ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 95
ஏப்ரல் 5, 2021
அப்படியா? ஆம். இப்படியெல்லாமும்!
2003 – ம் ஆண்டு. அனிமேஷன் துறையில் புதுமைகள் செய்ய ஆரம்பித்திருந்த நேரம். மாதம் ஒரு அனிமேஷன் படைப்பு என தொடர்ச்சியாக வெளியிடத் தொடங்கி இருந்தோம்.
ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையில் இருந்து போன்கால். சீனியர் ரிப்போர்ட்டர் பேசுவதாக அறிமுகம் செய்துகொண்டார். அவர் ஒரு பெண். பொதுவாக என்னிடம் நேர்காணல் கேட்டு பத்திரிகைகள் அணுகுவதுண்டு. அதுபோல இருக்கும் என நினைத்து பேசினேன்.
‘நீங்கள் அனிமேஷன் துறையில் முன்னோடியாக இருக்கிறீர்கள். உங்கள் படைப்புகள் குறித்து எங்கள் பத்திரிகையில் பேட்டியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். உங்களை நேரில் சந்திக்க வேண்டும்’ என்றார்.
நானும் நாள் கிழமை நேரம் குறிப்பிட்டு வரச் சொன்னேன். சரியான நேரத்துக்கு வந்துவிட்டார்.
‘நான் நேரில் வந்ததே உங்களிடம் சில விஷயங்கள் பேசுவதற்காகவே… இது எனக்கும் உங்களுக்கும் மட்டும் இருக்கட்டும். எங்கள் மேலிடத்துக்குத் தெரிய வேண்டாம். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நேரடியாக சொல்லி விடுங்கள்…’ என பலமான பீடிகை போட்டு பேச ஆரம்பித்தார்.
‘உங்கள் அனிமேஷன் தயாரிப்புகள் குறித்து எங்கள் மினி புத்தகம் முழுவதும் வெளியிடுகிறோம். ஆனால் அது விளம்பரம் போல் இருக்காது. அனிமேஷன் குறித்த கட்டுரை தொகுப்பு போல் இருக்கும்… ஆனால் அந்த புத்தகம் முழுக்க உங்கள் தயாரிப்புகளுக்கான விளம்பரமே. விளம்பரமாக வெளியிட்டால் வருகின்ற ரீச்சைவிட இதுபோல செய்திகளாக வெளிவருபவைக்கு ரீச் அதிகம் இருக்கும்.’ என்று எனக்கு அவர்கள் பத்திரிகை தர்மத்தை அழகாகப் புரிய வைத்தார்.
இதற்கு விளம்பரம் கொடுத்தால், லட்சத்துக்கு சில ஆயிரம் குறைவாக இருக்கும் என ஒரு கணக்கை சொன்னார். மினி புத்தகமாக கொண்டு வந்தால் ஐம்பதனாயிரத்துக்கு சில ஆயிரம் அதிகமாக இருக்கும் என ஒரு கணக்கை சொன்னார். அதாவது விளம்பரம் கொடுப்பதைவிட செய்தியாக வெளியிட்டால் ரீச் இருக்கும் என்பதும், விளம்பரத்துக்குக் கொடுக்கும் கட்டணத்தைவிட செய்திக்குக் கொடுக்கும் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதையும் புரிய வைத்தார்.
மேலும் விளம்பரம் என்றால் அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் நிறுவனத்துக்குச் சேரும். செய்தியாகவோ அல்லது கட்டுரையாகவோ வெளியிடும்போது அதற்காக மறைமுகமாக வாங்கப்படும் கட்டணம் நிறுவனத்துக்குச் சேராது என்பதையும் வெகு நாசூக்காக சொல்வதாக நினைத்துக்கொண்டு என்னிடம் பேசினார்.
நமக்குத்தான் கற்பூர அறிவாயிற்றே. சாதாரணமாக சொன்னாலே ஆழமாக புரிந்துகொண்டுவிடும் நமக்கு இப்படி பட்டவர்த்தனமாக சொன்னால் புரியாமலா போகப் போகிறது?
அன்றைய ஐம்பதனாயிரத்துக்கும், ஒரு லட்சத்துக்கும் இன்றைய மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.
அவர் இத்தனை பொறுமையாக விளக்கியதற்காகவும் அவர் சோர்வை போக்கும் பொருட்டும் அவருக்கும் எனக்கும் சூடாக காபி ஆர்டர் செய்தேன். இருவரும் காபி அருந்தியபடி ரத்தினச் சுருக்கமாக பதில் சொல்லி அனுப்பினேன்.
‘மேடம், உங்கள் மேலிடத்துக்குத் தெரியாமல் செய்யச் சொல்லும் ஒரு குறுக்கு வழி எனக்கு வேண்டவே வேண்டாம்… நிதானமாக முன்னேறினாலும் மெல்ல மெல்ல மக்களிடம் ரீச் ஆனாலும் நேர்மையான அணுகுமுறையே எங்கள் காம்கேரின் வழி, எனக்கு என் பெற்றோர் கற்றுக்கொடுத்த வாழ்வியல்…’ என்று சொன்னபோது அவர் கொஞ்சம் தடுமாறினார். அப்போது எனக்கு வயது 30+. அவருக்கு வயது 45+.
30 வயது என்பது புகழுக்கும், விரைவில் வெற்றியின் உச்சத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று எண்ணும் ஆர்வக் கோளாறும் அதிகம் இருக்கும் வயது. ஆனால் அந்த வயதில் நான் அப்படி மனமுதிர்ச்சியுடன் பேசியதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
ஏதேதோ சொல்லி மீண்டும் புரிய வைக்க முயற்சி செய்தார். ‘போதும் மேடம்… என்ன சொன்னாலும் என் முடிவும் பதிலும் இதுதான்’ என்று சொல்லிவிட்டு எங்கள் அலுவலகப் பணிப்பெண்ணை அழைத்து குடித்து வைத்த காபி டம்ளரை எடுத்துச் சொல்லச் சொன்னேன்.
அவரும் புரிந்துகொண்டு கிளம்பினார். வரும்போது அவர் நடையில் இருந்த கம்பீரம் கிளம்பிச் செல்லும்போது இல்லை.
அதன் பிறகு தன் பத்திரிகைத் துறை நண்பர்களிடம் ‘அந்தப் பெண் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்று சொல்லி எனக்கு மறைமுகமாக நல்லதே செய்து வந்தார். இது எப்படி எனக்குத் தெரியும் என்றால் அவர்கள் தங்கள் பத்திரிகைக்காக நேர்காணல் அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு என்னை சிறப்பு விருந்தினராக என்னை அழைக்கும்போது ‘உங்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்’ என்று சொல்லியே பேசுவார்கள்.
‘என்ன கேள்விப்பட்டீர்கள், யார் என்ன சொன்னார்கள்?’ என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்டபின் அவர்கள் சொல்வதில் இருந்து தெரிந்து கொண்டதுதான்.
இவையெல்லாம் பத்திரிகைதுறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் வியாபித்திருக்கும் விஷயம்தான்.
இன்றுவரை நான் எங்கள் காம்கேரின் தர்மத்தில் இருந்தும், தனிப்பட்ட முறையிலான நேர்மையில் இருந்தும் மீறவில்லை.
ஏசி சர்வீஸுக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து சர்வீஸ் இன்ஜினியர் வருகிறார் என்றால் அவர்களில் ஒருசிலர் ’என்னிடம் நேரடியாக சர்வீஸ் செய்தால் நிறுவனக் கட்டணத்தை விட குறைவாக செய்து தருகிறேன்’ என சொல்லி அவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்குத் தெரியாமல் நடத்தும் நிறுவனத்தின் விசிட்டிங் கார்டை கொடுப்பார்கள்.
இதே கதைதான் கம்ப்யூட்டர் லேப்டாப் சர்வீஸ் நிறுவனங்களிலும். ஒரு இடத்துக்கு சர்வீஸுக்கு இன்ஜினியர்களை அனுப்பும்போதே இதுபோன்ற லீக்கேஜூகளை எல்லாம் தாண்டித்தான் லாபம் பார்க்க முடிகிறது.
இவை எல்லாமே, எல்லா இடங்களிலும் நடைபெறும் விஷயங்கள்தான். வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு சூழல்கள். வெவ்வேறு வடிவங்கள். அவ்வளவுதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
முக்கியக் குறிப்பு!
இது அரசியல் பதிவல்ல. எனக்கு நேர்ந்த அனுபவம். எனவே, இதற்கு அரசியல் பதிவாக பின்னூட்டமிட்டால் அவை நீக்கப்படும். மன்னிக்கவும்.
நீங்கள் மேலிடத்தில் புகார் அளித்திருக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் நீக்கப்படும்.
புரிதல் இன்றி உங்கள் கண்ணோட்டத்தில் நீங்கள் கொடுக்கும் எந்தவிதமான அறிவுரைகளும் நீக்கப்படும்.
மீடியாக்களே இப்படித்தான் என ஸ்டீரொயோ டைப்பான பின்னூட்டங்களும் நீக்கப்படும்.
தனி மனிதர்கள் நாம் சரியாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சரியாக இருந்தால் எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கலாம். எனவே பொதுப்படையான ‘என்னவோ போங்க… இப்படித்தான் எல்லாமே…’ என்ற வகை பின்னூட்டங்கள் நீக்கப்படும்.
புரிதல் இல்லாமல் கொடுக்கப்படும் பின்னூட்டங்களுக்கு பதில் கொடுத்து கொடுத்து சலிப்பாக உள்ளது. நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது. நிறைய உழைக்க வேண்டியுள்ளது. அதற்கான நேரத்தை புரிய வைப்பதிலேயே செலவிட வேண்டியுள்ளது. நான் எழுதுவதே மிக மிக எளிமையாகவே இருப்பதால் ஒரு முறைக்கு இரு முறையாக படித்துப் பாருங்கள். புரியும். மேலும் எந்த ஒரு பதிவும் அனுபவத்தின் சிறு பகுதியே. சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி இருப்பேன். எல்லாவற்றையும் எழுதி ‘என்னைப் பார் நான் எவ்வளவு தைரியசாலி…’ என விவேகமற்ற வீரத்தைக் காண்பிப்பது என் இயல்பல்ல. எனவே புரிந்துகொண்டு பின்னூட்டமிடுங்கள்!
தொடர்ச்சியாக என் பதிவுகளை வாசித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!