மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்கள்: என் வாசகர்கள்!
#வாசகர்_நேர்காணல்
1. தினமும் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறீர்கள்?
2.விடியற்காலை பதிவுகளை எழுத எவ்வளவு மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறீர்கள்?
3.எழுந்தவுடன் எழுத ஆரம்பித்துவிடுவீர்களா?
4.மொபைலிலேயே டைப் செய்துவிடுவீர்களா?
5.உங்கள் பதிவுகளுக்கான டாப்பிக்கை எப்படி செலக்ட் செய்கிறீர்கள்?
6.உங்கள் பதிவுகளை முதலில் படிப்பது?
7.அவர்களும் சீக்கிரமே எழுந்துவிடுவார்களா?
8.உங்கள் பதிவுகளில் ப்ரூஃப் பார்ப்பது?
9.உங்கள் பதிவுகளின் வாசகர்களால் உங்களுக்கு ஏற்பட்ட சமீபத்தைய வருத்தம்?
10.உங்கள் பதிவுகளின் வாசகர்களால் உங்களுக்கு ஏற்பட்ட சமீபத்தைய சந்தோஷம்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 105
ஏப்ரல் 15, 2021
சமூக வலைதளங்களில் எழுதுவது குறித்த நேர்காணல்!
1. தினமும் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறீர்கள்?
காலை 3 மணிக்கு. பள்ளி நாட்களில் படிப்பதற்காக அந்த நேரத்தில் எழுந்துகொண்டது பின்னர் அதுவே வாழ்நாள் பழக்கமாகிவிட்டது.
2.விடியற்காலை பதிவுகளை எழுத எவ்வளவு மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறீர்கள்?
எழுதுவதற்கு அரை மணி நேரம். தேவையான படங்களை கிராஃபிக்ஸில் வடிவமைக்க பத்து நிமிடம். ஆக மொத்தம் 40 நிமிடங்கள்.
3.எழுந்தவுடன் எழுத ஆரம்பித்துவிடுவீர்களா?
முதல் 40 நிமிடங்கள் எழுதுவேன். பின்னர் அலுவலக வேலை. புரோகிராம், லாஜிக், அனிமேஷன், வீடியோ எடிட்டிங், என் நிறுவனப் பொறியாளர்களுக்கு அன்றைய தினம் கொடுக்க வேண்டிய பணிகள் பற்றிய ஆய்வு என காம்கேரின் பணிகளில் மூழ்கிவிடுவேன்.
4.மொபைலிலேயே டைப் செய்துவிடுவீர்களா?
இல்லை. மொபைலை போன் பேச மட்டுமே பயன்படுத்துகிறேன். ஃபேஸ்புக் கூட மொபைலில் பார்ப்பதில்லை. பின்னூட்டத்துக்கு பதில்கொடுக்கக்கூட மொபைலைப் பயன்படுத்த மாட்டேன். லேப்டாப்பில் மட்டுமே டைப் செய்கிறேன்.
5.உங்கள் பதிவுகளுக்கான டாப்பிக்கை எப்படி செலக்ட் செய்கிறீர்கள்?
பதிவுக்கான டாப்பிக்கை செலெக்ட் செய்வதற்கென்று மெனக்கெடுவதில்லை. தினந்தோறும் படிப்பது, பார்ப்பது, பேசுவது என நான் செய்கின்ற பணிகளின் ஊடே கிடைக்கின்ற சின்ன சின்ன அனுபவங்களையும் என் எண்ணம் சொல் செயல் இவை மூன்றில் இருந்தும் தடம் மாறாமல் நேர்மையாக எழுதுகிறேன். சொல்லத் தேவையில்லாத விஷயங்களை சொல்வதில்லை என்பதில் தீவிரமாக உள்ளேன்.
காற்றின் அசைவும், பூக்களின் மலர்ச்சியும், தெருவில் நடந்து செல்லும் பெரியவரின் இருமல் சப்தமும், நாயின் குரைப்பொலியும், விட்டு விட்டு எறியும் தெரு விளக்கும், பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் எடுப்பார் அற்று நின்றுகொண்டிருக்கும் குழந்தைகளுக்கான இரண்டு சைக்கிள்களும் என பார்வையில் படும் சிறு தூசிகூட என் படைப்பின் கான்செப்ட்டுக்கு வலு சேர்க்கும்.
உதாரணத்துக்கு நேற்று மொட்டைமாடியில் சங்கு பூ பறித்துக்கொண்டிருந்த போது அந்த நீல வண்ணப் பூக்கள் என்னையும் அறியாமல் நேர்மறை சிந்தனையுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது.
எப்படி தெரியுமா?
நேற்று தமிழ்ப் புத்தாண்டு. வழக்கத்துக்கும் மாறாக பறிக்கப் பறிக்க பூக்கள் குறையவே இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கைவலிக்கவே ஆரம்பித்து விட்டது. பவளமல்லி போல செடியை அசைத்தால் சங்குப்பூக்கள் கீழே உதிராது. ஒவ்வொன்றாக பறிக்க வேண்டும். பொறுமை இல்லை என்றால் பூ பாதியில் பிய்ந்துவிடும். அத்தனை மென்மையானது சங்குப்பூக்கள்.
சங்குப்பூக்கள் வீட்டில் பூத்தால் அதிர்ஷ்டம் என சொல்லிக் கேட்டதுண்டு. அதிர்ஷ்டம், புத்தாண்டு, பறிக்க பறிக்க குறையாத எண்ணிக்கையில் பூக்கள் இவை எல்லாம் ஒன்றாக சேர்ந்துகொண்டு ஏதோ நல்லது நடக்க இருக்கிறது என மனதுக்குள் ஒரு குதூகலம் ஒட்டிக்கொண்டது.
பூக்கள் அதன் இயல்பாக பூக்கிறது. நேற்று தமிழ்ப் புத்தாண்டு என்று அதற்குத் தெரியுமா என்ன? ஆனாலும் பூக்கள் நமக்கு நல்ல செய்தியை சொல்வதற்காகவே அதிகப்படியாக பூத்துள்ளது என நம் மனம் நேர்மறை உணர்வுடன் தொடர்புப்படுத்திக்கொள்கிறதல்லவா? இவ்வளவுதான் வாழ்க்கை.
நாம் பார்க்கும் சின்ன சின்ன விஷயங்களையும் உற்று நோக்கினால் நேர்மறை எண்ணங்கள் நமக்குள் பெரிய அளவில் ஒட்டிக்கொள்ளும்.
இப்படித்தான் என் பதிவுகளுக்கான கான்செப்ட் உருவாகிறது.
இன்னொரு உதாரணம் சொல்லலாம்.
‘சின்னத்திரை சீரியல்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை கேட்டிருந்தார்கள் ஒரு பத்திரிகையில். அதற்கான ஆய்வுக்காக தொடர்ச்சியாக சில தினங்கள் சீரியல்கள் எப்படி சென்றுகொண்டிருக்கின்றன என்பதை கவனிப்பதற்காக மேலோட்டமாகப் பார்த்து வருகிறேன். ‘பாக்கியலஷ்மி’ என்ற ஒரு சீரியல் கவனத்தை ஈர்த்தது. அதில் பாக்கியலஷ்மியாக நடித்துவரும் நடிகை சிவாஜி கணேசனையும், சரிதாவையும் நினைவூட்டுகிறார். முகத்திலும், உடல்மொழியிலும் அத்தனை எக்ஸ்ப்ரஷன்கள். நாடி நரம்பெல்லாம் நடிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பால் ஈர்த்த நடிகையாக தெரிகிறார். இவரது நடிப்புகூட எனக்குள் ஒரு கான்செப்ட்டை உருவாக்கிக்கொடுக்கிறது.
நம் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கி பேச்சைக் குறைத்துக்கொண்டால் பார்க்கும் விஷயங்களில் எல்லாம் அழகியலையும் வாழ்வியலையும் உணர முடியும்.
6.உங்கள் பதிவுகளை முதலில் படிப்பது?
என் அப்பா அம்மா. லேப்டாப்பில் எழுதிய பிறகு அப்பா அம்மாவின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பிவிடுவேன். முதலில் பார்ப்பதும் படிப்பதும் அவர்களே. பின்னர் நிதானமாக அவர்கள் ஃபேஸ்புக்கில் படிப்பார்கள்.
7.அவர்களும் சீக்கிரமே எழுந்துவிடுவார்களா?
ஆம். இரண்டு பேருமே காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். 6 மணிக்கு நான் சமூகவலைதளங்களில் பதிவேற்றும் முன்னர் அவர்கள் படித்துவிடுவார்கள்.
8.உங்கள் பதிவுகளில் ப்ரூஃப் பார்ப்பது?
நான்தான். என் அப்பா பதிவின் தகவல்களில் நடுநடுவில் இணைப்பு வார்த்தைகள் ஏதேனும் பொருத்தி அதற்கு வலுசேர்க்க வேண்டுமென்றால் அதை சொல்வார். அம்மா அருமையாக ப்ரூஃப் பார்த்துவிடுவார். தவிர 6 மணி முதல் 7 மணி வரை நான் வாக்கிங் செல்லும்போது நான் இரண்டு மூன்று முறை என் பதிவை நானே மூன்றாம் நபராகக் கருதி படிப்பேன். ஏதேனும் எழுத்துப்பிழை இருந்தால் சரி செய்துவிடுவேன்.
9.உங்கள் பதிவுகளின் வாசகர்களால் உங்களுக்கு ஏற்பட்ட சமீபத்தைய வருத்தம்?
என் பதிவுகளை தொடர்ச்சியாக படிப்பவர்கள் என்னை நன்கு புரிந்துகொள்ள முடியும். ஏன் என்றால் எழுத்தையும் வாழ்க்கையையும் வெவ்வேறாக வைத்துக்கொள்ளாததால் நான் எப்படி எழுதுகிறேனோ அப்படியே வாழ்கிறேன். எப்படி வாழ்கிறேனோ அப்படியே எழுதுகிறேன்.
சில தினங்கள் முன்னர் கொரோனா வேக்சினேஷன் செய்துகொண்ட போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருந்தேன். அதில் ஒரு துளியும் சுயபச்சாதாபம் இல்லை. வழக்கம்போல பிறருக்கான விழிப்புணர்வே. ஆனாலும் ஒருசிலர் ‘தினமும் வாக்கிங் செல்கிறீர்கள், மூச்சுப் பயிற்சி செய்கிறீர்கள், உணவுக் கட்டுப்பாடு வேறு… உங்களுக்கு எப்படி ஜூரம் வந்தது, தலைவலி வந்தது… அப்படி என்றால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை…’ என்றும், ‘ஏன் அந்த மாத்திரை எடுத்துக்கொண்டீர்கள்… இதை அல்லவா எடுத்துக்கொள்ள வேண்டும்?’ என்றும் தாங்களே என்னவோ டாக்டர் போல அறிவுரையை அள்ளி வீசி இருந்தனர்.
இத்தனை மனமுதிர்சியுடன் செயல்படும் ஒரு நபருக்கு மாத்திரையை மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது கூடவா தெரியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் தமிழில் டைப் செய்யத் தெரிகிறது என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு மனதில்பட்டதை எல்லாம் எழுதுவது அயற்சியை கொடுத்தது.
எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ளாமல் அதிமேதாவி ஆலோசனைகள் கொடுத்ததுடன் அதிகப்பிரசங்கியாய் வாக்குவாதம் செய்த இரண்டு நபரை தவிர்க்கவே முடியாமல் ப்ளாக் செய்தேன்.
10.உங்கள் பதிவுகளின் வாசகர்களால் உங்களுக்கு ஏற்பட்ட சமீபத்தைய சந்தோஷம்?
காலையில் காபி வித் காம்கேர், வாக்கிங் வித் காம்கேர், ரீடிங் வித் காம்கேர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக என் எழுத்துக்களை விடாமல் படிக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்வதை கேட்கும்போது உற்சாகமாக உள்ளது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வருத்தமான குழப்பமான சூழலில் என் எழுத்துக்கள் வடிகாலாக இருந்திருக்கிறது என்பதை ஈகோ இல்லாமல் வெளிப்படையாக சொல்வதை கேட்கும்போது அவை என் எழுத்துக்கு மகுடம் சூட்டுவதாக உணர்கிரேன்.
இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும் ஒரு படைப்பாளிக்கு. அனைவருக்கும் நன்றிகள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்கள்: என் வாசகர்கள்!