ஜம்முனு வாழ காம்கேரின் OTP-116: முன்னேற்றத்துக்கான ‘விசிட்டிங் கார்ட்’! (Sanjigai108)

பதிவு எண்: 847 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 116
ஏப்ரல் 26, 2021

முன்னேற்றத்துக்கான ‘விசிட்டிங் கார்ட்’!

நாம் செய்யும் செயல்களுக்கான பலன் நேரடியாக கிடைப்பதைப் போலவே மறைமுகமாகவும் கிடைக்கும். செயலுக்கான நேர்மறை பலன் என்பது பணம், புகழ், அங்கீகாரம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு சில இடங்களில் நீங்கள் செய்யும் செயலுக்கான பலன் குறைவாகக் கிடைக்கலாம். ஆனால் நீங்களே எதிர்பார்க்காத வண்ணம் அதற்கான பலன் பெரிய அளவில் வேறொரு இடத்தில் இருந்து கிடைக்கும்.

இரண்டு நபர்கள் பணி செய்யும் விதத்தை சொல்கிறேன். பலாபலன்கள் எப்படி இருக்கின்றன என பாருங்கள்.

முதலாமானவர் எந்த செயலை செய்தாலும் யாருக்காக செய்கின்றோம் என்ற எண்ணத்தை மனதுக்குள் சுமக்க மாட்டார். அவர் ஒரு செயலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டால் யாருக்காக, எதற்காக, எப்படி, ஏன், என்ன ஆதாயம், எவ்வளவு பணம் வரும், எப்பேற்பட்ட புகழ் கிடைக்கும் என்பதையெல்லாம் யோசிப்பதில்லை. அந்த செயல் அவர் கைகளுக்கு வந்துவிட்டால் அதை உலகின் ஆகச் சிறந்த பணியாக பிறர் மதிக்கும் அளவுக்கு பூரணத்துவத்துடன் நிறைவு செய்வார். அவருக்கென ஒரு அடையாளம் அவருக்கே தெரியாமல் உருவாகிக்கொண்டே வரும். அந்த அடையாளமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவருக்கான விசிட்டிங் கார்ட்.

இரண்டாமானவர் சிறு துரும்பையும் நகர்த்தி வைக்கும் அளவுக்கு மிக எளிமையான வேலையாக இருந்தாலும் அதில் என்ன ஆதாயம் கிடைக்கும் என்றே பார்த்து கவனமாக செய்வார். பணம் அதிகம் கிடைத்தால் ஒரு மாதிரியாகவும், பணம் குறைவாகக் கொடுத்தால் வேறு மாதிரியும் செய்வார். ‘கொடுக்கும் பணத்துக்கு இது போதும்’ என்று அலட்சியமாக பதில் சொல்வார். இதனால் அவருடைய பணிகளில் அவரது அடையாளத்தை தொலைத்துவிடுவார். அது அவருக்கே தெரியாது.

முன்னவருக்கு கிடைக்கும் பணமும், புகழும், அங்கீகாரமும் அவர் எடுத்துக்கொண்ட ஒரு செயலில் குறைவாகவே கிடைத்தாலும், அவருடைய அடையாளத்துடன் அவர் செய்த பணியைப் பார்ப்பவர்கள், அதனால் பலன் அடைந்தவர்கள் அவருடைய செயல்திறனை வியந்து அவர்களும் தங்கள் தேவைக்காக அணுகுவார்கள். ஆக, அவருடைய செயல் நேர்த்தி எனும் அடையாளம் அவரை வாழ்க்கையில் மென்மேலும் நகர்த்திக்கொண்டே செல்லும்.

இரண்டாமானவர், ஆளுக்குத் தகுந்தாற்போல் செயல்களில் நேர்த்தியை காண்பிப்பதால் பலரின் பார்வையில் அவரது நேர்த்தியான பணிகள் கண்களில் படாமல் கண்ணாமூச்சி ஆட்டம் போடும். நேர்த்தியில்லாமல் ஏனோதானோவென்று செய்த பணிகள் பளிச்சென கண்களில்பட்டு அவரது செயல்திறனை குறைவாக எடைபோட வைக்கும். அவருடைய செயல்திறனே அவ்வளவுதான் என்ற எண்ணத்தை பதிய வைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குறைவாகவே இருக்கும். இருந்த இடத்திலேயே இருப்பதைப் போல இருக்கும் அவரது வளர்ச்சி.

இதுதான் நேரடியாக கிடைக்கும் ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஒரு பணியை செய்வதற்கும், ஆதாயம் எப்பேற்பட்டதாக இருந்தாலும் நாம் செய்கின்ற பணி நம் செயல்திறனுக்கான அடையாளம் என்ற எண்ணத்துடன் செயல்படுவதற்குமான ஒரே வித்தியாசம்.

சுருங்கச் சொன்னால், சமைக்கத் தெரியாதவர்கள் சமைக்கக் கற்றுக்கொள்வதற்கு எத்தனை பிரயத்தனப்பட வேண்டுமோ அத்தனை பிரயத்தனப்பட வேண்டும் சமைக்கத் தெரிந்தவர்கள் சுமாராக சமைப்பதற்கும்.

ஆம். நேர்த்தியாக ஆத்மார்த்தமாகப் பணி செய்யத் தெரிந்த ஒருவரால் தான் எடுத்துக்கொண்ட பணியை சுமையாகக் கருதி ஏனோ தானோவென்று செய்யவே முடியாது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அவர் அந்தப் பணியை செய்ய ஒத்துக்கொள்ளவே மாட்டார். இதுவும் வெற்றியாளர்களின் ஒரு முக்கியப் பண்பாகும்.

நீங்கள் எந்தப் பிரிவினர் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon