ராஜ மரியாதையுடன் ஒரு மரணம்
மதியம்3 மணி இருக்கும்…
திடீரென மேள சப்தம்
ஆனால் அது சுப மேளம் இல்லை
என்பது மட்டும் தெரிந்தது…
அசுப மேள சப்தம்!
என்னவென்று பால்கனி
கதவு திறந்து பார்த்தால்
ராஜ மரியாதையுடன்
ஒரு ‘பிணம்’ சென்று கொண்டிருந்தது…
ராஜ மரியாதையுடன்
ஒரு இறந்த உடல் செல்வதைப் பார்த்து
எத்தனை நாட்கள் ஆகின்றன?
சமீபமாய் கொரோனா
அனாதையாய்தானே வழி
அனுப்பிக்கொண்டிருக்கிறது!
சிறியவரா?
பெரியவரா?
என்ன வயதிருக்கும்?
எதுவும் தெரியவில்லை…
ஆனால் செல்லும் வழியெங்கும்
பூக்கள் தூவியபடி சென்று கொண்டிந்தார்கள்.
மெயின் ரோடில்தான் சென்றுகொண்டிருந்தது
ஐந்தாறு நபர்கள் பின்தொடர…
ஆனால்
ரோஜா பூ வாசனை
அந்த தெரு முழுவதும்
நிறைந்ததுபோல திடீரென
எங்கள் தெருவை கடக்கும்போது
எங்கள் வீடு முழுவதும்
ரோஜா பூ வாசனை!
ஆனால் இறந்தவர் உடலில் இருந்த
ரோஜா பூ வாசனை
இறப்பின் வாசனையை ஊட்டிச் சென்றது…
என்னவோ செய்தது வயிற்றை
திடீரென தலைவலியும் வந்து சேர்ந்தது…
என் பாட்டி தன் 80 வயதில்
இறந்த போது எனக்கு வயது 14 இருக்கும்…
வீட்டில் பூக்களின் வாசனையும்
ஊதுவத்தியின் வாசனையும் சேர்ந்து
இறந்த உடலின் வாசனையுடன்
பின்னிப்பிணைந்து
மரணத்தின் வாசனை இதுதான் என
எனக்குப் புகட்டிச் சென்றது…
அனிச்சையாக மீண்டும் சென்று
கதவை திறந்து பார்த்தேன்!
மேள சப்தம் தொலைவில் கேட்டது.
ஆனால் பூ வாசனையோ நெடியெற்றியது!
மீண்டும் கதவை
தாழ்போட்டு விட்டு உள்ளே வந்தேன்.
இன்று இறந்தபிறகு
ராஜ மரியாதையுடன்
அடக்கமாவதற்குக் கூட
கொடுத்து வைத்திருக்க வேண்டும்
என நினைத்தபடி
லேப்டாப்பில் என் வேலையில்
கவனம் செலுத்தினேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜூன் 4, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai