ஜம்முனு வாழ காம்கேரின் OTP-126: சாப்பாடு எனும் மேஜிக்!

பதிவு எண்: 857 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 126
மே 6, 2021

சாப்பாடு எனும் மேஜிக்!

சாப்பாடு போடுவது ஒரு தர்மம் மட்டுமல்ல. அது ஒரு கலை. வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் சிறந்தது. தலைவாழை இலையில் சாப்பாடு போட்டால் எதிரியின் வீட்டுக்குக் கூட விருந்துக்குச் செல்லலாம். ஏனெனில் விருந்தில் விஷத்தன்மை பொருந்திய உணவுகள் இருந்தால் வாழை இலையின் மேல்பக்கம் ஒருவித கலரில் நீர் சுரந்து வழிந்து ஓடிவிடும் என்கிறார்கள்.

சாப்பாடு போடுவது தர்மம் என்றால், வாழை இலையில் சாப்பாடு போடுவதும் ஒரு கலை.

வாழை இலையில் எப்படி சாப்பாடு பரிமாறுவது? என்ற வீடியோவை தயாரிக்கும்போது அதற்கு முழுக்க முழுக்க வழிகாட்டியவர் என் அப்பா. வாழை இலையை எப்படி போட வேண்டும் என்பதில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றாக ரசித்து ரசித்து சொல்லிக்கொண்டே வந்தார். இதெல்லாம் எங்களுக்குப் புதிது கிடையாது.

வீட்டில் பிறந்தநாள், திருமண நாள், பூஜை, ஹோமம் என சொல்லி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் விருந்துக்கு அழைப்போம். பெரும்பாலும் அப்பா அம்மா இருவரின் சமையல்தான். இடையில் நானும் அவர்களுடன் கலந்துகொள்வேன்.

அப்பாவுக்கு சமைப்பதில் எத்தனை இஷ்டமோ அத்தனை இஷ்டம் சாப்பாடு பரிமாறுவது. விருந்துக்கு யாரையேனும் அழைத்திருந்தால் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு கடைசியில்தான் சாப்பிடுவார்.

வெறும் வயிற்றில் இருக்க வேண்டாம், கொஞ்சம் பாயசம் வடையாவது எடுத்துக்கொள்ளச் சொன்னாலும் சாப்பிடவே மாட்டார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த விஷயத்தில் கொஞ்சம் வருத்தம் உண்டாகும். காரசாரமாக விவாதமும் நடக்கும்.

அப்பாவுக்கு எல்லாவற்றையும் நிறைய செய்ய வேண்டும். நான்கு பேருக்கு விருந்து என்றால் ஆறு பேருக்கு இருக்கும் அளவுக்கு தயார் செய்ய வேண்டும் என்பார். அவர்கள் விரும்பி கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன செய்வது, எனவே கூடுதலாக இருந்தால் வைத்திருந்தாவது சாப்பிடலாம். சாப்பாடு குறைவாக இருப்பதால், சாப்பிடுபவர்கள் ஏமாற்றமடையக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.

அப்பா சொல்வதற்கு ஏற்ப விருந்தினர்களும் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். எங்கள் வீட்டு விருந்துக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் எங்கள் குடும்பத்தில்.

ஆசையாக பார்த்துப் பார்த்துப் பரிமாறுவார். அத்துடன் பரிமாறும் வழிமுறையில் கொஞ்சமும் மாற்றமில்லாமல் பரிமாற வேண்டும் என்பது அப்பாவின் தீவிர கொள்கை. பாயசம் முதல் உப்பு வரை ஒவ்வொன்றாக அந்தந்த இடத்தில் பரிமாற வேண்டும் என்பார். முதலில் விருந்தினர்களுக்கு தானே தன் கைகளால் இலையில் பாயசம் பரிமாறி விருந்தை தொடங்கி வைப்பார். பின்னர் அம்மாவும் நானும் பரிமாறுவதில் கலந்துகொள்வோம். பெரும்பாலும் விருந்தினர்களுடன் என்னையும் அமரச் செய்து சாப்பிடச் சொல்வார் அப்பா. அவர்களுக்கு கம்பெனி கொடுத்தது போலவும் இருக்கும்.  ‘குழந்தைக்கும் (அப்பாவைப் பொறுத்தவரை நான் இன்னும் குழந்தையே) பசி தாங்காது, பாவம்’ என்ற எண்ணத்தையும் சேர்த்துகொள்வார்.

இப்படி இருந்தவரை கொரோனா காலம் முடக்கித்தான் போட்டுவிட்டது. கடந்த மார்ச்சில் இருந்து  கிட்டத்தட்ட ஒரு வருடமாக யாரையும் விருந்துக்கு அழைக்க முடியவில்லை. யார் வீட்டுக்கும் செல்ல முடியவில்லை. கையையும் காலையும் கட்டிப் போட்டாற்போல் இருக்கிறார். பாதியாக இளைத்தும் போய்விட்டார்.

சாப்பாடு போடுவதை ஒரு தவம்போல செய்வார்கள் அப்பாவும் அம்மாவும். அவர்களைப் பொறுத்தவரை  சாப்பாடு என்பது சாதமும், குழம்பும், ரசமும் மட்டுமல்ல.

சாப்பாடு என்பது வெறும் உணவு மட்டுமல்ல!
வயிற்றை நிரப்பும் விஷயமும் அல்ல!
பகையை முறிக்கும் ஆற்றல் பெற்றது!
நட்பை வளர்க்கும் சக்தி வாய்ந்தது!
உறவுமுறைகளை பின்னிப் பிணைக்கும் பாலம்!
தலைமுறைகளை இணைக்கும் உறவுச் சங்கிலி!
தலைமுறை இடைவெளியை குறைக்கும் மேஜிக்!

கொஞ்ச நாட்களாய் அந்த மேஜிக்கை செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் அப்பா. விரைவில் அந்த மேஜிக் செய்வதற்காகவாவது கொரோனா இந்த உலகைவிட்டு ஓட வேண்டும் என பிராத்தித்துக் கொண்டு அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும் என் வாழ்த்துகிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon