ஜம்முனு வாழ காம்கேரின் OTP-138: ‘ஹேஷ் டேக்’ தத்துவம்!

பதிவு எண்: 869 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 138
மே 18, 2021

‘ஹேஷ் டேக்’ தத்துவம்!

சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக் என்ற வார்த்தை மிகப் பிரபலம். அதை மூன்று விதமாக்கிக்கொள்ளலாம்.

Branded Hashtag, Common Hashtag, Trending Hashtag

பிராண்டட் ஹேஷ் டேக், பொதுவான ஹேஷ் டேக், ட்ரெண்டிங் ஹேஷ் டேக்.

முதலாமானது, நமக்கே நமக்கான ஹேஷ் டேக். நம்மை அடையாளப்படுத்த உதவும். இதன் மூலம் நாம் சொல்ல வருவதை பொதுவெளியில் அறிமுகப்படுத்த வசதியாக இருக்கும். உதாரணம்: நான் தற்சமயம் வெளியிட்டுக்கொண்டிருக்கும் 60 செகண்ட் வீடியோவுக்கு நான் பயன்படுத்தும் #Compcare_1_Minute_Video. இது எனக்கே எனக்கானது. இதை க்ளிக் செய்தால் நான் வெளியிடும் வீடியோக்கள் மட்டுமே வெளிப்படும்.

இரண்டாமானது, பொதுவெளியில் அந்தந்த காலகட்டத்தில் பிரபலமாகிகொண்டிருக்கும் ஹேஷ் டேகாக இருக்கலாம் அல்லது பொதுவாக ஒரு தலைப்பிலான ஹேஷ் டேகாக இருக்கலாம். இதில் நாமும் சங்கமாகிக்கொள்ளலாம். மற்றவர்களுடன் இணைந்து நம் கருத்துக்களும் பரப்பப்படும். உதாரணம்: இதே வீடியோவில் நான் பயன்படுத்தி இருக்கும் #Success  என்ற ஹேஷ் டேக் பொதுவானது. இதில் இணையத்தில் உள்ள பல கோடி பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்திருப்பார்கள். நாமும் பொதுவெளியில் அவர்களுடன் சங்கமிக்க இது பயன்படும்.

முதலாமானது, நாமே சொந்தமாக கடை போட்டு வியாபாரம் செய்வதைப் போல. அது நாம் இருக்கும் பகுதியில் பிரபலமாக இருக்கும். அங்குள்ள மக்கள் தேடி வந்து நம்மிடம் பொருட்களை வாங்குவார்கள்.

இரண்டாமானது, ஒரு கண்காட்சி நடக்கும்போது பல நிறுவனங்கள் கடைவிரித்திருப்பார்கள். அதில் நம் கடையையும் விரிக்கலாம். வியாபாரம் செய்யலாம். அப்போது நம் அடையாளம் அந்த கண்காட்சியின் பெயரின் கீழ் அடையாளப்படுத்தப்படும். அந்தக் கண்காட்சிக்கு வருபவர்கள் நம் கடைக்கும் வரலாம்.

இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது ட்ரெண்டிங் ஹேஷ் டேகில்.

சில நேரங்களில் சில விஷமிகள் சில ஹேஷ் டேகுகளை ட்ரெண்டிங் செய்து பொதுவெளியில் பல கோடி நபர்களிடம் இருந்து தகவல்களை சேகரிக்கப் பயன்படுத்தலாம்.

உதாரணம்: #Couple_challenge என்ற ஹேஷ் டேகை ஃபேஸ்புக்கின் சர்ச் பாக்ஸில் டைப் செய்யுங்களேன். பல லட்சம் மக்கள் தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் உங்கள் கண் முன் கொட்டும். #Single_challenge என்ற ஹேஷ் டேக் தனியாக வாழ்பவர்களின் புகைப்படங்களை உங்கள் முன் விரிக்கும். இதுபோல ஹெஷ் டேகை பயன்படுத்தி நீங்களும் உங்கள் புகைப்படங்களை பதிவிட்டிருந்தால் அண்டப் பெருவெளியில் உங்கள் புகைப்படங்கள் யாரோ உங்களுக்கு தெரியாத நபர்களால் தவறான பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கலாம். இதனால் நீங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. உங்கள் குடும்பத்தினரும் சேர்த்துத்தான்.

ஹேஷ் டேகுகளை பயன்படுத்தி உங்கள் பர்சனல் விஷயங்களை பதிவிடும்போது கவனமாக இல்லாவிட்டால் வேலியில் செல்லும் ஓணானை நாமே நம் உடம்பில் ஏற்றிக்கொள்வதற்கு சமமான துன்பத்தைக் கொடுத்துவிடும்.

நேற்று ஒருவர் ஹேஷ் டேக் குறித்து சந்தேகம் கேட்டிருந்தார். அதனால் இன்றைய பதிவு இப்படியாக!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon