ஜம்முனு வாழ காம்கேரின் OTP-132: சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்!


பதிவு எண்: 863 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 132
மே 12, 2021

சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்!

சந்தோஷம், கர்வம், மகிழ்ச்சி, ஆனந்தம் இவை எல்லாமே கிட்டத்தட்ட ஒரே பொருளை தந்தாலும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

சந்தோஷம் என்பது நாம் செய்யும் செயல்களுக்கு புற உலகில் இருந்து கிடைக்கும் உற்சாகத்தினால் நமக்கு கிடைப்பது.

கர்வம் என்பது அந்த சந்தோஷம் மிதமிஞ்சும்போது நமக்குள் உண்டாகும் ஓர் உணர்வு.

‘எப்பேற்பட்ட செயலை நீங்கள் செய்கிறீர்கள்…’ என பிறர் நம்மை பாராட்டும்போது கிடைக்கும் ‘சந்தோஷம்’, ‘ஆஹா, என்னால் மட்டுமே இதுபோல செய்ய முடிகிறது…’ என சந்தோஷம் தன் எல்லையைத் தாண்டினால் அதுவே கர்வம்.

மகிழ்ச்சி என்பது நாம் செய்யும் செயல்கள் நமக்குக் கொடுக்கும் திருப்தியான ஒரு மன நிறைவு.

ஆனந்தம் என்பது நாம் செய்யும் செயல்களால் பிறருக்கும் பயன் ஏற்பட்டு அவர்களும் மனம் மகிழும்போது நமக்குள் பரவும் ஓர் அற்புத உணர்வு.

தினந்தோறும் விடியற்காலையில் 3 மணிக்கு எழுந்து என் அன்றாடப் பணிகளைத் தொடங்குவதும், 6 மணிக்கு நேர்மறை கருத்துக்களை சமூக வலைதளங்களில் எழுதுவதும், பதிவிடுவதும் எனக்கு மன நிறைவாக உள்ளது. நாளின் தொடக்கத்தை நமக்குப் பிடித்த ஒரு செயலுடன் தொடங்கும் சூழல் வாய்க்கப்பெற்றதே வரம். இதுவே மகிழ்ச்சி.

நான் எழுதும் எழுத்துக்களினால் பிறர் வாழ்க்கையில் சின்னதாக ஒரு துளி மாற்றம் உண்டானால் நமக்குக் கிடைப்பது ஆனந்தம். பயனடைந்தவர்கள் தாங்கள் பயன்பெற்றதை பெரிய மனதுடன் மனம் திறந்து பகிர்ந்து பாராட்டும்போது எனக்குள் நிரம்பும் அற்புத உணர்வே பேரானந்தம்.

சந்தோஷம், கர்வம், மகிழ்ச்சி, ஆனந்தம் இவை அனைத்துமே நம்மை உற்சாகப்படுத்தும் தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலே.

என்ன, கர்வம்கூட சிறந்த உணர்வா? என நீங்கள் வியப்பது புரிகிறது.

ஆம். கர்வம் என்பது சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் ஏலக்காய் போல் அளவாக இருந்துவிட்டால் வாழ்க்கையே திகட்டத் திகட்ட சர்க்கரைப் பொங்கல்தான். ஏலக்காய் அதிகமாகிவிட்டால் சாப்பிடவே முடியாதபடி சர்க்கரைப் பொங்கலின் சுவையே மாறிவிடும்.

கர்வம் என்பது நாம் உழைக்கும் உழைப்பின் மீது இருக்கலாம். நம் உழைப்பு கொடுக்கும் உடல் சோர்விலும், பிசியாக பரபரப்பாக இருக்கும் நம் பணி சூழலிலும் இருக்கலாம். ‘நான் இடைவிடாது உழைக்கிறேன். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பணிகள் இருந்துகொண்டே இருக்கிறேன்’ என்பது பெருமிதம். அதை ஒரு சிட்டிகை அதிகமாக்கி கர்வமாக்கியும் கொள்ளலாம். தப்பில்லை.

அந்த கர்வம் நமக்குள் தன்னம்பிக்கையைக் கூட்டும். ஆனால்  ‘நான் மற்றவர்களைவிட எத்தனை அதிகமாக சம்பாதிக்கிறேன் பார்’,  ‘நான் எப்படி பிறரைவிட அதிகமாக சிறப்பாக செயல்படுகிறேன் பார்’,  ‘என்னால் மட்டுமே இதுபோன்ற செயல்பாடுகளையெல்லாம் செய்ய முடிகிறது பார்’ என்ற ‘தொனி’ கூடிவிட்டால் போச்சு. அந்த கர்வம் அழிவையே உண்டாக்கும். நமக்குள் நிரம்பி இருக்கும் தன்னம்பிக்கையை வீழ்த்துவதுடன் நம் வளர்ச்சியையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்திவிடும்.

ஏலக்காய் நல்லதுதான். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். இனி ஏலக்காயை பார்க்கும்போதெல்லாம் ‘கர்வம்’ என்ற உணர்வு குறித்த சிந்தனை உங்களுக்குள் உண்டாவதை நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது.

சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் இவற்றுடன் கொஞ்சமாய் கர்வமும் ஓரமாய் ஒண்டிக்கொள்ளட்டும். அத்துமீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுபோதும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 3 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari