ஜம்முனு வாழ காம்கேரின் OTP-157: உங்கள் அழகு குறித்த விமர்சனம் உங்களுக்கான எச்சரிக்கை மணி!

பதிவு எண்: 888 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 157
ஜூன் 6, 2021

உங்கள் அழகு குறித்த விமர்சனம் உங்களுக்கான எச்சரிக்கை மணி!

‘மாணவிகளுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்த ஆசிரியர்’ – இந்த செய்தி குறித்து என்னிடம் கருத்து கேட்டார்கள் ஒரு பத்திரிகையில் இருந்து.

இந்த செய்தியில் பல விஷயங்கள் உறுத்தல். எனவே மீடியாவுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என சொல்லி மறுத்துவிட்டேன்.

12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் பெற்றோர் கிட்டத்தட்ட 40 வயதுக்குள்தான் இருப்பார்கள். அதுவும் இன்று பெரும்பாலும் ‘ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என ஒரே குழந்தை. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனமாகவே பார்த்து, பொத்தி பொத்திதான் வளர்க்கிறார்கள். யாரும் அப்படியே ‘விட்டேத்தியாக’ விட்டுவிடுவதில்லை. அவர்கள் வாழ்வதே அந்தக் குழந்தைக்காக மட்டுமே என்ற தவநிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் படிப்புக்காக, வாழ்க்கை உயர்வுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் உன்னத மனநிலையிலேயே வாழ்கிறார்கள். அதுவும் அவர்கள் அனைவருமே நன்கு படித்தவர்கள். நல்ல பணியில் இருப்பவர்கள். நல்லது கெட்டது, நாட்டு நடப்பு என அனைத்தும் அறிந்தவர்கள். புத்திசாலிகள்.

சின்ன சின்ன முக பாவனைகளை வைத்தே குழந்தைகளின் மனதினை படித்துவிட முடியும். அவர்களால் எப்படி தங்கள் குழந்தையைப் பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கமுடியும்?

இன்றும் என் பெற்றோர் நான் என்னதான் என் நிர்வாகப் பிரச்சனைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், ‘என் சிறிய முக மாற்றத்தை வைத்தே நிர்வாகத்தில் என்ன பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி டல்லாக இருக்கிறாய்?’ என கேட்பார்கள்.

சரியாக சாப்பிடவில்லை என்றால், சரியாக பேசவில்லை என்றால், சரியாக தூங்கவில்லை என்றால் இப்படி வழக்கத்துக்கு மாறாக எப்படி நடந்துகொண்டாலும் என் பெற்றோர் உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

எனக்கு எத்தனை வயதானால்தான் என்ன, என் பெற்றோருக்கு நான் குழந்தைதானே?

எனவே பெற்றோர் அறியாமல் மாணவிகள் ஆபாச புகைப்படம் எடுத்து ஆசிரியர் மிரட்டலுக்கு பயந்து வாட்ஸ் அப் அனுப்புகிறார்கள் என்பதையே நம்ப முடியவில்லை. அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டே அந்த ஆசிரியர் மாணவிகளை மிரட்டியதாக செய்திகள் கூறுகின்றன.

ஒருவர் தொடர்ச்சியாக மிரட்டுகிறார் என்றால் எந்த ஒரு சிறுமியால் எந்த ஒரு டென்ஷனையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சகஜமாக இருந்துவிட முடியும்? அதுவும் ஆபாச புகைப்படம் எடுத்து ஒரு ஆசிரியருக்கு அனுப்பி விட்டு எந்த உறுத்தலும் இல்லாமல் 17, 18 வயது இளம் பெண்களால் நடமாடக் கூட முடியாது. அதுவும் பெற்றோரின் அன்பு வட்டத்துக்குள், அவர்களின் செல்ல கண்காணிப்புக்குள்.

அடுத்ததாக பள்ளி நேரத்தில் சினிமா ஹோட்டல் என அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். எந்த ஒரு நிர்வாகமும் வெளிப்படையாக இப்படி தவறுகள் செய்யும் பணியாளர்களை தங்களிடம் வைத்துக்கொள்ளவே மாட்டார்கள். நிர்வாகத்தைத் தாண்டி நிர்வாகம் சம்மந்தப்படாத விஷயங்களில் பணியாளர்களின் பர்சனல் விஷயங்களில் பெரும்பாலும் எந்த ஒரு நிர்வாகமும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

ஆனால், நிர்வாகத்துக்குத் தெரிந்தே நிர்வாகம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் இப்படிப்பட்ட செயல்பாடுகளை அனுமதிக்கவே மாட்டார்கள். பின் எப்படி?

எல்லாவற்றையும்விட உச்சம். மாணவிகளை கர்ப்பம் ஆக்கிவிட்டு அவர்களுக்கு மாத்திரைகள் கொடுத்து அழித்துவிடுவாராம். எந்த ஒரு அம்மாவினாலும் வயது வந்த தன் மகளின் மாதாந்திர பிரச்சனைகள் குறித்த கவனம் இல்லாமல் இருக்கவே முடியாது.

சாதாரண தலைவலி மாத்திரை எடுத்துக்கொண்டாலே முகம் சற்று அதிர்ந்து காணப்படும். ‘என்ன இன்னிக்கும் தலைவலி மாத்திரை எடுத்துக்கொண்டாயா?’ என கேள்வி கேட்பார்கள் எங்கள் வீட்டில்.

அதெப்படி கருகலைப்பு மாத்திரிரைகள் எடுத்துக்கொண்ட பிறகு உடல் ரீதியாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சகஜமாக இளம் பெண்களால் குறிப்பாக பள்ளி சிறுமிகளால் நடமாட முடியும்? அப்படியே சமாளித்துக்கொண்டு நடமாடினாலும் அவர்களின் கவனம் படிப்பை விட்டு தூரமாக அல்லவா போய்விடும். அவர்களால் எப்படி படிப்பில் கவனம் செலுத்தி இருக்க முடியும்? அது எப்படி பெற்றோரின் கவனத்துக்கு வராமலேயே இருந்திருக்க முடியும்?

எல்லாவற்றையும்விட மிக முக்கியமான ஒரு விஷயம் உறுத்தல்களின் உச்சம். அதாவது பாலியல் தொந்திரவு கொடுத்த படித்த அந்த ஆசிரியருக்கு குடும்பம் என்று ஒன்றிருக்கும் அல்லவா? மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா என்றிருப்பார்கள் தானே? அவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு அவரால் எப்படி இப்படிப்பட்ட இழி செயல்களை செய்ய முடிகிறது? பெண்கள் புத்திசாலிகள். தன் கணவன் என்ன செய்கிறான் என்பதை அவன் முகத்தை வைத்தே கணிக்கும் துல்லியமானவர்கள். அவர்களால் எப்படி அப்படிப்பட்ட கணவனுடன் வாழ்க்கை நடத்த முடிகிறது?  அந்த ஆசிரியரை வளர்த்த பெற்றோர்களை நினைத்தால் வெறுப்பாக உள்ளது.

இப்படியாக பல பல கேள்விகள், உறுத்தல்கள்.

இந்த செய்திக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. என் கவலை எல்லாம் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்தே.

இந்த செய்தி எனக்கும் பேரதிர்ச்சியே. என் வீட்டில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்து புலம்பித் தள்ளிவிட்டேன். மனதுக்குள் சமீபமாக இந்த செய்தியே ‘ரீவைண்ட்’ ஆகிறது.

நான் மீடியாக்களுக்கு எப்படிப்பட்ட கருத்தைச் சொன்னாலும் அது கடைசியில் ஜாதியின் அடிப்படையிலான செய்தியாகவே உருமாற்றம் பெறும். இப்போதெல்லாம் முதன்மைப் பிரச்சனை என்பது மறைந்து மறந்து போய்விடும் அளவுக்கு அதன் விமர்சனங்களும் எதிர்வினைகளும் வலுவாக இருப்பதால் கருத்து சொல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற தீர்மானமான முடிவுடன் பத்திரிகைக்காக கருத்துக் கேட்டவரிடம் மென்மையாக எடுத்துச் சொல்லி மறுத்தேன்.

பெற்றோருக்கு நான் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் குழந்தைகளுக்கு எத்தனை வயதானாலும் நீங்கள்தான் பாதுகாப்பு. நீங்கள் மட்டுமே பாதுகாப்பு. உங்களைத் தவிர யாராலும் அவர்களை பாதுகாக்கவே முடியாது.

மாணவிகளிடமும் நான் வேண்டிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதன்.

17, 18 வயது என்பது ஓரளவுக்கு நல்லது கெட்டது புரியும் வயதுதான். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதும் ஒன்றே ஒன்றுதான். உங்களை மீறி யாராலும் எந்த சக்தியாலும் ஆளுமை செலுத்தவே முடியாது. செலுத்தவும் அனுமதிக்கவே கூடாது. அது ஆசிரியராகவே இருந்தாலும். பள்ளியில் படிப்பு, ஒழுக்கம் இவற்றுக்காக கண்டிப்புடன் நடத்தலாம். ஆனால் எந்த ஒரு காரணத்துக்காகவும் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவே உங்களை அவர்களால் ஆளுமை செலுத்தவே அனுமதிக்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் வீட்டில் அப்பா அம்மாவிடம் ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

பள்ளி இறுதி படிக்கின்ற உங்கள் இளமைகாலம் புகழ்ச்சிக்கும் அழகுக்கும் சற்றே மயங்கும் வயது. உங்கள் அழகு குறித்து யார் விமர்சனம் செய்தாலும் அது உங்களுக்கான எச்சரிக்கை மணி என்பதால் மிக கவனமாக இருங்கள். உங்கள் அழகு குறித்த மற்றவர்களின் விமர்சனத்துக்கு வெளிப்படையாக உங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாதீர்கள். அப்பா அம்மாவிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களை நண்பர்களாக பாவியுங்கள். அவர்கள் உங்களுக்காகவே வாழ்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பெற்றோர்களால் மட்டுமே உங்களை அடைக்காக்க முடியும். உங்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களால் மட்டுமே வெவ்வேறு ரூபத்தில் உங்களுக்கான மனோரீதியான பாதுகாப்பை கொடுக்க முடியும்.

ஆசிரியர், சமுதாயம், நண்பர்கள் இதெல்லாம் உங்களுக்கு உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உங்கள் உயர்வுக்காக அளிக்கப்பட்டுள்ள Add-Ons.

அப்பா அம்மா, உடன் பிறந்தோர், குடும்பத்தினர் இவைதான் உங்கள் வாழ்க்கையின் அச்சாணி. இதை மறந்து எதற்காகவும் யாருக்காகவும் எதையும் துறந்துவிடாதீர்கள்.

அப்பா அம்மாவை உயிர் நண்பராக்கிக்கொள்ளுங்கள். பிரச்சனைகள் தூள்தூளாகிவிடும்.

கவனம் கவனம் கவனம் குழந்தைகளே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 540 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon