ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 92
ஏப்ரல் 2, 2021
ஒரு நல்ல வாசகர் = இரண்டு எழுத்தாளர்கள்!
இப்போதெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ், கட்டுரைகளுக்கான முன்னோட்டம் கொடுக்கும் நான்கைந்து வரித் தகவல்கள், வாட்ஸ் அப் மீம்ஸ் என சிறு செய்திகளைப் படிப்பதிலேயே திருப்தி கொண்டுவிட முடிவதால் பெரும்பாலானோருக்கு பெரிய கட்டுரைகளை படிக்க ஆர்வம் செல்வதில்லை என்றே நினைக்கிறேன்.
நிறைய பெரியவர்களை பார்த்திருக்கிறேன், வீட்டில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரின் வாயை அடைத்துவிட்டு (மியூட் செய்துவிட்டு) கீழே ஓடுகின்ற செய்தியை படித்தே செய்தியை அறிந்து கொள்கிறார்கள். பெரியவர்கள் மட்டும் அல்ல, நானே கூட லேப்டாப்பில் அலுவலக வேலை செய்தபடி தொலைக்காட்சி சப்தம் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் மியூட் போட்டு விட்டு அவ்வப்பொழுது நிமிர்ந்து செய்தியை படித்துக்கொள்வதுண்டு.
தொலைக்காட்சியில் கொடுக்கப்படும் ப்ரேக்கிங் செய்திகளும், செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முன்னோட்ட வரிகளும் அந்த செய்தியை முழுமையாக தெரிந்துகொள்வதற்கான ஒரு ஆர்வத்தைத் தூண்டும் யுக்தியே. மற்றபடி அதுவே செய்தியாகாது. ஆனால் அதுவே செய்தியாகும் அளவுக்கு அப்படிக் கொடுக்கப்படும் வார்த்தைகளில் ஈர்ப்பைக் கலந்து வெளிப்படுத்துவார்கள்.
சில இணையதளங்கள் ‘இவரின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? நடிகைகளையே மிஞ்சிவிடும் அழகு…’ என்றும், ‘இவருடைய முன்னாள் கணவன் இவர்தானா?’ என்றும், ‘இவர் தன் முதல் மனைவியுடன் இருந்த புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்றும் வாசகர்களின் மனவோட்டத்துக்கு ஏற்ப வார்த்தைகளை` அலங்கரித்து வெளியிடுவார்கள். அப்படிப் போடும் செய்தியுடன் சம்மந்தமே இல்லாத நடிகை நடிகரின் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டு அவர்கள் இணையதளத்துக்குள் செல்ல ஈர்ப்பார்கள். உள்ளே சென்று பார்த்தால் அந்த படத்துக்கும் செய்திக்கும் ஒரு சம்மந்தமும் இருக்காது. புகைப்படத்தில் இருப்பவர் அவருடன் ஏதோ ஒரு படத்தில் நடித்த நடிகையாகவோ அல்லது நடிகராகவோ இருப்பார்கள்.
மேலும் சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த நாளில் ஒரே செய்தியை இணையதளத்தில் விரிவாக, ஃபேஸ்புக்கில் மீம்ஸூடன் சுவாரஸ்யமாக, டிவிட்டரில் குறுஞ்செய்தியாக, யு-டியூபில் வீடியோவாக என்று கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துவிட முடிவதால் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் படித்து, நியூஸ் சேனலில் செய்தியை முழுமையாக கேட்டு செய்திகளை அறிய வேண்டும் என்கின்ற ஆர்வம் இல்லாமல் போகிறது.
ஆனால் நடப்பது என்ன தெரியுமா? பெரும்பாலும் எதையுமே யாராலும் முழுமையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை என்பதுதான் உண்மை. ஒரே செய்தி வெவ்வேறு ரூபத்தில் வருவதால் மக்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்படுகிறது.
மேலும் எல்லாமே எங்கேயேனும் யார் மூலமாகவோ அனைத்துமே பிடிஎஃப் ஆக இலவசமாக கிடைத்துவிடுவதால் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும் என்கின்ற முனைப்பும் குறைந்து வருகிறது.
என்னிடமே பல வாசகர்கள் ‘இலவச பிடிஎஃப் எப்போது கிடைக்கும் அல்லது வெளியிடுவீர்கள்’ என அறியாமையில் கேட்பார்கள். இணையத்தில் இலவசமாகக் கொட்டிக்கிடக்கும் அல்லது குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் பிடிஎஃப் புத்தகங்கள் சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிராக பிறரின் சொத்தை எடுத்து திருட்டுத்தனமாக வெளியிடும் வேலை என்று தெரிந்திருந்தால் ஒரு படைப்பாளியிடமே நேரடியாக உங்கள் படைப்பை எப்போது இலவச பிடிஎஃப் ஆக வெளியிடுவீர்கள் என கேட்பார்களா?
இதுகுறித்து நேர்மையான ஒரு வாசகர் வெளிப்படையாக என்னிடம் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.
‘நான் பெரும்பாலும் புது புத்தகங்களை காசு கொடுத்து வாங்க மாட்டேன். வசதி இல்லை. ஆனால் என்னால் படிக்காமல் இருக்க முடியாது. அதனால் பழைய புத்தகக் கடையில் மிகக் குறைந்த விலைக்கு புத்தகங்களை வாங்கிக்கொள்வேன். பெரும்பாலும் புதுப் புத்தகங்கள் வெளியாகி இரண்டு வருடங்களுக்குள் பழைய புத்தகக் கடைக்கு விற்பனைக்கு வந்துவிடுகிறது. அதுபோல தான் இப்படி இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ கிடைக்கும் பிடிஎஃப் புத்தகங்களும் என்று நினைத்திருந்தேன். இப்படித்தான் குறைந்த விலைக்கு பிடிஎஃப் புத்தகங்களை வாங்கும் பழக்கம் உண்டானது…’
இவரைப் போல எத்தனையோ வாசகர்கள் இலவச பிடிஎஃப் புத்தகங்கள் குறித்து நினைத்திருக்கிறார்கள். பிறரது படைப்புகளை எடுத்து திருட்டுத்தனமாக குறைந்த விலைக்கு பிடிஎஃப் புத்தகமாக வெளியிட்டு சம்பாதிப்பதே ஒரு பிசினஸாக நடந்துகொண்டிருப்பதை அவருக்குப் புரிய வைத்தேன்.
‘இனி குறைந்த விலைக்கு பிற எழுத்தாளர்களின் பிடிஎஃப் புத்தகங்கள் கொடுத்தால் வாங்க மாட்டேன் மேடம்…’ என நெகிழ்ச்சியாக சொல்லி விடைபெற்றார் அந்த வாசகர்.
எந்த ஒருவிஷயத்தையும் ஆழமாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் குறைந்து வருவதுடன் இலவசமாக கிடைக்கும் பிடிஎஃப் புத்தகங்களுக்கு ஏங்கும் மனோநிலையும் வந்துவிட்டது. இரண்டுமே ஆபத்தான மனநிலை.
ஏதேனும் ஒரு தரமான செய்தியை முழுமையாக வாசித்துவிட்டு மற்றதை மேலோட்டமாக மீம்ஸ் மனநிலையில் படித்து அறிந்துகொள்ளலாம் என அறிவுறுத்துவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
எந்த ஊடகம் வெளியிடும் செய்தி தரமானது என்பதிலும் சிக்கல் உண்டாகிறது. மேலும் புத்தகங்களும், எழுத்தும், அதிலுள்ள தகவல்களும் முன்போல பொதுவாக சமூகத்துக்கும் மக்களுக்கும் நல்ல விஷயங்களையும் நிதர்சனத்தையும் கொடுப்பதற்கு பதிலாக எழுதுகின்ற எழுத்தாளர்களின் மனநிலையை ஒட்டியே அமைந்திருப்பதும் பெருஞ்சோகம்.
எப்படிப்பட்ட அட்டைப் படத்தை தங்கள் புத்தகங்களுக்கு வடிவமைத்தால் அதைப் பார்த்தவுடனேயே மக்கள் விரும்பி வாங்குவார்கள், எப்படிப்பட்ட தலைப்பை வைத்தால் மக்களிடம் ஈர்ப்பாக இருக்கும் என்று எழுதுபவர்களே முடிவு செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் அட்டைப் படத்தைப் பார்த்துவிட்டு அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக அதைத் தேடி வாங்குபவர்களும் அதிகரித்துவிட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட வாசகர்கள் வெளியில் சொல்வது என்ன தெரியுமா? ‘சே ரொம்ப மோசம், இப்பவெல்லாம் என்ன எழுதுகிறார்கள், தலைப்பிலும், அட்டைப் படத்திலுமே வக்கிரம் கொட்டுகிறார்கள்… இப்படியே போனால் இந்த சமூகம் அழிய வேண்டியதுதான்…’ என என்னவோ இவர்கள் அந்த புத்தகங்களை வாங்கிப் படிப்பதே இல்லை என்ற கோணத்தில் பேசி ஆளை அசத்துவார்கள்.
மொத்தத்தில் முழுமையான வாசிப்பு என்பது பெருமளவில் குறைந்து ‘நுனிப்புல் மேயும்’ வாசிப்பு பெருகிவிட்டது.
சென்ற வருடம் ஒரு கதை எழுதி இருந்தேன். வயதான ஒரு பாட்டி இறந்துபோன கணவனை நினைத்து உருகி வருத்தப்படுவதாக அந்தக் கதையின் சாரம்சம். மீனாட்சி சுந்தரம் தன் கணவனின் பெயரை மீனாட்சி என்று பெயர் சொல்லியே அழைக்கிறார். அவர் இறந்த பிறகும் பொட்டு வைத்துக்கொள்கிறார். இதெல்லாம் தன் கணவன் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்குள் செய்துகொண்ட பாச ஒப்பந்தம். கதையின் இறுதியில்தான் மீனாட்சி என்பது ஆண் என்பதும். பாட்டி தன் கணவனை நினைத்து வருந்துவதும் தெரியும் என்ற அளவுக்கு டிவிஸ்ட் வைத்து எழுதி இருந்தேன். ஆனால் வாசகர்களுக்கு முழுமையாக கதையின் கடைசி வரை படிக்க பொறுமை இல்லை. (கதையின் லிங்க் https://compcarebhuvaneswari.com/?p=6246)
‘மனைவி உயிருடன் இருக்கும்போது இப்படி உருகி இருந்தால் இப்போது அழ வேண்டாம் அல்லவா?’ என்று கணவன் மனைவியை நினைத்து உருகுவதைப் போல புரிந்துகொண்டு பின்னூட்டமிட்டார்கள்.
300 வரிகள் மட்டுமே கொண்ட ஒரு கதையைக்கூட முழுமையாக கடைசிவரை படிக்கும் பொறுமை இல்லாத வாசகமனநிலை மாறிவிட்டதுதான் வருத்தமான விஷயம்.
நான் அடிக்கடி சொல்வதைப்போல் எழுத்தாளர் ‘ஒருவர்’ என்றால் நன்றாக புரிந்துகொண்டு வாசிக்கும் வாசகர்கள் ‘இரண்டு’ எழுத்தாளர்களுக்கு சமம்.
எழுதுபவர்கள் வாசகர்களின் கண்ணோட்டத்தில் அவர்களையும் மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்தமானதையே எழுத முடிகிறது. *விதிவிலக்குகள் உண்டு.
ஆனால் வாசகர்கள் பிறர் எழுத்தை வாசிக்கும்போது தன் மனவோட்டத்துடனும், எழுத்தாளர் அவர் கண்ணோட்டத்தில் என்ன சொல்ல வருகிறார் என்ற கண்ணோட்டத்துடனும் வாசிக்க வேண்டியுள்ளதால்தான் சொல்கிறேன் ஒரு வாசகர் இரண்டு எழுத்தாளர்களுக்கு சமம்.
எழுத்தாளர்களும், வாசகர்களும் தங்களை உள்ளுக்குள் நோக்கினால் இது உண்மை என புரியும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP