ஜம்முனு வாழ காம்கேரின் OTP-162: மழையில் நனையும் விலை உயர்ந்த செருப்புகள்!


பதிவு எண்: 893 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 162
ஜூன் 11, 2021

மழையில் நனையும் விலை உயர்ந்த செருப்புகள்!

‘நான் இப்படி, நான் அப்படி’ என நாம் அடிக்கடி நம் இயல்பை வெளிப்படுத்தியபடி வாழ்வது என்பது நம் நிம்மதியை கெடுக்கும் ஒரு செயலாக அமைந்துவிடுவதுண்டு.

நம் குடும்பங்களையே கவனித்துப் பாருங்களேன். நம் பெரியோர்கள் பலர் முற்போக்கான சிந்தனைகளுடன் பரந்த மனப்பான்மையுடன் மனிதாபிமானத்துக்கும் அறத்துக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ்ந்துவிட்டுச் சென்றிருப்பார்கள். அவர்கள் யாருமே ‘நான் இப்படியாக்கும், நான் அப்படியாக்கும்’ என சொல்லிக் காட்டியபடி வாழ்ந்திருக்க மாட்டார்கள். தன் தரத்தை உயர்த்திக்கொள்ள எந்த உலகத் தலைவர்களையும் ஆன்றோர் சான்றோர்களைப் பற்றி எல்லாம் பேசிப் பேசி பொழுதை கழித்திருக்க மாட்டார்கள். குறிப்பாக யாரையும் ரோல் மாடலாக வைத்திருக்க மாட்டார்கள். தாங்களே ரோல் மாடலாக வாழ்ந்திருப்பார்கள். பல உன்னத செயல்களை செய்து நம் குடும்பத்துக்கு வழிகாட்டியாய் வாழ்ந்துவிட்டு சென்றிருப்பார்கள்.

ஆனால் இன்று சின்னதாக சிறு தூசியை, அதுவும் தன் மீது தன்னிச்சையாக வந்து விழுகின்ற தூசியை கைகளாலோ அல்லது வாயால் ஊதியோ புறந்தள்ளுவதையே பெரும் சாதனையாக பெருமை பேசும் குணம் பெருகியுள்ளது. ‘பாருங்களேன், என் மீது விழும் தூசியை நானே தள்ளிவிடுகிறேன்… எத்தனை நல்லவன் நான்’ என்று சொல்லாத குறையாக தற்பெருமை பேசும் குணம் மிக அதிகமாகிவிட்டது.

உலகத்தலைவர்களை கொண்டாடுவதன் மூலம் அவர்களைப் பற்றி பேசி கொண்டாடுவதன் மூலமும், எழுதித்தள்ளுவதன் மூலமும் தன் தரத்தை உயர்த்திக்கொள்ள முயல்கிறார்கள். ‘ஆஹா, எப்படிப்பட்ட சிந்தனைவாதி’ என இன்ஸ்டண்ட்டாகக் கிடைக்கும் புகழ்ச்சிக்கு மயங்குகிறார்கள்.

ஆனால் பிறருக்கு ‘நல்லவன், வல்லவன், சிறப்பானவன்’ என்ற பட்டம் கொடுப்பவர்களில் பலருக்கும் மனதில் ஓரத்தில் ‘எப்படியாவது இவன் தரம் கீழிறங்காதா?’ என்ற சின்ன குரூரம் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆகவேதான் சொல்கிறேன். நல்லவன் என பெயரெடுக்க யாரையும் துணைக்கு அழைக்காதீர்கள். உங்கள் சின்ன சின்ன அசைவுகளே அதை வெளி உலகுக்கு அடையாளம் காட்டும். எந்த அளவுக்கு உங்கள் இயல்பை மிகப் பிரயத்தனப்பட்டு வெளிப்படுத்திக்கொண்டே கடந்து செல்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை உங்களுக்கு பிரச்சனைகளும் பின் தொடர்கின்றன என அர்த்தம்.

நம் இயல்பு என்பது தானாக வெளிப்படுவது. தன்னிச்சையாக பிறரால் உணரப்படுவது. நீங்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக உங்கள் செயல்களில் கவனமாக இருந்தாலும், பிறர் மனதுக்குள் உங்கள் இருப்பினால் ஏதோ ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் உண்டாகிறது என பிறர் எண்ணுவார்களேயானால் நீங்கள் இயல்பாக வாழ்கிறீர்கள் என பொருள்.

நீங்கள் பிரம்மப் பிரயத்தனப்பட்டு உங்கள் இயல்பை வெளிப்படுத்திக்கொள்ள முயன்று அதன் மூலம் நல்ல பெயரை சம்பாதிக்க விரும்பி பேசிப் பேசியோ அல்லது பிறர் கவனத்தை ஈர்க்கும் செயல்களை செய்தோ கவர முற்பட்டால் உங்கள் இயல்புக்கு நீங்கள் முலாம் பூசுகிறீர்கள் என்றே பொருள்.

ஒரிஜினலுக்குத்தான் நிலையான மதிப்பு. முலாம் பூசப்பட்டவை இன்றில்லாவிட்டாலும் என்றாவது பல் இளிக்கும். கவனம்.

ஏனெனில் எல்லா நேரங்களில் நாம் கவனத்துடனேயே வாழ்வது என்பது சாத்தியமில்லைதானே?

உதாரணத்துக்கு செருப்பையே எடுத்துக்கொள்ளலாமே. ஒரு விலையுயர்ந்த செருப்பு, தண்ணீரில் நனைந்தால் வீணாகிவிடும் என்று தெரிந்தே வாங்கி இருப்பீர்கள். ஏதேனும் விருந்து விசேஷங்களுக்கு, பார்ட்டிகளுக்குச் செல்லும்போது போட்டுச் செல்வதற்காக வைத்திருப்பீர்கள். மிக மிக கவனமாகவே பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துவீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு நண்பர்களுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டே வருகிறீர்கள். நல்ல மழை பெய்ய ஆரம்பிக்கிறது. உங்கள் கவனம் செருப்பில் இல்லை. வேகமாக சென்று ஒதுங்க இடம் பார்ப்பீர்கள். நல்ல இடமாக பார்த்து மழையில் நனையாமல் ஒதுங்குவதற்குள் உங்கள் செருப்பு மழையில் நனைந்திருக்கும். வீடு வந்து சேரும்வரை செருப்பின் மீதான உங்கள் கவனம் உங்கள் மனதுக்குள் வரவே வராது. வீட்டுக்கு வந்து செருப்பை அதன் இடத்தில் வைக்கும்போதுதான் கவனம் வரும். இரண்டு நாட்களில் அந்த செருப்பு பயன்படுத்த முடியாத அளவுக்கு ஊறிப் போய் பிய்ந்தும் போய்விடும்.

அதுபோல்தான் உங்கள் இயல்புடன் நீங்கள் இயல்பாக வாழாமல் அதற்கு ஒரு வடிவம் கொடுத்து, மிகப் பிரயத்தனப்பட்டு வெளிப்படுத்திக்கொண்டு, ஊர் உலகத்தில் இருக்கும் சான்றோர்களை எல்லாம் வழிமொழிந்து வாழத் தொடங்கினால் என்றேனும் ஒருநாள், விலை உயர்ந்த செருப்பு சின்ன மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாமல் நனைந்து ஊறி துவண்டு பிய்ந்துப் போய் எப்படி பயனற்றதாகப் போகிறதோ அப்படி நீங்களும் உருமாறி சிதைக்கப்படுவீர்கள்.

ஏனெனில் உண்மையிலேயே உத்தமராக வாழ்பவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால் ‘நான் உத்தமன்’ என அடையாளம் போட்டுக்கொண்டு வாழ்பவர்களை இந்த உலகம் கீழே தள்ளி வேடிக்கைப் பார்க்க சந்தர்ப்பம் எதிர்நோக்கி இருக்கும். சிறிய இடைவெளி கிடைத்தால் போதும். கீழே தள்ளி தூற்றித் தள்ளிவிடும்.

எனவே நல்லவராக வாழுங்கள். ஆனால் ‘நான் நல்லவன்’ என அடையாளத்தை நீங்கள் வலுக்கட்டாயமாக அணியாதீர்கள். அந்த அடையாளத்தை உங்களுடன் பயணிப்பவர்கள் கொடுக்கட்டும். அதுவே நிலைத்திருக்கும்.

நல்லவர்களாக வாழ நினைத்தால் இயல்பிலேயே நல்லவர்களாக மாறிவிடுங்கள். அது ஒன்றுதான் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம்  கொடுக்கும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 573 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari