ஜம்முனு வாழ காம்கேரின் OTP-139: பயமே நோய்!

பதிவு எண்: 870 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 139
மே 19, 2021

பயமே நோய்; பயத்தைத் தள்ளி வைப்போம்; நோயைத் துரத்துவோம்!

நேற்று எங்கள் நெருங்கிய குடும்ப நண்பரின் அம்மாவுக்கு இருமல் அதிகமாக அவரோ மருத்துவமனைக்கு வரவே மாட்டேன் என ஒரே பிடிவாதம். கொரோனா பரிசோதனை செய்யவும் வர மறுத்துவிட்டார்.  ‘மருத்துவமனைக்கு வந்தால் நான் உயிருடன் வீடு திரும்புவதற்கு என்ன உத்திரவாதம், நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்கிறேன்’ என அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக்கொண்டு வெளியில் வரவே இல்லை. ஓரிரு நாட்களில் மூச்சுத் திணறல் அதிகமாக எந்த மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அலைந்து திரிந்திருக்கிறார்கள். மருத்துவமனை வாசல்களில் வரிசையாக நிற்கும் ஆம்புலன்ஸுகள் உயிர்பயத்தை அதிகரிக்க தவியாய் தவித்து வேறு வழியே இல்லாமல் வீடு திரும்பி உள்ளனர். நேற்று முன்தினம் வரை இருந்த அவர், நேற்று இல்லை.

இன்றைய கால கட்டத்தில் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யும் விஷயமாக நம்மைச் சுற்றி நடக்கின்ற மரணங்கள். யாரையேனும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் என கேள்விபட்ட மாத்திரத்திலேயே மனசுக்குள் ஓம் சாந்தியோ, RIP –யோ போட்டு அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு வாழ்க்கை மீதான அவநம்பிக்கை பெருகிவிட்டது.

சாதாரண தொண்டைக் கமறல் வந்தாலே அது ‘கொரானாவோ’ என்று எண்ணும் அளவுக்கு மரண பயம் நம்மையும் மீறி நமக்குள் குடியேறுவதை தவிர்க்கவே முடிவதில்லை.

புகழ், பணம், பதவி, பட்டம் என அனைத்திலும் உச்சாணிக்கொம்பில் இருப்பவர்களுக்கும் மருத்துவமனையில் ஒண்டிக்கொள்ள இடம் கிடைப்பது மட்டுமில்லாமல் விருப்பமான சுடுகாட்டில் நாம் அடக்கமாக இடம் கிடைப்பதுகூட அத்தனை சுலபமில்லை என்ற உண்மை நிலவரம் நம்மை கலவரப்படுத்துகிறது.

இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ள செய்திகளை கேள்விப்படும்போது இந்த கொரோனா காலத்தில் மட்டும் என்றில்லை, பொதுவாகவே அமெரிக்காவில் ஒருவர் இறந்த பிறகு, தான் எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்பே பதிவு செய்துவைத்துக்கொள்வார்கள் என்ற விஷயம் நினைவுக்கு வந்து செல்கிறது.

இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் நம் நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.

வாரம் ஒரு முறை பாலும், காய்கறிகளும் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியில் வரும் நாங்கள் சென்ற வாரம் முதல் அவற்றையும் வீட்டுக்குக் கொண்டு வந்து போடச் சொல்லிவிட்டோம். 24 * 7 வீட்டுக்குள்தான். ஜெயில்போல் தான் இருக்கிறது. ஆனால் என்ன, வசதியான ஜெயில். பாதுகாப்பான ஜெயில். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதுடன் இந்த பேரண்டத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் எங்களின் சிறு பங்களிப்பு இதுவாக மட்டுமே இன்றைய காலகட்டத்தில் இருக்கிறது. வேறென்ன செய்ய?

தேவையில்லாமல் வெளியில் வராதீர்கள். வீட்டு வாசல் கதவை திறக்கும் முன்னர் முகக்கவசம் அணிய மறக்காதீர்கள். மொட்டைமாடியில் வாக்கிங் செல்வதாக இருந்தாலும் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். அங்கு யாருமே இல்லை என்றாலும், உங்கள் குடியிருப்பில் யாரேனும் ஒருவர் திடீரென வந்தால் மாஸ்க் அணியாமல் எப்படி ‘ஹாய்’ சொல்வீர்கள், சிரிப்பீர்கள்? முடிந்தால் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் மாஸ்க்குகளை நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எங்கேனும் சென்றால் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் முன் வருபவர் மாஸ்க் இல்லாமல் உங்களுடன் தொடர்புகொள்ள முற்பட்டால் அந்த மாஸ்க்கைக் கொடுத்து அணியச் சொல்லுங்கள்.

எந்தப் பொருளையும் சுத்தம் செய்யாமல் வீட்டுக்குள் எடுத்து வராதீர்கள். காய்கறி, பால், மளிகை இப்படி எதுவாக இருந்தாலும். எந்தக் காரணம் கொண்டும் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். நீங்கள் யார் வீட்டுக்குள்ளும் செல்லாதீர்கள். மாஸ்க் அணிந்தாலும் நிறைய இடைவெளி விட்டு நின்றுகொள்ளுங்கள். இரட்டை மாஸ்க் அணியச் சொல்கிறார்கள். எப்படி சாத்தியம் என யோசிக்காமல் வெளியில் கடைகளுக்குச் சென்றால் இரண்டு மாஸ்க் அணியுங்கள். வீட்டுக்கு வந்தால் குளிக்காமல், போட்டிருந்த துணியை துவைக்காமல் வீட்டுக்குள் நுழையாதீர்கள்.

தினமும் எலுமிச்சை, பூண்டு, நெல்லிக்காய், மிளகு, கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், சீரகம்,  ஓமம், கடுக்காய், மஞ்சள், கிராம்பு என நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் பொருட்களை மருந்தாகவாவது எடுத்துக்கொள்ளுங்கள்.

சத்தான பழங்களை சர்க்கரையை அள்ளிக் கொட்டி ஜூஸ் செய்து சாப்பிடாமல் அப்படியே சாப்பிடப் பழகுங்கள். காய்கறிகளை நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெந்நீர் போட்டு சூடாக தண்ணீர் குடியுங்கள். மிதமான சூட்டில் குளியுங்கள். உணவுப் பொருட்களை சூடாகவே சாப்பிடுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென இருக்கும் உணவுபண்டங்களை அது தின்பண்டங்களாகவே இருந்தாலும் ஜில்லென சாப்பிடாதீர்கள்.

தினமும் ஆவி பிடியுங்கள். மூச்சுப் பயிற்சியும் நடைப் பயிற்சியும் செய்யுங்கள்.

மொத்தத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாவிட்டாலும் உங்கள் மனச் சோர்வை வெளியில் காட்டி வீட்டில் உள்ளவர்களையும் கலவரப்படுத்த வேண்டாம்.

வீட்டைவிட்டே வெளியில் வராதவர்களுக்கும் கொரோனா வருவதாக செய்திகள் வருகின்றன. காரணம், அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர்கள் எப்படிப்பட்ட பாதுகாப்பு கவசத்துடன் இருக்கிறார்கள், எந்த அளவுக்கு சுகாதாரத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்பதிலும் அதற்கான பதில் உள்ளதல்லவா?

எனவே உங்கள் பாதுகாப்பு, உங்கள் குடும்பப் பாதுகாப்பு, உங்கள் நாட்டின் பாதுக்காப்பு, இந்த பேரண்டத்தின் பாதுகாப்பு.

ஸ்ரீஅரவிந்த அன்னையின் அருளுரையுடன் இன்றைய பதிவை முடிக்கிறேன்.

நோயிலிருந்து குணம் பெறுவது நல்லது. நோயடையாமல் தவிர்ப்பது நல்லது. பயமே உண்மையான நோய். பயத்தை உன்னிடம் இருந்து விலக்கு. நோயும் உன்னைவிட்டு விலகி விடும். உணவின் மீதுள்ள பேராசையை வெற்றி கண்டால் அதுவே ஆரோக்கிய வாழ்விற்கு ஓர் உறுதிமொழி. இறையருள் மட்டுமே நோயைக் குணப்படுத்தும். மருந்துகள் உடலுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன அவ்வளவே. நோயாளியின் நம்பிக்கைதான் குணமடையும் ஆற்றலை தருகின்ற மருந்தாகும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,463 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon