ஜம்முனு வாழ காம்கேரின் OTP-158: பெற்றோர்கள் லக்கேஜ்களா?

பதிவு எண்: 889 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 158
ஜூன் 7, 2021

பெற்றோர்கள் லக்கேஜ்களா?

இப்போதெல்லாம் மாப்பிள்ளையின் பெற்றோர்களை லக்கேஜ், பேக்கேஜ் என்று சொல்லும் அளவுக்கு மணப்பெண்கள் அவர்களை மதிப்பதே இல்லை என்று கருத்து நிலவி வருகிறது.  ‘பாருங்களேன், இந்தகாலத்து பெண்களை… எப்படி எல்லாம் பிள்ளை வீட்டாரிடம் எதிர்பார்க்கிறார்கள்?’ என்று ஒட்டு மொத்த இளம் பெண்ணினத்தையும் வசைபாடுகிறார்கள்.

காலச்சக்கரத்தை கொஞ்சம் 30 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி வைத்துவிட்டு அந்த காலகட்டத்தை அனுபவித்துப் பார்த்தால் இப்போது நடந்துகொண்டிருப்பது கர்மா என்பது நன்கு புரியும்.

அன்று மகனைப் பெற்றவர்கள் செய்யாத அழிச்சாட்டியங்களா? செய்யாத கொடுமைகளா? கொடுமை என்றால் ரத்தம் வரும் அளவுக்கு கத்தியால் குத்திக்கிழிக்க வேண்டும் என்பதில்லையே. வார்த்தகளால், பார்வைகளால், உணர்வுகளால் என கிடைக்கின்ற இடைவெளியில் எல்லாம் பெண்களை குத்திக்கிழித்துக்கொண்டுதானே இருந்தார்கள். பெண்களைப் பெற்றவர்கள் மாப்பிள்ளை வீட்டாரின் முன் கைபொத்தி வாய்பொத்தி ஏதோ அடிமைபோல அல்லவா நின்றுகொண்டிருந்தார்கள்.

பெண் பார்த்துவிட்டு சென்ற பிறகு  ‘போய் லெட்டர் போடறோம்’ என்ற ஒற்றைத் தகவலை என்னவோ பெரிய மனதுக்காரர்களாய் விரைப்பாய் சொல்லிவிட்டுச் சென்ற பிள்ளை வீட்டார் பலரின் முகங்களை அறியாதவர்கள் உண்டா?

வரதட்சணை என்ற பெயரில் பெண்களை அவமானப்படுத்தினார்கள். வரதட்சணை கொடுத்தால் காசு கொடுத்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்கியதைப் போல்தானே? பின் ஏன், திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் வீட்டுக்கு பெண்கள் செல்ல வேண்டும்?

பணத்தையும் கொடுத்து, நகைகளையும் கொடுத்து, அப்பா அம்மா உடன்பிறப்புகள் என அனைத்தையும் துறந்துவிட்டு ‘அம்போவென’ யாரோ ஒரு முகம் தெரியாத ஒருவருடன் செல்ல வேண்டும். பல வீடுகளில் அன்பு கூட கிடைக்காது. கொடுமைகள் தாராளமாய் கிடைத்தன. பலவீடுகளில் மண்ணெண்ணெய் கேன்கள் அடுப்பெறிக்க மட்டும் இல்லாமல் வரதட்சனை கொடுமையால் பெண்களை எரிக்கவும் பயன்பட்டன.

சரி, அன்று மகனைப் பெற்றவர்கள் அப்படியெல்லாம் நடந்துகொண்டதால் இன்று பெண்கள் இப்படி லக்கேஜ், பேக்கேஜ் என கருதி ஒதுக்க வேண்டுமா என நினைக்கலாம்.

நான் அப்படி சொல்ல வரவில்லை. எல்லாமே ஒரு சுழற்சிதான். வாழ்க்கையும் அதன் போக்கும் சமூகமும் மாறி மாறிதான் பரிணாம / பரிமாண வளர்ச்சி அடையும்.அப்படித்தான் இன்று நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையும் மாறும். இதுவும் சாஸ்வதம் கிடையாது. எப்படி பெண்கள் பொறுமையாக அந்த காலகட்டத்தைக் கடந்தார்களோ அப்படி ஆண்களும் கடக்க வேண்டியதுதான். வேறு வழி இல்லை.

இதில் மற்றொரு கோணமும் உள்ளது.

இன்று பல பெற்றோர்கள் தங்கள் மகன் மற்றும் மகள் மீது வன்மம் வைத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடாமல் துன்புறுத்துகிறார்கள். துன்புறுத்தல் என்றால் அடித்து மிரட்டி அல்ல. தங்கள் பேரன் பேத்திகளிடம் தங்கள் பிள்ளைகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லி  ‘அவர்கள் சிறுவயதில் எப்படி எல்லாம் மோசமாக நடந்துகொண்டார்கள் தெரியுமா?’ என்பதில் இருந்து தொடங்கி ‘இதோ இப்போது பார் எனக்கு நேரத்துக்கு டிபன் சாப்பாடு கூட போடுவதில்லை’ என்பதுவரை ஏதேதோ சொல்லி அவர்கள் மனதை குழப்பி அவர்களின் பெற்றோருக்கு எதிராகவே குழந்தைகளை ஏவுகிறார்கள். இந்தக் கொடுமையை என்னவென்பது?

மருமகளை மட்டுமல்ல, தான் பெற்றெடுத்த பெண்ணையே இப்படித்தான் பல பெற்றோர்கள் நடத்துகிறார்கள் என்ற உண்மை அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

உளவியல் ரீதியாக நான் பல விஷயங்களை எழுதி வருவதால் பல பெண்கள் என் தனித்தகவலில் வந்து ‘பூனைகள் தான் பெற்றெடுத்த நோஞ்சான் குட்டியை பசிக்காக சாப்பிட்டுவிடுமாம். அதுபோல என் அம்மா என்னை பெற்றபோதே கொன்றிருக்கலாம். இப்படி தினம் தினம் வதைத்து எடுப்பதற்கு பதிலாக அப்படி செய்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். சிறு வயதில் என் அண்ணாவுடன் ஒப்பிட்டு பார்ஷியாலிட்டி. எல்லாவற்றொலும் அவனுக்கே முன்னுரிமை. இப்போது என் வாழ்க்கையை நான் வாழ விடாமல் என் மகன், மகள்களையே எனக்கு எதிராக ஏவி விட்டு சீரழிக்கிறார்…’ என புலம்பி தன் அம்மாவை எப்படி சமாளிப்பது என கேட்கிறார்கள்.

அதுபோல பல ஆண்கள் தங்கள் அப்பா செய்கின்ற அழிச்சாட்டியங்களை கதறாத குறையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தங்கள் அம்மா உயிருடன் இருக்கும்போது அவரை கொடுமைப்படுத்தி நிம்மதியாக வாழவிடாமல் செய்ததில் இருந்து ஆரம்பித்து இன்று தங்களை நிம்மதியாக வாழ விடாமல் எத்தனைதான் செளகர்யங்கள் செய்து கொடுத்து தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினாலும்  ‘என் மகன் எனக்கு எதுவுமே செய்வதில்லை. கொடுமைப்படுத்துகிறான். சாப்பாடு கூட போடுவதில்லை…’  அது இது என அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து புகார் அளிப்பதையெல்லாம் சொல்லி அழுதிருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் தன் பேரன் திருமணத்தில் அவன் பாட்டி வருவோர் போவேரிடம் எல்லாம் ‘என் மகன் எங்கே என்னை மதிக்கிறான். திருமணச் சடங்குகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்’ என்று என்னை ஆலோசனை கேட்பதே இல்லை. ‘தான்தோன்றித்தனமாக’ செயல்படுகிறான்…’ என்று ஒரே புகார் பட்டியல்தானாம்.

வருவோர் போவோர் எல்லாம் அந்த பாட்டியின் மகனிடம் ‘ஏம்பா இப்படி வயதானவரை நோகடிக்கிறாய். அவர் மனதை குளிர வைக்காமல் நீ என்ன செய்தாலும் அது ஒட்டாது’ என இலவச ஆலோசனை மையம் அமைக்காத குறையாக அறிவுரைகளை அள்ளி வீசிச் சென்ற கொடுமையையும் என்னிடம் சொல்லி கதறி இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ‘வெகுளி மருமகள்களை’ கொடுமைப்படுத்துவார்கள், ‘இளிச்சவாய் மருமகன்களை’ எள்ளி நகையாடுவார்கள். இன்று தான் பெற்றெடுத்த மகள், மகன்களையே கொஞ்சம் கொஞ்சமாய் குத்திக் குதறுகிறார்களே. என்ன செய்வது?

இப்படி மனிதர்களின் மனப்பாங்கே பொதுவாகவே மாறிவிட்டது என்பதால் இதில் பெண்களை மட்டும், பெண் வீட்டாரை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து குற்றம் குறை சொல்வது என்பது நியாமாகாது.

எல்லாமும் மாறிவிட்டது. எல்லோரும் மாற்றம் அடைந்துவிட்டார்கள். ஆனால் பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள், மணப்பெண்கள் மட்டும் அப்படியே அடக்கம் ஒடுக்கமாய் பவ்யமாய் உலா வர வேண்டும் என்று நினைப்பது சாத்தியமே இல்லை.

பூமி மெகா பொறுமைசாலி. இயற்கை அதைவிட பொறுமைசாலி. ஆனால் இன்று இயற்கைக்கு நான் பல விதங்களிலும் செய்த கொடுமைகளினால் சுவாசிக்க ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கிறோம். இயற்கையும் எத்தனை நாட்கள்தான் பொறுத்துக்கொண்டே இருக்கும். அதன் மற்றொரு முகத்தை காட்டிக்கொண்டிருக்கிறது இன்று.

பெண்கள் செய்வதையும் நான் நியாயப்படுத்தவில்லை. ஆண்களுக்கும் ஆதரவாக பேசவில்லை. பொதுவாகவே சமுதாயத்தில் எல்லாமே மாறிவிட்டது. அதுபோல குடும்பம் எனும் மாடலும் மாறிவருகிறது.

அது முற்றிலும் சிதையாமல் இருக்க ஆண், பெண் என இருபாலரின் ஒத்துழைப்பும் முக்கியம். குறிப்பாக அவர்களின் பெற்றோரின் பங்களிப்பும் முக்கியம்.

எல்லாம் ஒருநாள் சமநிலை அடையும். பொறுத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியே இல்லை.

இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திரும்பவும் மணமகன் வீட்டார் செய்யும் அலம்பல்களை எழுத வேண்டி இருக்கலாம்.

ஏனெனில் காலம் ஒரு சுழற்சியே. சூழலை மாற்றிக்கொண்டேதான் தன் முட்களை நகர்த்திக்கொண்டிருக்கும். காத்திருப்போம். முடிந்தவரை நம்மளவில் என்னெவெல்லாம் நல்லது செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் முன்னெடுப்போம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 791 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari