ஜம்முனு வாழ காம்கேரின் OTP-127: நம் பாதுகாப்பு ‘நமது’ பாதுகாப்பு மட்டுமல்ல! (Sanjigai108.com)

பதிவு எண்: 858 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 127
மே 7, 2021

நம் பாதுகாப்பு ‘நமது’ பாதுகாப்பு மட்டுமல்ல, பேரண்டத்தின் பாதுகாப்பு!

15 நாட்கள் முன்பு எங்கள் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம். 1000 பேருக்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கொரோனா காலம் கொடுத்துள்ள நெருக்கடியால் நூறு பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார்கள். அதில் நாங்களும் ஒருவர்.

ஆனால் நாங்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையை உறுதியாக வைத்துள்ளதால், அவர்களுக்கு போன் செய்து பத்திரிகை கிடைத்த விவரத்தை சொல்லிவிட்டு திருமணம் குறித்து விசாரித்து சில நிமிடங்கள் மனம் விட்டு பேசினோம். குறிப்பாக அந்த மணமகனின் அப்பாவும் எங்கள் அப்பா அம்மா பணியில் இருந்த தொலைபேசி துறை என்பதால் அவர்களுக்கு எங்கள் மேல் கூடுதல் நெருக்கம்.

‘தவறாக நினைக்க வேண்டாம். எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்ல’ என்பதையும் சொன்னோம்.

அவர்களும் புரிந்துகொண்டு ‘பரவாயில்லை. உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அன்புடன் சொன்னார்கள்.

இதோ திருமணம் முடிந்து 15 நாட்கள்கூட பூர்த்தியாக நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்  கொரோனா பாசிட்டிவ், புதுமண தம்பதி உட்பட.

அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் சிகிச்சைப் பெற்று வீடு திரும்ப மணமகனின் தந்தைக்கு மட்டும் மூச்சுத் திணறல் அதிகரிக்க தனியார் மருத்துவமனைக்கு அலைந்திருக்கிறார்கள். எங்குமே இடம் இல்லை. கடைசியில் உயிரை காப்பாற்றிக்கொள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அங்கு கூட்டமோ கூட்டம். அந்த நெரிசல் அவருக்கு மன அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க கெஞ்சிக் கூத்தாடி வெளியில்வர கேட்டிருக்கிறார்கள். எப்படியோ அனுமதி பெற்று தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதே மயங்கி சரிந்திருக்கிறார். மீண்டும் முன்பு சேர்த்திருந்த அதே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் உடலை வீட்டுக்கு அனுப்ப இயலாது. எந்த இடத்தில் அவரது உடலை தகணம் செய்ய இடம் கிடைக்கிறதோ அந்த இடத்துக்கு அனுப்பி விடுவோம். தகவல் கொடுப்போம். ஓரிருவருக்கு மட்டும் தூரத்தில் நின்று பார்க்க அனுமதி என்றிருக்கிறார்கள்.

காலக்கொடுமையை பாருங்கள். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு நினைத்தபடி சென்று வந்துகொண்டிருந்த நாம், இறந்த உடலாக மாறியபிறகு தகணம் எங்கு நடைபெறும் என்பதைக்கூட நம் குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்ய முடியாத கொடூரமான சூழல்.

உலகம் இப்படி சென்றுகொண்டிருக்க எங்கள் அப்பார்ட்மெண்ட் வாட்ச்வுமன் (எங்கள் குடியிருப்பில் பெண்) வாயில் மாஸ்க் போடுவதில்லை. எங்கள் குடியிருப்பில் நாங்கள் மட்டுமே அவர்களுக்கு மாஸ்க் போடுங்கள் என சொல்லிக்கொண்டே இருப்பதால் எங்களைக் கண்டால் பிடிப்பதில்லை. எங்கள் தலையைப் பார்த்தால் மாஸ்க்கை எடுத்து மாட்டிக்கொள்வார். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்… எப்போதுமே மாஸ்க் போடுங்கள்…’ என்றால் ‘நான் எங்கே வெளிய போகிறேன். இங்கேயேதானே உட்கார்ந்திருக்கிறேன்’ என அறியாமையான பதிலை சொல்கிறார். அவருக்கு பாடம் எடுத்து எடுத்து எங்களுக்கும் சலித்துப் போய்விட்டது.

கொரோனா காலத்தில் நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை சொல்கிறேன்.

நாங்கள் மாஸ்க் அணிந்துகொண்ட பிறகே அழைப்பு மணி அடித்தால்கூட வீட்டுக்கதவை  திறக்கிறோம்.

கைகளுக்கு கிளவுஸ் அணியாமல் தபால், கொரியர் இவற்றைத் தொடுவதில்லை. இப்போதெல்லாம் கொரியரில் கூட அவர்கள் நம் பெயரை கேட்டுக்கொண்டு அவர்களே நம் பெயரை  ஸ்லிப்பில் குறித்துக்கொள்கிறார்கள்.  கையெழுத்துக்குக்கூட அந்த காகிதத்தை நாம் தொட வேண்டியதில்லை. அப்படியே தொட வேண்டிய அவசியம் வந்தாலும் கிளவுஸ் அணியாமல் தொடுவதில்லை.

வாரம் ஒருமுறை காய்கறிகள், பால் வாங்கி ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்கிறோம்.

தினமும் நெல்லிக்காய், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை பழச்சாறு, மஞ்சள், ஓமம், சீரகம், கருஞ்சீரகம், மிளகு, சுக்கு, திப்பிலி, கருவேப்பிலை என நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை சேர்த்துக்கொள்கிறோம்.

பத்திரிகைக் கொடுக்க யாரேனும் வருகிறேன் என சொன்னாலும் அனுமதிப்பதில்லை. வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்லிவிடுகிறோம்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஒருவருடத்துக்கும் மேலாகிறது. இதுவரை எங்கள் உறவினர்கள், நண்பர்கள் வட்டத்திலேயே 10 நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும் ஆன்லைனில் மொய் எடுதிவிட்டு, போனில் பேசியும், வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் வழியாகவும் வாழ்த்துகளைச் சொல்லி ஒதுங்கியே இருக்கிறோம்.

கொரோனாவின் முதல் வெர்ஷனின் போது ஆர்சனிகா ஆல்பம் என்ற ஹோமியோபதி மாத்திரையை சாப்பிட்டு வந்தோம். இப்போதும் தொடர்கிறோம்.

இப்போது கூடுதலாக, ஆஸ்பிடோஸ்பெர்மா  (Aspidosperma Q) என்ற ஹோமியோ மருந்தை வாங்கி வைத்துள்ளோம். ஆக்சிஜன் லெவல் குறைந்து, உடனடியாக ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு முதல் உதவியாக இந்த மருந்தை 20 சொட்டுகள் 1 டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் ஆக்சிஜன் லெவல் அதிகரித்து இயல்புக்கு திரும்புவதாக சொல்கிறார்கள். மருத்துவ மனைக்கு செல்லும்வரையோ அல்லது ஆக்சிஜன் கிடைக்கும்வரையோ பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற இந்த மருந்து உதவுகிறது. (உங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்துங்கள்)

தினமும் 1 மணி நேரம் நடைப்பயிற்சி. 10 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி.

இத்துடன் வேக்சினேஷனும் எடுத்துக்கொண்டுள்ளோம்.

பிபி பரிசோதனை செய்யும் சாதனம், சர்க்கரை பரிசோதிக்கும் சாதனம், தர்மாமீட்டர் இவற்றுடன் ஆக்ஸிமீட்டரும் சேர்ந்துகொண்டுள்ளது எங்கள் வீட்டு முதலுதவி பெட்டியில்.

நிறுவனத்துக்கு நான் மட்டுமே தினமும் சென்று சில மணி நேரங்கள் அங்கேயே அமர்ந்து வேலை செய்துவிட்டு பொறியாளர்களுடன் ஜூம் மீட்டிங்கில் ப்ராஜெக்ட்டுகளை அப்டேட் செய்துவிட்டு திரும்புகிறேன். இந்த வழக்கம் மிகவும் வசதியாகவே உள்ளது. இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி என தெரியவில்லை. ஆனால் எங்கள் நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யும் இந்த முறைக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள்.

குறிப்பாக தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதில்லை. பொதிகை செய்திகளை மட்டும் பார்க்கிறோம்.

நேற்று இந்தப் பட்டியலில் மிக முக்கியமான ஒன்றையும் சேர்த்துக்கொண்டோம்.

எங்கள் அப்பா அம்மா பணி செய்த பி.எஸ்.என்.எல் குழுமத்தில் ஓய்வு பெற்றவர்களுக்காக ஒரு குரூப் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அதில் பென்ஷன் சம்மந்தப்பட்ட செய்திகளும் பிறந்த நாள் வாழ்த்துகளும் அப்டேட் செய்வார்கள். எப்போதேனும் இறப்பு செய்திகள் வரும். சமீபமாக ஒரு நாளைக்கு இரண்டு மூன்று என்று இறப்பு செய்திகள் வர ஆரம்பித்துள்ளது. இதனால் அப்பா கொஞ்சம் இயல்பு நிலையில் இல்லாமல் தவிக்கிறார். அதிலும் நேற்று 4 இறப்பு செய்திகள். அதில் மூன்று கொரோனாவினால்.

உடனடியாக நான் அப்பாவிடம் அந்த குரூப்பில் இருந்து வெளிவந்துவிடச் சொன்னேன். இதுபோன்ற செய்திகள் எதிர்மறை சிந்தனைகளை நம்மையும் அறியாமல் நமக்குள் செலுத்துகிறது.

கொரோனா கால பாதுகாப்பு செயல்களுக்கான பட்டியலில் அண்மையில் சேர்த்திருக்கும் மிக முக்கியமான விஷயம் இதுவே. இந்தப் பட்டியலில் இன்னும் என்னெவெல்லாம் சேர்க்க வேண்டி வருமோ தெரியவில்லை. காலம்தான் நிர்ணயிக்கும்.

யார் என்ன நினைத்தால் என்ன? நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க முடியும்.

நம் பாதுகாப்பு ‘நமது’ பாதுக்காப்பு மட்டுமல்ல, இந்த பேரண்டத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு. கவனம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon