ஜம்முனு வாழ காம்கேரின் OTP-133: ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க!’

பதிவு எண்: 864 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 133
மே 13, 2021

‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க!’

ஒரு நாட்டில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த ஒரு குற்றவாளிக்கு வித்தியாசமான முறையில் மரண தண்டனை கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி அவரை பாம்பு கடிக்கச் செய்து மரணிக்க ஏற்பாடு செய்தனர்.

அந்த குற்றவாளியை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து கண்களை ஒரு துணியால் கட்டினர். கை கால்களை நாற்காலியுடன் இணைத்துக் கட்டினர். பின் பாம்பை அவன் கால்களுக்கு அருகில் விட அது அவன் கால்களில் இரண்டு மூன்று முறை கடித்துவிட்டு நகர்ந்தது.

அந்த குற்றவாளி வலியால் அலறித் துடித்தான். அவன் உடலை மருத்துவர் பரிசோதித்து இறந்துவிட்டான் என்பதை உறுதி செய்தனர்.

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?

அந்த குற்றவாளியை பாம்பு கடிக்கவே இல்லை. அவனை பாம்பு கடிக்க இருக்கிறது என்பதை அவனுக்கு முன்பே சொல்லி இருந்தனர். அதன்படி அவன் மனசு முழுவதும் பாம்பு பற்றிய பயமே.

அவன் கால்களுக்கு அருகே பாம்பு போல நீளமாக உருட்டப்பட்ட துணிச்சுருள். அதன் முனையில் சிறிய ஊக்கை சொருகி வைத்தனர். அந்தத் துணிச் சுருள் அவனுடைய கால்களில் மெல்ல ஏறும் வகையில், அதிகாரிகள் செயற்கையாக பாம்பு அவன் கால்களைச் சுற்றிக்கொண்டு ஏறுவதாக ஒரு சூழலை உருவாக்கினார்கள்.

அவன் அந்தத் துணிச் சுருள் அவன் கால்களில் பட ஆரம்பித்ததுமே அலற ஆரம்பித்தான். மெல்ல மெல்ல ஏற ஆரம்பிக்கும்போது அவனது அலறல் ஊரைக் கூட்டியது. அதிகாரிகள் துணிச்சுருளின் முனையில் இருந்த ஊக்கினால் இரண்டு முறை மென்மையாகவே அவன் கால்களில் குத்தினார்கள்.

அவ்வளவுதான் அவன் கத்தல் அடங்கியது. உயிரும்தான்.

இந்த நிகழ்வில் உள்ளதைப் போல நம் மனம்தான் நாம் வாழ்வதா அல்லது சாவதா என்பதை நிர்ணயம் செய்கிறது. மனமே நம்மை முழுமையாக ஆட்டிப் படைக்கிறது. ஒருவரது மனதை வீழ்த்திவிட்டால் அது அவரை உயிருடன் சமாதி வைத்துவிடுவதற்கு சமம். பிறர் நம் மனதை வீழ்த்துவதற்கு முன் நாம் நம் மனதை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வீழ்த்தி நேர்மறைக்குள் பொத்திப் பொத்திப் பாதுகாத்துவந்தால் யாராலும் எதையும் செய்ய முடியாது. நாம் அசைக்க முடியாத சக்தியாகிவிடுவோம். இது உறுதி.

எங்கள் பெரியப்பா ஹோமியோபதி கிளினிக் வைத்திருந்தார். ஹோமியோபதி மாத்திரைகள் குட்டிகுட்டியாய் ஜவ்வரிசி தித்திப்பாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். மருந்தை அதில் ஊற்றுவதற்குமுன் அவை வெறும் சர்க்கரை உருண்டைகளே. அதில் மருந்தை கலந்தவுடன் அவை மருத்துவ குணம் பெறுகின்றன.

இந்த மருத்துவப்படி நோயின் வீச்சுக்கும் மருந்துகளின் பவருக்கும் ஏற்ப சில மருந்துகளை ஒரு வாரத்துக்கு ஒரு நாளோ அல்லது 15 நாட்களுக்கு ஒருநாளோ சாப்பிட்டால் போதுமானது.

அந்த நிலையில் ஒரு நோயாளிக்கு மருந்தே கொடுக்காமல் மருந்து கலக்காத அந்த மாத்திரைகளை மற்ற நாட்களுக்குக் கொடுத்து  அதன் மூலம் நோயை சரி செய்வார்களாம்.

சிலருக்கு நோயே இருக்காது. மனதளவில் நோய் இருப்பதாக கற்பனையிலேயே மனதை வருத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு இத்தகைய ட்ரீட்மென்ட் நூறு சதவிகிதம் பொருந்தும்.

நாம் மருந்தை சாப்பிடுவதாக நமது மனம் நினைத்தாலே போதும் உடல் பல்வேறு நோய்களை தானே சரி செய்து கொள்ளும்.

இத்தனை சக்திவாய்ந்தது நமது மனம். மனதை ஆளும் சக்தி நம்மிடம்தான் உள்ளது.  நம் மனதை ஆளும் கடிவாளம் நம்மிடம் இருக்கும்வரை நம்மை நம்மால் ஆள முடியும். கடிவாளம் இடம் மாறி அடுத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டால் நம் கதி அதோகதியே.

‘மனசை விட்டுடாதே!’ என்று பெரும் சோகத்தில் இருப்பவர்களுக்கு நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். நம் மனம் நம் கட்டுக்குள் இருந்துவிட்டால், எத்தனை பெரிய சோகத்தையும் கடந்து வந்துவிட முடியும்.

ஆகவே, ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க!’

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 5 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari