது அதிர்ச்சியாக உள்ளது. இன்று சிறுபொறியாய் இருப்பது விரைவில் அதிகரித்து பெருந்தீயாய் மாறுவது நிச்சயம். விழித்துக்கொள்வோம்!

சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் தேவைப்படுகிறதே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 10 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon