ஜம்முனு வாழ காம்கேரின் OTP-94: நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்! (SANJIGAI108)


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 94
ஏப்ரல் 4, 2021

நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்!

நம்முடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் நம் துன்பங்கள் மட்டும்தான் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். துன்பங்கள் என்பது பணப்பிரச்சனை, கடன் தொல்லை, காதல் தோல்வி, அவமானகரமான நிகழ்வுகளில் சிக்குதல், கெளரவப் பிரச்சனை இப்படி எதுவாக வேண்டிமானாலும் இருக்கலாம்.

நமக்கு ஏற்படும் துன்பங்களினால் கஷ்டங்களும் வலிகளும் நமக்கு உண்டாவது உண்மைதான். மறுப்பதற்கில்லை. அதன் வலி எப்போது அதிகமாகிறது தெரியுமா? அந்த துன்பங்களை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற எண்ணத்தினாலேயே அவை கொடுக்கும் வலி அதிகமாகிறது.

அதாவது தங்களைச் சுற்றி உண்டாக்கி வைத்திருக்கும் தங்கள் ‘இமேஜ்’ எனும் மாயவலையே துன்பங்களைப் பெருக்கிவிடுகிறது. அந்த இமேஜ் பிறர் தம்மை கவனிக்கிறார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் ஆழமாக விதைத்துவிடுகிறது. அந்த கவனிப்பில் நம்மைப் பற்றிய உயரிய எண்ணங்கள் மட்டுமே இருப்பதாக நமக்குள் நம்பிக்கை விழுந்துவிடுகிறது.

நம் துன்பங்கள் நமக்கு உண்டாக்கும் வலியைவிட அதிகமாக இருப்பது இமேஜ் கொடுக்கும் வலிகள்தான். நம்மைப் பற்றிய மதிப்பீடு பிறர் மத்தியில் குறைந்துவிடுவதால் உண்டாகும் வலி.

இதனால்தான் பணமும் புகழும் பெற்று உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள் கடன்பிரச்சனையினால் சட்டென தற்கொலை செய்துகொண்டுவிடுவதைப் பார்க்கிறோம். கடன் பிரச்சனை வந்தால் என்ன? எப்படியாவது சமாளித்துவிடலாம். என்ன நடத்திக்கொண்டிருக்கும் பிசினஸை கூட விட்டு விடலாம். எப்படியாவது அதில் இருந்து மீள்வதற்கு ஒரு வழி இல்லாமலா போகும். ஆனாலும் அவர்களால் அவர்கள் மீதான் இமேஜை விட்டுக்கொடுக்க இயலாமல், அந்த இமேஜூக்கு பங்கம் வரும் எந்த சூழலையும் சந்திக்க முடியாமல் நொடிப்பொழுதில் தற்கொலை எண்ணத்தை எடுத்துவிடுகிறார்கள்.

‘என்ன ஆனால்தான் என்ன… வாழ்ந்துப் பார்த்துவிடுவோம்’ என்ற துணிவைக் கொடுக்காத படிப்பும், பணமும், பதவியும், புகழும் இருந்துதான் என்ன பயன்?’

திபெத்தில் உள்ள பெளத்த மடாலயங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடக்கும் ஒரு சிகிச்சை முறை மிகவும் வித்தியாசமானது.

அங்கு வரும் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்களை  ஒரு அறையில் வைத்து சாப்பாடு தண்ணீர் எல்லாம் வைத்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவரே பசித்தால் எடுத்து சாப்பிட வேண்டும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். இதையெல்லாம் சரியாக செய்பவர்கள் கத்தி ஆர்பாட்டம் செய்வதையும் பொருட்களை தூக்கி எறிவதையும் நிறுத்த மாட்டார்கள். ஆனால் அவர்களை யாருமே அந்த மடாலயத்தில் கண்டுகொள்ள மாட்டார்கள். அவரவர்கள் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள். கத்தலும், கூச்சலும் சில நாட்கள் தான். அவர்களே அடங்கி மற்றவர்களைப் போல சாதாரணமாகி விடுவார்கள். எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் எப்படிப்பட்டவரும் அமைதியாகிவிடுவார்கள் என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

உண்மைதானே. மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்கள், மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய இமேஜை வளர்த்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் நாம் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போது அதில் இருந்து வெளிவர யோசிப்பதைவிட மற்றவர்கள் நம்மை எப்படி நினைப்பார்கள் என்று யோசித்து யோசித்தே நம் மனதில் எதிர்மறையான அல்லது பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் வளர்கின்றன. யாரும் பார்க்கவில்லை என்றாலோ அல்லது யாரேனும் பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவில்லை என்றாலோ அது வளர்ந்துகொண்டே போகாது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 8 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari