பதிவு எண்: 868 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 137
மே 17, 2021
பிடிக்காதவை கவனம் பெறும்போது, பிடித்தவை நம்மை நெருங்கும்!
ஒரு சினிமா பார்த்தேன் – ‘அன்பிற்கினியாள்’. இதைப் பார்க்கும் சூழல் எப்படி ஏற்பட்டது என்பதை கடைசியில் சொல்லி இருக்கிறேன்.
நடிகர் அருண்பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவரும் இதில் அப்பா மகளாகவே நடித்துள்ளார்கள்.
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை கவிதையாக்கிக் கொடுத்துள்ளார்கள். இருவருமே மிக மிக இயல்பான நடிப்பு. எங்குக் எதிலும் மிகைப்படுத்தல் இல்லை.
அன்பு என்படும் அன்பிற்கினியாளிடம் அன்பு, பண்பு, பாசம், நேசம், காதல் என அத்தனையும் இயல்பாக காட்டியுள்ளார்கள். கூடவே அவருடைய சமயோஜித புத்தியையும் அட்டகாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு பெரிய மாலில் உள்ள உணவகத்தில் அவர் வேலை செய்கிறார். கூடவே கனடா சென்று சம்பாதித்து எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி புரியும் அப்பாவின் கடன்களை அடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறார். இடையில் காதலும் செய்கிறார்.
ஒரு நாள் அவர் பணிபுரியும் உணவகத்தின் ஃப்ரீசர் அறைக்குள் அவர் இருப்பது தெரியாமல் பூட்டிக்கொண்டு சென்றுவிட அன்றைய இரவை அங்கு அவர் எப்படி கழிக்கிறார் என்பதுதான் கதை. அந்த காட்சிகளில் எதிர்பாராத சூழலில் சிக்கல்கள் உண்டாகும்போது எப்படியெல்லாம் சமயோஜிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை பாடம் எடுக்காமல் படமாக்கி உள்ளதே திரைக்கதையின் சிறப்பு.
காவல் நிலையத்தில் திமிர் பிடித்த சப் இன்ஸ்பெக்டர், கருணையோடு நடந்துகொள்ளும் ஏட்டு இவர்களை எல்லாம்விட ஜெயிலில் இருக்கும் ஒரு குற்றவாளி மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளும் ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். அவன் செய்யும் ஐடியா அட்டகாசம்.
மனிதம் எங்கெல்லாம் வெளிப்படுகிறதோ அது கற்பனை திரைக்காட்சிகளாகவே இருந்தாலும் மனதை வருடிச் செல்வதை யாராலும் மறுக்க முடியுமா?
அந்த மாலின் செக்யூரிட்டியிடம் கனிவாக நடந்துகொள்ளும் தன்மையினால் அவருடைய மனதில் அவர் இடம் பெற்றதினால் கிடைக்கின்ற சிறிய ‘க்ளூ’மூலமே அவர் ஃப்ரீசர் அறைக்குள் மாட்டி இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
பிறரிடம் நாம் காட்டும் சிறு கனிவு, மெல்லிய புன்னகை, மரியாதை இவைதான் நம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. அதுவே தக்க சமயத்தில் நமக்கு உதவியும் செய்கிறது. இதுவே ‘கர்மா’. அதை கதையின் ஊடே வெகு இயல்பாக கடைசி காட்சியில் செக்யூரிட்டி அருண்பாண்டியனிடம் பேசும் வசனத்தின் மூலம் காட்டியுள்ளார்கள்.
முக்கியமான விஷயம். ‘சுல்தான்’ சினிமா பார்க்க ஆரம்பித்து பத்து நிமிடத்தில் அது பிடிக்காமல் போக, வேறெந்த திரைப்படம் வந்திருக்கிறது என பார்க்கும்போது கண்களில்பட்டது இந்த சினிமா.
அடிதடி வெட்டு குத்து இதையே எத்தனை நாட்கள் பார்த்துக்கொண்டிருப்பது? அதற்கு நேர்மாறான திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. மிக மிக மென்மையான உணர்வுகளை இதைவிட மென்மையாக திரைக்கதை ஆக்கவே முடியாது என்று எண்ணும் வகையில் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.
எல்லாம் சரி, படத்தைப் பற்றிய கருத்துக்கணிப்பை சொல்லாமல் பதிவை முடித்துவிட முடியுமா?
சில நேரங்களில் நமக்குப் பிடிக்காதவை நம் கவனத்துக்கு வரும்போதுதான் நமக்குப் பிடித்தவற்றை நாம் தேடிப் போகும் சூழல் அமையும். அந்தவகையில் அமைந்ததுதான் சுல்தானுக்கு பதில் அன்பிற்கினியாள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#ஹலோ_காம்கேர் #Hello_Compcare