ஜம்முனு வாழ காம்கேரின் OTP-159: மரணம் தொட்டுவிட்டு வந்தவர்கள்! (Sanjigai108)

பதிவு எண்: 890 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 159
ஜூன் 8, 2021

மரணம் தொட்டுவிட்டு வந்தவர்கள்!

மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்களின் மனநிலையை அவ்வளவு சுலபமாக எடைபோட்டுவிடாதீர்கள்.

எனவே,

கொரோனா பாதிப்பினால் மரணம் வரை சென்றுவிட்டு வந்தவர்களுடன் போனில் பேசுவதற்கு முன் அவர்களுக்கு தகவல் அனுப்பி கேட்டுக்கொண்டு பேசும் மனநிலையில் இருக்கிறார்களா என அறிந்துகொண்டு பேசுங்கள்.

ஆறுதல் சொல்வதாக நினைத்துக்கொண்டு உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் அழைத்து தொந்திரவு கொடுக்க வேண்டாம்.

ஏனெனில்,

அவர்களில் சிலருக்கு பேசுவதற்கு உடலில் சக்தி இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு மனம் வெறுமையாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு யாருடனும் பேசாமல் அமைதியாக இருக்கத் தோன்றலாம்.

அப்படியே,

அவர்கள் பேசலாம் என அனுமதி கொடுத்தாலும், அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம், வாட்ஸ் அப்பில் மருத்துவர்கள்(!) அறிவுரைகளை எல்லாம், ஃபேஸ்புக்கில் தவறான புரிதலுடன் பகிரப்பட்ட செய்திகளை எல்லாம் அவர்களுக்குள் திணிக்க முற்படாதீர்கள். அவர்களுக்கு தெளிவூட்டுவதாக நினைத்துக்கொண்டு ‘இனிமேல் தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களைவிட அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரியவைத்தே மருத்துவமனையை விட்டு அனுப்பி இருப்பார்கள். எனவே நீங்கள் இன்ஸ்டண்ட் மருத்துவராக வேண்டாம். அவர்களுக்கு  நீங்கள் கூறுகின்ற  ‘இனிமேல் தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’ என்ற எச்சரிக்கைமணி மரண ஓலமாகவே மனதுக்குள் ஏறுமே தவிர ஒருபோதும் உங்கள் அக்கறையை காட்டிவிடாது. மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்களின் மனநிலை நம் மனநிலையைவிட தெளிந்திருக்கும். அதை குழப்புவதற்கு நம் யாருக்கும் உரிமை கிடையாது.

ஒருவேளை,

அவர்கள் போனில் பேசுவதற்கு தயங்கினாலோ அல்லது தள்ளிப்போட்டாலோ அல்லது பதில் கொடுக்க தாமதித்தாலோ அவர்களின் உடல்நிலை மோசமாகிவிட்டது என கருதி உங்கள் பதைபதைப்பை உங்கள் வட்டத்தினருக்குள் புரளியாக்காதீர்கள்.

குறிப்பாக,

‘நல்லவர்களைத்தான் கொரோனா அதிகம் பாதிக்கிறது. நல்லவர்களே மரணம் வரை சென்றுவிடுகிறார்கள். கெட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்போல. அவர்களுக்கு கொரோனாவும் வருவதில்லை. வந்தாலும் சாவதில்லை’ என்பது போன்ற உங்கள் மனதுக்குள் எந்த லாஜிக்கும் இல்லாமல் சூழலுக்கு ஏற்ப தோன்றும் எண்ணங்களை எல்லாம் அப்படியே கொட்டாதீர்கள். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.

நீங்கள் இப்படிப் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மனதளவில் பாதிக்கப்படலாம். அப்படியானால் ‘நாம் எல்லாம் கெட்டவர்களா?’ என்று சிந்திக்கத் தோன்றலாம். ‘பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்களுக்கு இதெல்லாம் புரியாதா, அப்படியெல்லாம் பயப்படுவார்களா என்ன?’ என நினைக்காதீர்கள். வயது ஏற ஏற பெரியவர்களும் குழந்தைகள் போல்தான். எல்லாவற்றுக்கும் பயப்படுவார்கள். அவர்களுக்குக் காதில் விழவில்லை என நீங்கள் கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினாலே அவர்களை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்ற ரேஞ்சுக்கு மனதுக்குள் மருக ஆரம்பித்துவிடுவார்கள். ஒருசிலர் தங்களுக்குள் புலம்பவே ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் ஒருசிலர் வாய்விட்டு சப்தமாகவே பேசிக்கொள்வார்கள். எனவே பேச்சில் கவனம் இருக்கட்டும்.

முக்கியமாக,

மரணத்தைத் தொட்டுவிட்டு வந்தவர்கள் நம் எல்லோரையும் விட மிக அதிகமாக வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்துகொண்டவர்களாகவே உயிர்பித்திருப்பார்கள். ஒவ்வொரு மருத்துவமனையும் அந்த ஞானத்தைப் புகட்டியே நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து பத்திரமாக வெளியே அனுப்பி வைக்கிறது. அங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குமே அந்தப் பெருமைகள் எல்லாம்.

எனவே,

‘இனிமேல்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’, ‘நல்லவர்களைத்தான் கொரோனா பாதிக்கிறது’ என ஊக்கம் அளிப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களைக் குழப்பாமல் ‘பத்திரம், நன்றாக ஓய்வெடுங்கள், எது குறித்தும் கவலைப்படாதீர்கள், நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்’ என்பது போன்ற பொருள்படும் நோக்கில் பேச்சை நிறைவு செய்யுங்கள்.

ஏனெனில்,

மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்களின் மனநிலையை அவ்வளவு சுலபமாக எடைபோட்டுவிடாதீர்கள். அவர்கள் சகஜமாக பழைய தெம்புடன் பேச ஆரம்பித்தால் உங்களைவிட அதிகமாக உங்களுக்கு அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். வாழ்க்கை குறித்து, மரணம் குறித்து, மனிதர்கள் குறித்து, நிசர்சனம் குறித்து, நிலைப்பு குறித்து, நிலையாமை குறித்து, இருப்பு குறித்து, இல்லாமை குறித்து என எந்த தலைப்பு கொடுத்தாலும் அதற்கு விளக்க உரை எழுதும் அளவுக்கு அனுபவப்பட்டு திரும்பி இருப்பார்கள்.

எனவேதான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்களின் மனநிலையை அவ்வளவு சுலபமாக எடைபோட்டுவிடாதீர்கள். கவனமாக பேசுங்கள்.

சுருங்கச் சொன்னால்,

‘என்ன ஆச்சு, ஏது ஆச்சு, அச்சச்சோ, அடப் பாவமே’ என்ற அக்கறைமொழிகளும் வேண்டாம், அறிவுரைகளும் வேண்டாம். கொரோனா தவிர்த்து பொதுவான விஷயங்களை பேசி உத்வேகம் கொடுப்போம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

முக்கியக் குறிப்பு: இன்றையப்  பதிவை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த அத்தனை அன்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 784 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon