பதிவு எண்: 891 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 160
ஜூன் 9, 2021
மினியேச்சர் இலட்சியங்கள்!
மனிதர்களை சிறிய அளவில் மினியேச்சர் பொம்மைகளாக உருவாக்கிக் கொடுக்கும் ஒரு விளம்பரச் செய்தியைப் படித்தேன். மிக அருமையாக இருந்தது. நம்மை நாமே சிறிய அளவில் பொம்மைகளாகப் பார்க்கும்போது எத்தனை அழகாக இருக்கிறது? இதுபோலவே, நம் இலட்சியங்களையும் மினியேச்சராக கற்பனை செய்து அந்த கற்பனையில் நாம் திளைத்தால் அதுகொடுக்கும் உற்சாகத்தில் நாம் இன்னும் சிறப்பாக உழைத்து இலட்சியத்தை வெகுவிரைவில் எட்ட முடியும்.
உங்கள் இலட்சியங்களை பெரியதாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கான ஒவ்வொரு படிக்கட்டையும் தாண்டும்போதும் அதை மாபெரும் வெற்றியாகக் கருதி மகிழும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுங்கள். அதாவது சிறிய வெற்றிகள் கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி போற்ற வேண்டும் தெரியுமா? உங்கள் இலட்சியத்தையே நீங்கள் அடைந்ததைப் போன்ற மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் சந்தோஷத்தின் ‘மினியேச்சர்’ வடிவமாக இருக்கட்டும்.
அப்போதுதான் அந்த சிறிய வெற்றிகள் கொடுக்கும் மகிழ்ச்சியில் மேலே சுலபமாக ஏற முடியும். அதை விட்டு இன்னும் எவ்வளவு தூரம் ஏற வேண்டும் என்ற பெருமூச்சுடன் அந்த இலட்சியத்தை குறித்தே நினைத்துக்கொண்டிருந்தால் மேலே ஏறுவது சிரமமாகும். காலமும் அதிகம் எடுத்துக்கொள்ளும்.
உதாரணத்துக்கு, உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்குவதுதான் உங்கள் இலட்சியம் எனில், அந்த நிறுவனம் குறித்து உங்கள் மனதுக்குள் இருக்கும் கனவை மினியேச்சராக உருவாக்குங்கள். அதை நடைமுறையில் கொண்டு வருவதும் செயல்படுத்துவதும் மிக சுலபம். 1000 நபர்கள் பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் தலைமையாக நீங்கள் உருவாக நினைத்தால் உங்களுடன் இணைந்து ஒரே ஒரு நபர் பணிபுரியும் நிறுவனத்தை உங்கள் வீட்டின் ஒரு அறையில்கூட தொடங்கலாம். 1000 நபர்கள் பணிபுரியும் நிறுவனம் எப்படி எல்லாம் செயல்படுமோ அதே பக்குவத்துடன், கட்டுக்கோப்புடன், ஒழுக்கத்துடன், நேர்த்தியுடன் உங்கள் வீட்டின் ஒரு அறையில் தொடங்கப்பட்ட நிறுவனத்திலும் கொண்டுவர முடியும். அது உங்கள் மனதில் இருக்கும் பிரமாண்ட இலட்சிய நிறுவனத்தின் ‘மினியேச்சர்’ உருவம்.
அடுத்து சில வருடங்களில் உங்கள் நிறுவனத்தை, வீட்டை விட்டு வெளியே சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து இடம் மாற்றலாம். இப்போது உங்கள் கனவின் மினியேச்சர் வடிவம் மெல்ல வளர்ந்து அடுத்த கட்டத்தை எட்டும். அந்த சிறிய இடத்தில் உங்கள் நிறுவனத்தில் என்னவெல்லாம் சிறப்பாக செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துகொண்டிருந்தால் அதன் வளர்ச்சி உங்கள் நிறுவனத்தை அடுத்தகட்ட உச்சத்துக்கு தானாகவே கொண்டு செல்லும்.
இப்படியாக உங்கள் இலட்சியக் கனவின் மினியேச்சர் வடிவத்தை உருவாக்கி அதை மெல்ல மெல்ல வளர்த்தெடுத்தால் உங்கள் கனவு உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் நிறைவேறும். உலக அளவில் இல்லாவிட்டாலும் நீங்கள் வசிக்கும் ஊரிலாவது உங்கள் உழைப்பால் உங்கள் திறமையால் நீங்கள் பேசப்படுவீர்கள்.
ஆகவே உங்கள் கனவை பிரமாண்டமாக வைத்துக்கொண்டு, கூடவே அதற்கான மினியேச்சர் வடிவத்தை உருவாக்கிக்கொண்டு உழைத்தால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைப்பது உறுதி.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP