பதிவு எண்: 860 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 129
மே 9, 2021
Swap செய்வோம், கொண்டாடுவோம்!
எங்கள் தொழில்நுட்பத்தில்
‘Swapping Logic’ என்றுண்டு
இரண்டு மதிப்புகளை
இடம் மாற்றிப் பொருத்துவதற்கு உதவும் லாஜிக்!
உதாரணம்:
X=10, Y=20 என்பதை X=20, Y=10 என பொருத்துவது!
ஆனால் இப்படி நேரடியாக பொருத்திவிட முடியாது. அப்படிப் பொருத்தினால் ஒன்றின் மதிப்பு மற்றொன்றில் ஏறி இரண்டின் மதிப்பும் ஒரே மதிப்பாகிவிடும். அதற்கென்றே ஒரு லாஜிக் உண்டு. அது இங்கு அவசியம் இல்லை. ஆனல் அதன் பெயரை நீங்களும் தெரிந்துகொள்ளலாம். அதன் பெயர் Swap.
இயல்பாக என் அப்பாவின் உருவத்தில் அம்மாவையும்
அம்மாவின் உருவத்தில் அப்பாவையும் என்னால் மிக எளிதாக Swap செய்து பார்த்துவிட முடிகிறது
இன்றல்ல
நேற்றல்ல,
என் நினைவு தெரிந்த நாளாய்!
எப்படி சாத்தியமானது?
அம்மாவிடம் இருந்து
வாசிப்பின் அவசியத்தையும்
அப்பாவிடம் இருந்து
சமையல் செய்வதன் நுணுக்கங்களையும்
கற்றுக்கொண்டேன்!
அம்மாவிடம் இருந்து
இயற்கை உணவின் அவசியத்தையும்
அப்பாவிடம் இருந்து
எழுதும்போதும் வார்த்தைகள்
பிரயோகத்தில் கவனமாக இருப்பதையும்
கற்றுக்கொண்டேன்!
அம்மாவிடம் இருந்து
வாழ்க்கையின் எதார்த்தத்தை
இயல்பாய் கடப்பதையும்
அப்பாவிடம் இருந்து
அன்பின் அஞ்ஞானத்தையும்
கற்றுக்கொண்டேன்!
அம்மாவிடம் இருந்து
இயற்கையோடு இயைந்த
வாழ்க்கை முறையையும்
அப்பாவிடம் இருந்து
நமக்குப் பிடித்தாற்போல
நம் வாழ்க்கைச் சூழலை
அமைத்துக்கொள்ளும்
நுண்ணியலையும் கற்றுக்கொண்டேன்!
அம்மாவிடம் இருந்து
அசால்ட்டான தைரியத்தையும்
அப்பாவிடம் இருந்து
விவேகமான வீரத்தையும்
கற்றுக்கொண்டேன்!
அம்மா புத்தகங்கள் வாயிலாக
புற உலகைக் காட்டினார்
அப்பா அன்பின் வாயிலாக
அகத்தை உணரச் செய்தார்!
அம்மா
எது வந்தாலும் பார்த்துக்கலாம்,
ஜமாய் என்பார்
அப்பா
எதிலும் கவனமாய் இரு
எந்த நிமிடமும் விழிப்புடன் இரு என்பார்!
அப்பா, அம்மா
வெறும் உறவு முறைகளின் பெயர் அல்ல!
நம்முடன் பின்னிப் பிணைந்துவிட்ட
உணர்வின் சங்கமம்!
என்னைப் பொருத்தவரை
நான் இயங்குவது
என் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமல்ல
என் பெற்றோராலும்தான்!
நம் அனைவருக்கும்
இயற்கையும் இறைவனும்
கொடுத்திருக்கும் புதையல்
நம் அப்பா, அம்மா!
பத்திரப்படுத்திக்கொள்வோம்
தலைமுறைகள் பல தாண்டியும்
நினைக்க வைப்போம்!
அம்மாவிடம்
இயல்பான அப்பாக்களின் ஆளுமையையும்
அப்பாவிடம்
இயல்பான அம்மாக்களின் அஞ்ஞானத்தையும்
பார்ப்பதால்
எனக்கு
அன்னையர் தினத்துக்கும்,
தந்தையர் தினத்துக்கும்
இருவரையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை!
தாயுமானவராய் அப்பா
தந்தையுமானவராய் அம்மா
அன்னையர் தினம் என்றாலும்
தந்தையர் தினம் என்றாலும்
இருவருக்கும் சேர்த்தே வாழ்த்து சொல்வேன்!
My Dear AppAmma, Happy Happy Mother’s Day!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#ஹலோ_காம்கேர் #Hello_Compcare