ஜம்முனு வாழ காம்கேரின் OTP-156: பெண் நிர்வாகி!

பதிவு எண்: 887 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 156
ஜூன் 5, 2021

பெண் நிர்வாகி!

ஒரு பெண் தமைமையிலான நிர்வாகத்தின் மீது ஆணுக்கான மனோநிலை 20, 25  வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது என்பதை சமீபத்தில் ஒரு பெண் நிர்வாகத் தலைமையில் இயங்குகின்ற ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவங்களை எப்படி ஹேண்டில் செய்வது என எங்களுக்குத் தெரியும்’ என சர்வ அலட்சியமாக அந்தப் பணியாளர் பேசியபோது எனக்கு அந்த நிர்வாகி மேல் பரிதாபமே உண்டானது. நான் அதை அவர்கள்  கவனத்திற்கு கொண்டு சென்றால் அவர் அதை சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ளவும் மாட்டார் என்பதை முன்பே ஒருசில நிகழ்வுகள் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, அவர்களுக்கு நாங்கள் செய்துகொடுக்கும் பணியில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

ஒரு நிர்வாகியாக அவர் படும் பாட்டை தள்ளி நின்று கவனித்து வருவதன் பலனாக ஒரு முடிவு எடுத்துள்ளேன். அதை இந்தப் பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய நிறுவனத்தில் ஆரம்பத்தில் இருந்தே என்னை ஒரு பெண்ணாக பார்க்கும் மனோபாவத்தை தகர்த்து ‘சிறந்த நிர்வாகி’ என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கும் அளவுக்கு கடுமையான உழைப்பு, நேரம் தவறாமை, இரவு பகல் பாராமல் நிர்வாகத்தில் காட்டும் ஈடுபாடு, நடை உடை பாவனை என அத்தனையிலும்  ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்றாலே அந்த பிம்பம் ஒரு பெண்ணல்ல, அது ஒரு நிர்வாகம் எனும் அளவுக்கு என்னை கட்டமைத்துக்கொண்டு முன்மாதிரியாக வாழத் தொடங்கிவிட்டதால் என்னிடம் பணிபுரியும் ஆண், பெண் பொறியாளர்கள் அனைவருமே என்னை பெண் என்ற கோணத்தில் விமர்சிக்கவே நான் இடம் கொடுக்கவில்லை.

அதற்குக் காரணம் என் பெற்றோர். 50 வருடங்களுக்கு முன்பே அப்பா அம்மா இருவருமே இரவு பகல் என 24 மணி நேர சுழற்சிப் பணியில் கடுமையாக உழைத்து நேர்மையாக வாழ்ந்து எங்களை வளர்த்து இன்று வரை வழிநடத்தி வருகிறார்கள். அதனால் அம்மா என்றால் சமையல் அறையும் சாப்பாடும் மட்டும் எங்களுக்கு நினைவுக்கு வராது. தைரியம், உழைப்பு, புத்திசாலித்தனம் என அத்தனையும் நினைவுக்கு வரும். அதுபோல அப்பா என்றால் தள்ளி நின்று அன்பைக் காட்டும் நபராகத் தெரிய மாட்டார். வாஞ்சையுடன் அஞ்சானத்துடன் ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடு’ என பரிவுடன் சாப்பாடு போடும் அன்பின் உருவமாகவே எங்களுக்கு நினைவில் வருவார்.

இப்படி அப்பாவும் அம்மாவும், ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும், பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிட மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். வாழ்ந்து காட்டினார்கள்.

அதனால் என்னால் ஒரு சிறந்த நிர்வாகியாக கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. இன்றுவரை அப்படியே தொடரவும் முடிகிறது.

பொதுவாகவே நம் சமுதாயத்தில் பெண் என்றாலே அவள் எல்லாவற்றையும் சரியாகவே செய்ய வேண்டும் என்ற மனோநிலை உள்ளது.

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி பொது இடத்தில் பல்லைக் காட்டிக்கொண்டு சத்தமகா  சிரிக்கிறாள் என்பதில் இருந்து தொடங்கி,

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி உடை அணிகிறாள்,

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி பரக்காவெட்டிபோல் முதலில் சாப்பிடுகிறாள்,

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி கோபப்படுகிறாள்,

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி டென்ஷன் ஆகிறாள்,

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி வேகமாக பைக் ஓட்டுகிறாள்,

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி துடுக்காகப் பேசுகிறாள்

என்று ‘ஒரு பெண்ணாக இருந்துகொண்டு’ என முன் அடைமொழியுடன் அவளை நோக்கி வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களின் உச்சம் எது தெரியுமா?

‘ஒரு பொண்ணு மாதிரியா நடந்துகொள்கிறாள்?’

பெண் என்றால் அவளுக்குக் கோபம் வரக் கூடாது, கோபம் வந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

பெண் என்றால் டென்ஷன் ஆகக் கூடாது. டென்ஷன் செய்தாலும் டென்ஷனே ஆகாததைப் போல இயல்பாக இருக்க வேண்டும்.

பெண் என்றால் தன்னை மறந்து வேகமாக வெடித்து சிரித்துவிடக் கூடாது. சிரிப்பு வந்தாலும் வாய்க்குள் அமைதியாக சிரித்துக்கொள்ள வேண்டும்.

பெண் என்றால் உண்மையை உரக்கப் போசக் கூடாது. பேசினால் அவள் இயங்கும் துறையில் இருந்தே தள்ளிவைக்கப்படுவாள். வீடாக இருந்தால் பைத்தியக்காரப் பட்டம் தாராளமாகக் கிடைக்கும். எனவே உண்மையை மனதுக்குள் மறைத்து ‘ஆமாம் சாமி’ போட வேண்டும்.

பெண் என்றால் அகோர பசி எடுத்தாலும் அமைதியாக மெல்ல சாப்பிட வேண்டும்.

பெண் என்றால் அமைதியாக நளினமாக வண்டி ஓட்ட வேண்டும். ஏதேனும் ஒரு அவசரத்துக்குக் கூட வண்டியை வேகமாக ஓட்டிச் செல்லக் கூடாது.  ‘பாருங்களேன், பொம்பளைங்களா இதுங்க’ என்ற வசைமொழி காற்றில் கலந்து வண்டியில் பறக்கும் நம் காதுகளுக்கு தெள்ளத் தெளிவாக கேட்கும் அளவுக்கு விமர்சனம் செய்வார்கள் நடுரோடில்.

பொதுவாகவே பெண்கள் மீதான கண்ணோட்டம் இப்படி இருப்பதால் ஒரு பெண் தலைமையிடம் இன்னமும் அவர்கள் வைக்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

எனவே ஒரு பெண் நிறுவனத்தை சிறப்பாக நடத்துவதற்கு அவளுடைய உணர்வுகளை எப்படி தன் கட்டுக்குள் வைக்கிறாள் என்பதில் இருந்து தொடங்குகிறது.

குறிப்பாக கோபத்தை கட்டுக்குள் வைப்பது, வார்த்தைகளைக் கையாள்வது என்ற இரண்டிலும் கவனமாக இருந்துவிட்டால் மற்றவை அவள் கட்டுக்குள் தானகவே வந்து சேரும்.

விரைவில் ஒரு பெண் சிறந்த நிர்வாகியாக திகழ்வது எப்படி என்ற தலைப்பில் குறுந்தொடர் எழுதலாம் என்றுள்ளேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 785 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon