பதிவு எண்: 861 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 130
மே 10, 2021
Long ஜம்ப்பும், Back ஜம்ப்பும்!
‘லாங் ஜம்ப்’ கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன ‘பேக் ஜம்ப்’?
‘பேக் ஜம்ப்’ என்றால் ‘பின் வாங்குதல்’ என நினைத்துவிடாதீர்கள். இந்த வார்த்தைப் பதத்தை நான் பயன்படுத்தப் போகும் முறையே வேறு. கவனமாகப் படியுங்கள்.
கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட பதில்களில் இருந்து கேள்விகளை எழுப்புவதும் ஒரு கலையே.
உதாரணத்துக்கு நம் ஆசைகள், கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, அவற்றை நிறைவேற்றிக்கொள்ள என்ன தேவை என்பதை நிர்ணயம் செய்துகொண்டு அதனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப உழைக்கும்போது நம் ஆசைகள் / கனவுகள் ஈடேறக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் ஏற்படும்.
இதில் நம் கனவுகள் நனவாக நேரடியாக உழைப்பதும் அதனை மெறுகேற்றிக்கொள்வதும் இரண்டாம் கட்டமே. முதல் கட்டத்தில் கனவுகள் ஜெயிப்பதற்கான சாத்தியக்கூறுகளுக்காக உழைப்பது.
பத்து அடி ‘லாங்க் ஜம்ப்’ செய்துவிட்டு பின்னர் ஐந்தடி ‘பேக் ஜம்ப்’ செய்து பின்னால் வந்து நின்று நிதானமாக வாழ்வதும் ஒரு வகை யுக்தியே.
ஒரு பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்கிறார்.
‘எதிர்காலத்தில் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள்?’ இதுதான் கேள்வி.
ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள்.
‘டாக்டர் ஆகணும்’
‘இன்ஜினியர் ஆகணும்’
‘புரொஃபசர் ஆகணும்’
‘பிசினஸ் மேன் ஆகணும்’
இப்படி ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொன்றாகச் சொல்ல ஒரு மாணவன் மட்டும் ‘பணக்காரன் ஆகணும்’ என்று சொல்ல ஆசிரியர் ஆச்சர்யமாக அவனைப் பார்த்து ‘ஏன் இப்படி ஆசைப்படுகிறாய், பணம்தான் வாழ்க்கை என நினைத்துக்கொண்டிருக்கிறாயா?’ என கேட்கிறார்.
அதற்கு அந்த மாணவன், ‘ஆமாம் சார், நான் எதிர்காலத்தில் ஒரு காப்பகம் தொடங்கவே விரும்புகிறேன். அதில் அப்பா அம்மா இல்லாத குழந்தைகளையும், குழந்தைகள் இல்லாத அப்பா அம்மாக்களையும் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய அம்மா அதற்கெல்லாம் நிறைய பணம் வேண்டும் அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் என்று சொல்கிறார். அப்போ பணக்காரன் ஆனால்தானே என்னால் காப்பகம் நடத்த முடியும். அதனால்தான் நான் எதிர்காலத்தில் பணக்காரன் ஆக ஆசைப்படுகிறேன்…’ என்று சொல்ல ஆசிரியர் வாயடைத்துப் போனார். மாணவனின் புத்திசாலித்தனத்தை நினைத்து வியந்தார்.
இந்த மாணவனுக்கு தனக்கு என்ன தேவை, அதனை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற இரண்டிலுமே தெளிவு இருக்கிறது. தன் முன் குவிந்து கிடக்கும் பதில்களில் இருந்து தனக்குப் பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் சூட்சும அறிவும் இருக்கிறது. நடக்குமா நடக்காதா என்பதெல்லாம் அடுத்த விஷயம்.
அவன் விருப்பப்படி பணக்காரனாக படிக்கத்தான் போகிறான், அதற்கேற்ப வேலைக்குச் செல்லத்தான் போகிறான் அல்லது சொந்தமாக தொழில் தொடங்கத்தான் போகிறான். சர்வ நிச்சயமாக பணமும் சம்பாதிக்கத்தான் போகிறான். எல்லாமே அவனது குறிக்கோளான காப்பகம் தொடங்குவது என்ற குறிக்கோளின் கீழேயே வந்துவிடும். அதை நோக்கியே அவனது பயணமும் அமையும்.
தனக்கு ‘இது’ வேண்டும் என்கின்ற பதிலிலும், அதை ‘அடைய’ என்ன செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியிலும் தெளிவு இருந்துவிட்டால் பெரும்பாலும் நம் ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள் தோற்றுப் போவதே இல்லை.
அதனால் கேள்விகளுக்கு பதில்களைத் தேடாமல், பதில்களுக்கு கேள்விகளைத் தேடுவோமே! இதுவும் ஒரு புது யுக்தித்தானே?
இப்படி ‘லாங் ஜம்ப்’ செய்துவிட்டு ‘பேக் ஜம்ப்’ எடுத்து வந்து வாழ்க்கையில் வேகமாக முன்னேறிச் செல்கையில் நடுநடுவில் நம் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டைகள் வரலாம். அசர வேண்டாம். கொஞ்சம் யோசித்தால் வழிகள் புலப்படும்.
சிறிய இடைவெளி உள்ள சாலையில் காரை ஓட்டிச் செல்கிறீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. ஆனால் நடுவில் ஒரு திருப்பத்தை தவற விட்டு விடுகிறீர்கள். என்ன செய்வீர்கள்? யு-ட்ரன் அடிக்க வேண்டும். குறுகிய சாலையில் அப்படியே யு-ட்ரன் அடிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ரிவர்ஸ் எடுத்து காருக்கு முன்னால் கொஞ்சம் இடம் கிடைத்ததும் இலாவகமாக யு-ட்ரன் செய்துவிட முடியும். அதையும் கவனமாகவே செய்ய வேண்டி இருக்கும்.
இப்படித்தான் நம் கனவுகளை நோக்கிய பயணத்தில் இடையில் சில நேரங்களில் ‘ரிவர்ஸ்’ எடுத்தும் ‘பேக் ஜம்ப்’ செய்ய வேண்டி இருக்கும்.
‘லாங் ஜம்ப்போ’, ‘பேக் ஜம்ப்போ’ எதுவாக இருந்தாலும் செய்யும் முயற்சிகளீல் நேர்மை இருந்தால் நிம்மதியான வாழ்க்கை நிச்சயம். அதுதான் உண்மையான வெற்றி!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#ஹலோ_காம்கேர் #Hello_Compcare