ஜம்முனு வாழ காம்கேரின் OTP-115: இயல்பு இயல்பானது எப்படி?

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. எஸ். மாலதி! இவர்  தனியார்  நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டண்டாக பணியில் இருக்கிறார். ஐடி துறையில் பணியாற்றும் இரண்டு மகள்களின் தாய்.

#வாசகர்_நேர்காணல்

பதிவு எண்: 846 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 115
ஏப்ரல் 25, 2021

இயல்பு இயல்பானது எப்படி?

இரும்பு பெண்மணி ஜெயலலிதாவிற்கு பிறகு நான் தங்களைத்தான் மனதில் உறுதி மிக்க பெண்மணியாகப்  பார்க்கிறேன். ஒரு செயலை முடிக்கும் வரை ஓயாமல் இருப்பதற்கு என்ன டிப்ஸ்?

முதலில் இரும்புப் பெண்மணி ஜெயலலிதா அவர்களுக்கு இணையாக உறுதிமிக்க பெண்ணாக என்னை ஒப்பிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள். அடுத்து ஒரு செயலை முடிக்கும் வரை ஓயாமல் இருக்கும் என் குணத்தை புரிந்துகொண்டமைக்கு என் அன்புகள்.

ஒரு செயலை ஓயாமல் செய்வதற்காக நான் எந்த சிறப்பு லாஜிக்கையும் பின்பற்றவில்லை. அது என் இயல்பு. என் சுபாவத்தின்படி வாழ்கிறேன். ஆனால் யாரேனும் என்னிடம் கேட்கும்போதுதான் ‘என்னவாக இருக்கும்?’ என காரணங்களை யோசித்துப் பார்க்கிறேன்.

1.முதல் காரணம் 24 மணி நேர பணி சுழற்சியில் பணி செய்த என் அப்பா அம்மா இருவரின் குணாதிசயங்கள் எனக்குள் இறங்கி இருக்க வேண்டும். இருவருக்குமே இரவு நேரப் பணி இருக்கும். ஒழுக்கம், நேர்மை, நேரம் தவறாமை, திட்டமிடல், இரவு பகல் பார்க்காமல் உழைத்தல் என என் பெற்றோர் வாழ்ந்து காட்டினார்கள். ஆனாலும் ஒருநாளும் தன் பணி குறித்து சலித்துக்கொண்டோ அல்லது தான் பணி செய்த நிறுவனத்தைக் குறை சொல்லியோ பார்த்ததில்லை. சுயசார்புடன் வாழப் பழக்கினார்கள். வெளிப்படையாக மனம் விட்டுப் பேசக் கற்றுக்கொடுத்தார்கள். நண்பர்களை வெளியில் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் அவர்களே நட்புடன் பழகினார்கள். இதெல்லாம்கூட என் செயல்களில் நான் காட்டும் ஈடுபாட்டுக்கு காரணங்களாக இருக்கலாம். நல்ல குடும்பத்தின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்ற உணர்வே நம் செயல்களை நிம்மதியாக செய்யத் தூண்டும் அல்லவா?

2.எந்த ஒரு செயலாக இருந்தாலும் ஆர்வத்துடன் செய்ய ஆரம்பிக்கிறேன்.

3.சலிப்பு இருந்தால் அந்த செயலை அரையும்குறையுமாக செய்வதைவிட செய்யாமல் இருப்பதே உத்தமம் என்று தொடக்கத்திலேயே முடிவு செய்கிறேன். இதனால் செய்கின்ற செயலில் முழு ஈடுபாடு வந்துவிடுகிறது. முழு ஈடுபாடு வந்த பிறகு யாராலும் அதை ஏனோ தானோவென்று செய்யவே முடியாது. ஏன் உங்களாலும்தான்.

4.ஒரு செயலை அது பெற்றுக் கொடுக்கும் பணத்தை வைத்தோ அல்லது புகழை வைத்தோ எடை போடாமல் அந்த செயலை நான் செய்கிறேன் என்ற மிக இயல்பான கண்ணோட்டத்துடன் செய்ய ஆரம்பிக்கிறேன். ஆகவே அது சிறப்பாகவர வேண்டும் என்ற உத்வேகம் தானாக வந்துவிடுகிறது.

5.ஒரு செயலை யாருக்காக செய்கின்றோம் என்ற எண்ணத்தை சுமையாக மனதுக்குள் தாங்கி சுமப்பதில்லை. ஒரு செயலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டால் ‘யாருக்காக செய்கிறோம்?’ என்பதை ‘நம்மால் அதை எப்படி சிறப்பாக செய்ய முடியும்?’ என்ற கேள்வியால் நிரப்புகிறேன்.

6.ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும்போதே அது எனக்காக இருந்தாலும் சரி, பிறருக்காக இருந்தாலும் சரி… ‘அந்த செயலை நான் செய்யப் போகிறேன்’, ‘அந்த செயல் என்னால் சிறப்பாக செய்து முடிக்கப்பட இருக்கிறது’ என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே என் கண் முன் நிற்கும். யாருக்காக, எதற்காக, எப்படி, ஏன், என்ன ஆதாயம், எவ்வளவு பணம் வரும், எப்பேற்பட்ட புகழ் கிடைக்கும் என்பதெல்லாம் என் செயலின் வேகத்துக்கு முன்னர் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும். கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் நம் செயலுக்கு முட்டுக்கட்டைப் போட உள்ளே நுழைந்து அழிச்சாட்டியம் செய்ய காத்திருக்கும். ஆனால் அதற்கு நான் இடம் கொடுப்பதே இல்லை.

7.இப்படி ஒருசெயலை செய்ய முடிவெடுத்துவிட்ட பிறகு சரியாக திட்டமிடுவேன். இத்தனை மணிக்குள், இத்தனை நாட்களுக்குள் / வாரங்களுக்குள் / மாதங்களுக்குள் / வருடங்களுக்குள் என ஒரு வரையறை வைத்துக்கொள்வேன். எந்த ஒரு செயலுக்கும் காலக்கெடு வைத்துக்கொள்ளும்போது மட்டுமே அதை நம்மால் சிறப்பாக செய்ய முடியும். அந்த காலகெடுவை பிறருக்கு வெளிப்படுத்தாமல் இருப்பது உத்தமம். காரணம், நாம் முடிக்கும் முன்னரே நம்மை கேள்விகளால் துளைக்க ஆரம்பிப்பார்கள். நம் செயலின் வேகம் குறையும்.

8.ஒரு செயலை முடித்த பிறகு கிடைக்கும் அங்கீகாரத்துக்காக ஏங்குவதில்லை. அதாவது பிறரால் கிடைக்கும் பாராட்டுக்காகக் காத்திருப்பதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் பெருமகிழ்ச்சி. பாராட்ட முடியாவிட்டாலும் தொந்திரவு கொடுக்காமல் விலகுகிறார்களே என்ற பக்குவம் எனக்குண்டு. அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு திட்டமிட ஆரம்பித்துவிடுகிறேன். ஏனெனில் சுய அங்கீகாரம் எனக்கு பூரண மகிழ்ச்சியை கொடுத்து அடுத்தடுத்த கட்டத்துக்கு உழைப்பதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

9.சிறிய இலக்குகளாக வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறேன். மெல்ல மெல்ல சிறிய இலக்குகளில் வெற்றி பெற்று அதன் தொடர்பான இலக்குகளை மெதுவாக விரிவாக்கிக்கொண்டே வந்து பெரிய இலக்கை நோக்கி நகர்கிறேன். இதனால் ‘எப்போதடா இலக்கை அடையப் போகிறோம்’ என்ற அயற்சி வருவதில்லை. மாறாக சிறிய இலக்குகளில் கிடைக்கும் மகிழ்ச்சி எனக்கு ஊக்கமருந்தாகிறது.

10.எந்த ஒரு தனி நபரையும் ‘ஆஹா ஓஹோ’ என புகழ்ந்து தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதில்லை. அது எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் சரி. அதே சமயம் அவர்களின் திறனுக்கும் திறமைக்கும் மதிப்பளிக்க தவறுவதில்லை. அவரவர்களுக்கான வாழ்க்கைப் பாதையில் அவரவர்கள் பயணிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் பிரத்யோகமான சூழல். அதை சமாளித்து வாழ்க்கை நடத்துவதே சாதனை. அதைவிட்டு நாம் ஏன் அடுத்தவர்களை தாங்கிப் பிடித்தோ அல்லது தூக்கிப் பிடித்தோ நாமும் மாயையில் சிக்கி வீக்காக்கிக் கொண்டு அவர்களையும் போதை ஏற்றி வீக்காக்க வேண்டும்?

11.எந்த ஒரு செயலையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்றோ, புதுமையாக செய்ய வேண்டும் என்றோ, மாற்றி யோசிக்க வேண்டும் என்றோ நினைத்து செய்வதில்லை. ஆனால் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் என் முயற்சி முதன்மையாக இருப்பதற்கு நான் இயங்கிவரும் தொழில்நுட்பமும் கொடுக்கிறது என்பதும் ஒரு காரணம்.

12.சமையல் நன்றாக செய்யத் தெரிந்திருக்கும் ஒருவர் விருந்துக்கு நண்பர்களை அழைத்திருந்தால் அவரால் சுமாராக சமைக்க முடியுமா என்ன? அவரே நினைத்தாலும் சுமாராக சமைக்க முடியாதல்லவா?

பொதுவாகவே, சாதாரண நாட்களைவிட விருந்துக்கு யாரையேனும் அழைத்திருக்கும் நாட்களில் சமையலில் சுவை ஓஹோவென்றிருக்கும். காரணம், அவர் தனக்கு பிடித்தவர்களை விருந்துக்கு அழைத்திருக்கிறார், அவர்கள் மனமும் வயிறும் நிரம்ப சாப்பிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தானே இருக்கும் அவர்கள் மனதுக்குள். அத்துடன் விருந்து முடிந்ததும் விருந்துக்கு அழைத்தவர்களுக்குக் கிடைக்கும் மன நிறைவு இருக்கிறதே அதை எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் பெற முடியாது. உழைப்பு கொடுக்கும் ஜாக்பாட் அது. விருந்துக்கு வந்திருப்பவர், விருந்துக்கு அழைத்திருப்பவர் என இருசாராருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்கும் மனநிறைவு அது.

நான் எந்த ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் இந்த லாஜிக்தான் என்னுள் புகுந்துகொள்ளும். நான் செய்கின்ற செயல் அதை செய்து முடிக்கும்வரை எனக்குள் மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டே வரும். அதை செய்துமுடிக்கும் தருவாயில் அந்த செயலால் யார் பயனடைய இருக்கிறார்களோ அவர்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்துவிடும்.

நான் செயல் செயல் என இங்குக் குறிப்பிடுவது எங்கள் காம்கேரில் சாஃப்ட்வேர் தயாரிப்பதையும், அனிமேஷனுக்கு திட்டமிடுவதையும், புத்தகம் வெளியிடுவதையும் மட்டும் சொல்லவில்லை. வீட்டில் ஒட்டடை அடிக்கும் செயலாக இருந்தாலும் சரி, பாத்ரூம் சுத்தம் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி. அதற்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் ஒரே மாதிரிதான்.

இப்படி பூரண ஈடுபாட்டுடன் ஒரு செயலைத் தொடங்கி மகிழ்ச்சியுடன் செய்து நிறைவாக செய்து முடித்த பிறகு நம் முகம் அழகாகி விடுவதை நாம் கண்ணாடியில் பார்க்காமலேயே உணர முடியும். நம் உடலும் இரண்டு சிறகுகள் மட்டும் இருந்தால் பறந்துவிடுவோமோ எனும் அளவுக்கு லேசாகிவிடும்.

நம் உடல் மட்டுமல்ல, மனமும் பேரழகாகி விடுவதை உணரும் தருணம்தான் உழைப்பின் வெற்றியை உணரும் அற்புதத் தருணம்.

13.என் திறமை கிரியேட்டிவிட்டி. படித்தது தொழில்நுட்பம். என்னால் கணிதத்தின் அடிப்படையிலான லாஜிக்கும் எழுத முடியும், கற்பனையின் அடிப்படையிலான அனிமேஷனும் படைக்க முடியும். என் படிப்பையும் திறமையையும் உழைப்பு எனும் பசை சேர்த்து ஒட்ட வைத்து எனக்காக நான் அமைத்துக்கொண்ட பாதையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன். வெற்றி கிடைத்தாலும் தோல்வி கிடைத்தாலும் அதற்குக் காரணம் நான் மட்டுமே. எனக்கான சாம்ராஜ்ஜியமாக ‘காம்கேர்’ எனும் நிறுவனத்தை உருவாக்கி வைத்துள்ளேன். அதில் இயங்குபவர்களையும் என்னுடன் சேர்த்துக்கொண்டு பயணிக்கிறேன். இதுதான் என் உழைப்பால் எனக்குக் கிடைத்த வெற்றி

14.வேலை கொடுக்கும் சோர்வை வேலையாலேயே முறியடிக்கிறேன். அதுபோல, வேலை கொடுக்கும் உற்சாகத்தை வேலையாலேயே இரட்டிப்பாக்குகிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. எஸ். மாலதி!

(Visited 92 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon