ஜம்முனு வாழ காம்கேரின் OTP-128: நீங்கள் பாக்கியசாலியா?

பதிவு எண்: 859 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 128
மே 8, 2021

நீங்கள் பாக்கியசாலியா?

இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அதை தெரிந்து வைத்துக்கொண்டே விடை தெரியாததுபோல பலவிதமான ஆசைகளுக்கு அடிமையாகி அல்லல்படுகிறோம் என்பதே உண்மை.

எனக்குத் தெரிந்த ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அந்த வீட்டின் மூத்த பெண்மணி எப்போதேனும் சந்திக்கும் நேரங்களில் அது குறித்து மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். ஒருநாள் அவர் முகம் முழுக்க மலர்ச்சியுடன் தன் மருமகள் கர்ப்பம் தரித்திருப்பதாக சொல்லி இனிப்பு வழங்கினார்.

குழந்தை பிறந்த பிறகு அவரை சந்திக்க நேர்ந்தது. மிகவும் அலுப்பாக இருந்தார். ‘எல்லோரும் நலம் தானே?’ என்று கேட்டேன்.

‘ம்… என் மருமகளுக்கு இரட்டைக் குழந்தை பிறந்திருக்கு…’

‘அட இரட்டைக் குழந்தையா? அப்படிப் போடுங்க… குழந்தை இல்லை இல்லைன்னு வருத்தப்பட்டீங்க… இப்போ பாருங்க… கடவுளின் கருணையை…’

‘அட நீங்க வேற… நானே எப்படிடா வளர்க்கப் போகிறோம் என்று கவலைல இருக்கேன்… ஒரு குழந்தைகயை பார்த்துக்கொள்வதே கஷ்டம். இப்போ ஒன்னுக்கு ரெண்டா இரட்டை பிள்ளைகள். அதுவும் ஆண் பிள்ளைகள். சமாளிப்பது எப்படின்னு ஒரே வருத்தமா இருக்கு…’

தன் குடும்பத்துக்கு அடுத்த வாரிசு இல்லையே என்று வருந்திக்கொண்டிருந்தவருக்கு அவர் எதிர்பார்த்ததையும் மீறிய சந்தோஷம் கிடைத்தாலும் அதை கொண்டாடாமல் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியையே அலட்சியப்படுத்தும் விதமாக அதையே சலிப்புடன் எதிர்நோக்குகிறாரே?

இப்படித்தான் நம்மில் பலர் ‘நமக்கு என்ன வேண்டும்?’ என்று எதிர்பார்க்கத் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் நமக்குக் கிடைப்பவை அதைவிட உயரிய பொக்கிஷமாகவே இருந்தாலும் அதைக் கொண்டாடாமல் துக்கப்பட்டுக்கொண்டிருப்போம்.

கேட்டது கிடைப்பதில் ஆச்சர்யமில்லை, கேட்டதைவிட மிக சிறப்பாக கிடைப்பதுதான் ஆச்சர்யம். அதை பொக்கிஷமாக்கிக்கொள்வதும், தூர எறிவதும் அவரவர் சாமர்த்தியம்.

விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சி…
கிடைக்காவிட்டால் துக்கம்…
விரும்பியதற்கு மாறாக
கொஞ்சம் அதிகப்படியாகக் கிடைத்தாலும் சலிப்பு!
என்னதான் வேண்டும் மனிதனுக்கு?
அவனுக்கு
அவன் நினைத்தது
நினைத்தபடி நடக்க வேண்டும்…
இல்லை என்றால்
சுயபச்சாதாபம், கழிவிறக்கம்,
பொறாமை இத்யாதி இத்யாதி!
மனித மனம் விசித்திரமானது,
வென்றெடுப்பவர்கள் பாக்கியசாலிகள்!

இப்போது சொல்லுங்கள் நீங்கள் பாக்கியசாலியா? என்ற என் கேள்விக்கான பதிலை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon