ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 104
ஏப்ரல் 14, 2021
தீவிரவாதியாக இருப்போமே!
நல்ல விஷயங்களை செய்வதில் கவனம் செலுத்தி அதற்கு உழைப்பதற்குத் தயார் ஆகி குறிக்கோளுடன் பயணம் செய்வதற்கு நாம் செலவிடும் சக்தியை விட தீயவை நம்மை அண்டாமல் இருக்கவும், தீய சக்திகளிடமிருந்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளவும் நமக்கு சக்தி அதிகம் தேவைப்படுகிறது.
தீயவை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று நேரடியாக ‘நான் கெட்ட சக்திதான்’ என சொல்லிவிட்டு நமக்குத் தெரிந்தே நாம் அறிந்தே நம்மை தாக்கும். இரண்டாவது வகை தீய சக்தி என்ன செய்யும் தெரியுமா? ‘நல்லவை’ போல நாடகம் ஆடி நம்முடன் உறவாடி நம்மை சீரழிக்கும். முதல் வகை தீயசக்தியிடம் நாம் சுதாகரித்துக்கொண்டுவிடலாம். இரண்டாவது வகை தீயசக்தி அபாயகரமானது.
அதனால்தான் நல்லவை வெற்றிபெற நீண்ட காலமாகிறது. தீயவை இன்ஸ்டண்டாக வெற்றிபெற்று ‘கொக்கரித்து’ சிரிக்கிறது. நல்லவை நமக்குள் இருக்கும் சக்தி. அதை செயல்படுத்த நம் சக்தி மட்டும் போதாது. சூழலைப் போராடி எதிர்கொண்டுதான் ஜெயிக்க முடியும்.
ஆனால் தீயவை அடுத்தவர்களை அழிக்க உதவும் மாபெரும் சக்தி. அதற்குப் போராடத் தேவையில்லை. கெட்டவற்றை மனதால் நினைத்தாலே போதும் அது தானாக செயல்படத் தொடங்கிவிடும். தன்னை அழித்துக்கொண்டாவது பிறரை அழிக்கும் வல்லமை பெற்றது.
அதனால்தான் நல்லவற்றை நிறைய நினைக்க வேண்டும். நல்ல விஷயங்களை நிறைய பேச வேண்டும். நல்லவை குறித்து நிறைய விவாதிக்க வேண்டும். நல்லவை குறித்த நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும். நல்லவை நம்மிலும் நம்மைச் சுற்றிலும் பரவலாக பல்கிப் பெருக வேண்டுமானால் நல்லவற்றுக்காகவும் உழைக்க வேண்டும், தீய சக்திகளையும் முறியடிக்க வேண்டும். ஆக இரட்டிப்பாக உழைக்க வேண்டும்.
தீய சக்தியை முறியடிக்க ஒரே வழி நல்ல விஷயங்களை 1:1000 என்ற கணக்கில் பரவலாக்க வேண்டும். அதாவது ஒரு தீய சக்தியை விரட்ட 1000 நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் நல்லவைப் பல்கிப் பெருகும்.
உதாரணத்துக்கு பீட்ரூட் அல்வா தயாரிக்க வேண்டுமானால் அதற்குத் நாம் எடுத்துக்கொண்டுள்ள பீட்ரூட்டின் அளவுக்கு ஏற்ப நிறைய வெல்லம் சேர்த்து அதை பக்குவமாக பாகு செய்து, பால் விட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாகு மற்றும் பாலுடன் பீட்ரூட் துருவல் நன்றாக வெந்து அல்வா பக்குவத்துக்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கினால் மட்டுமே சுவையான பீட்ரூட் அல்வா கிடைக்கும். இப்படி சுவையான அல்வா தயாரிக்க குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஆகும்.
ஆனால் அந்த அல்வாவை விஷமாக்க வேண்டுமானால் பக்குவமாக கிளறி வைத்த அல்வாவில் ஒரு துளி விஷத்தைக் கலந்தால் போதும். அடுத்த நொடி அது அல்வா அல்ல. விஷம்.
எனவே நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் நல்லவைப் பெருக நாம் நிறைய முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். நல்லவற்றை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த அதிர்வலைகள் நமக்குள் மாபெரும் ஆக்க சக்தியைக் கொடுக்கும். தீய சக்திக்கு சின்ன பயத்தையாவது உண்டாக்கிக்கொடுக்கும்.
பல கெட்ட சக்திகளை விரட்ட சண்டையிட்டுப் போராட வேண்டும் என்பதில்லை. சின்னதாக மிரட்டினாலே போதும். நம் தீவிரமான எண்ணங்களே தீய சக்திகளுக்கான மிரட்டல். எனவே நல்லவற்றை சிந்திப்பதில் தீவிரவாதியாக இருப்போமே. தப்பில்லை.
ஆகவே, தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் இருந்து நல்லவற்றை அதிகம் நினைக்கத் தொடங்குவோம். நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவோம். நல்ல சூழலை உருவாக்குவோம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP