ஜம்முனு வாழ காம்கேரின் OTP-134: Swap செய்வோம், கொண்டாடுவோம்!

பதிவு எண்: 865 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 134
மே 14, 2021

பேலியோவா, போலியோவா? தடுமாறும் வார்த்தைகள்!

வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்கும்போது அது நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அது குறித்த நம்பிக்கைகளையும் விதைத்துக்கொண்டே செல்லும்.

பொதுவாகவே நான் எழுதுவதற்கும், கேமிரா முன் பேசுவதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. எழுதும்போது நானும் நம் சிந்தனையும் மட்டுமே. மூன்றாவது நிபந்தனை எதுவுமே கிடையாது.

ஆனால், வீடியோவில் நம் உருவமும் முக்கியத்துவம் பெறுகிறது. நம் சிந்தனைகள் மட்டுமில்லாமல் நம் உருவரும் பிறர் பார்வைக்கு செல்வதால் அதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இது ஒன்றைத் தவிர நான் எழுதுவதற்கும் பேசுவதற்கும் வித்தியாசம் பெரிதாக எதுவும் தெரிவதில்லை.

வீட்டில் இயல்பாக தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு கூட இருப்போம். வெளியில் கிளம்பும்போது தலைவாரி, முகம் கழுவி, நல்லதாக உடை அணிந்து பளிச்செனதானே கிளம்புவோம். ஏனெனில் வீட்டில் நம் குடும்பத்தாருடன் மட்டுமே இயங்குகிறோம். பொதுவெளியில் பிறருடனும் சேர்ந்து செயல்பட வேண்டி இருக்கிறதல்லவா? அவர்களுடன் பேசுவதற்கும் நாம் சொல்வதை புரிய வைப்பதற்கும் நம்மிடம் இருந்து நேர்மறை எண்ணங்கள் வெளிப்படுவதற்கு நம் நேர்த்தியான உடையும் முக்கியம்.

என்னைப் பொருத்தவரை எழுதும்போது எப்படி வார்த்தைகள் வந்து கொட்டுகிறதோ அதுபோலவே வீடியோ முன்னும். இறை அருள்.

நாம் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு வருகிறேன். வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்கும்போது அது நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும் என்று சொன்னேன் அல்லவா?  சில தினங்கள் முன் அப்துல்கலாம் குறித்த ஒரு வீடியோவை தயார் செய்தேன். அதில் அவர் எடை குறைவான சாதனம் மூலம் ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்புவதற்காக நார்சத்து ஏற்றப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரித்த ஒரு சாதனத்தை கண்டுபிடித்து அதன் மூலம் ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றார் எனும் செய்தியோடு அதே பொருளால் போலியோவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காலில் பொருத்திக்கொண்டு நடப்பதற்கான உபகரணத்தை கண்டுபிடித்ததாக அவரின் அனுபவத்தை பகிர்ந்திருந்தேன்.

இதில் ‘போலியோ’ என்ற வார்த்தை வரும்போதெல்லாம் என் மனம் அதை  ‘பேலியோ’ என்று மாற்றியே என்னை சொல்ல வைத்தது. அந்த வார்த்தை வரும் வீடியோ பகுதியை மட்டும் மூன்று நான்கு ஷாட்டுகள் திரும்பத் திரும்ப எடுக்க வேண்டியதாக இருந்தது. பொதுவாக 1/2 மணி நேர கான்செப்ட்டைக் கூட ஒரே ஷாட்டில் பேசிவிடும் எனக்கு போலியோவும், பேலியோவும் மூன்று நான்கு ஷாட்டுகள் வரை எடுக்க வைத்துவிட்டது.

இத்தனைக்கும் நான் பேலியோ டயட்டில் எல்லாம் இல்லை. அது குறித்து விரிவாகவும் எதுவும் தெரியாது. மேலோட்டமாக பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாயிலாக கண்களில்படும் செய்திகள் மட்டுமே தெரியும். மேலோட்டமாக கண்களில் தானாகவே வந்துவிழும் தகவல்களுக்கே இத்தனை சக்தி என்றால், நாமாக வலுகட்டாயமாக திரும்பத் திரும்ப பேசுகின்ற விஷயங்கள் கவனிக்கும் விஷயங்கள் எந்த அளவுக்கு நம் மனதை ஆட்டுவிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எனவே பேசும் விஷயங்களில் மட்டுமில்லாமல் பார்க்கும் விஷயங்களிலும்  கேட்கும் விஷயங்களிலும் கவனமாக இருப்போம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 4 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon