ஜம்முனு வாழ காம்கேரின் OTP-117: பெருமுயற்சிகள் செய்து  ஓட ஓட விரட்டுவோம்!

பதிவு எண்: 848 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 117
ஏப்ரல் 27, 2021

பிரமாண்டமாக சிந்தித்து, பெருமுயற்சிகள் செய்து  ஓட ஓட விரட்டுவோம்!

நல்ல விஷயங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவை விட கெட்ட விஷயங்களுக்கு நம்மால் எளிதில் வெகு விரைவில் பழக்கமாகிவிட முடியும்.

கெட்ட விஷயங்கள் என்பது புகை, மது போன்ற விஷயங்கள் மட்டும் அல்ல. நம்மைப் பற்றிய கழிவிரக்கம், பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என சதா ஆராய்ந்துகொண்டே இருப்பது. பிறரைப் பற்றி அவர் அனுமதி இன்றை அவர் இல்லாத நேரங்களில் புறம் பேசுவது. ஒருவரின் செயல்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டே இருந்து அதை சம்மந்தப்படவரிடம் ‘நீங்கள் அன்று இதை செய்தீர்களே’ என என்னவோ அப்படி கவனிப்பது தன் வீரதீர செயல்போல கருதி பெருமையாக எடுத்துரைப்பது இவை எல்லாம்கூட கெட்ட விஷயங்கள் என்ற பிரிவில்தான் வரும். உடல் ஆரோக்கியத்துக்கும், மன நலத்துக்கும் கேடு விளைவிக்கும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவை கெட்ட விஷயங்கள் தானே?

தினமும் அரை மணி நேரம் நடைப் பயிற்சி செய்ய வேண்டும் என நினைத்தால் அதை நீங்கள் சிரமேற்கொண்டு செயல்படுத்த மாதக்கணக்கில்கூட ஆகலாம். ஆனால் ‘ஐயோ… எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்கிறதோ?’ என கழிவிரக்கத்தால் சதா உழலும் பழக்கம் உங்களிடம் எப்போது ஒட்டிக்கொண்டது என உன்னிப்பாக உங்களையே நீங்கள் கவனியுங்கள். உங்களுக்கே சரியாகத் தெரியாது. உங்கள் அனுமதி இன்று உங்களுக்குள் புகுந்துவிட்ட ஒரு தீய பழக்கம் அது.

சிறு குழந்தையாக இருக்கும்போது முதன் முதலில் நீங்கள் கேட்ட ஐஸ்க்ரீம் இப்போது ஸ்டாக் இல்லை என கடைக்காரர் சொன்னதில் இருந்து ஆரம்பித்து, கல்லூரியில் நீங்கள் விரும்பிய கோர்ஸ் கிடைக்காததில் தொடர்ந்து, தோல்வி அடைந்த உங்கள் முதல் காதல், ஆண் குழந்தை வேண்டும் என நினைத்த உங்களுக்கு இரண்டுமே பெண் குழந்தைகளானது என உங்கள் கழிவிரக்கத்துக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். ஆனால் எப்போதில் இருந்து அந்தப் பழக்கம் உங்களிடம் ஒட்டிக்கொண்டது என உங்களால் சரியாக சொல்ல முடியாது.

‘எத்தனை நாட்களாய் சிகரெட் பிடிக்கிறீர்கள்?’ என உங்களிடம் யாரேனும் கேட்டால் சரியாக சொல்ல முடியாது. பெரும்பாலும் பள்ளி நாட்களில் இருந்து என பொதுவான ஒரு பதிலையே சொல்ல முடியும்.

ஆனால் நடைபயிற்சியை எத்தனை நாட்களாய் செய்கிறீர்கள் என உங்களால் ‘இத்தனாம் தேதி, இன்ன கிழமையில் சுபயோக சுப தினத்தில் ஆரம்பித்தேன்’ என துல்லியமாக தேதி கிழமையுடன் சரியாக சொல்லிவிட முடியும். காரணம், அது உங்கள் அனுமதியுடன் நீங்களே பெருமுயற்சிகள் செய்து உங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட பழக்கம்.

நல்ல விஷயங்கள் அப்படித்தான் நாம் முயற்சி செய்தால் மட்டுமே அவை நம் இயல்பாகும். தீய விஷயங்கள் அப்படி அல்ல. நம் அனுமதி இன்றி  ‘எப்போதடா நாம் அசறுவோம்’ என காத்திருந்து நமக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கும்.

நல்ல விஷயங்களை மிகவும் பிரயத்தனப்பட்டு உள்ளே கொண்டுவர வேண்டும். கெட்ட விஷயங்களை அதைவிட அதிகப் பிரயத்தனப்பட்டு வெளியே அனுப்ப வேண்டி இருக்கும். இதுதான் நல்ல விஷயத்துக்கும் கெட்ட விஷயத்துக்குமான வித்தியாசம்.

பிரமாண்டமாக சிந்தித்து, பெருமுயற்சிகள் செய்து நல்ல விஷயங்களை நமக்குள் கொண்டுவருவோம், அதே வேகத்தில் கெட்ட விஷயங்களை ஓட ஓட விரட்டுவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon