ஜம்முனு வாழ காம்கேரின் OTP-161: #MeToo பிரச்சனைகள்!

பதிவு எண்: 892 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 161
ஜூன் 10, 2021

#MeToo பிரச்சனைகள்!

சமீபமாக திரைத்துறை மட்டுமில்லாமல் பல்வேறு துறை சார்ந்து, பாலியல் சீண்டல்கள் குறித்த ‘மீடூ’ பிரச்சனைகள் கோரோனா அலையையும் மீறி தனி ட்ராக்கில் சென்றுகொண்டிருக்கிறது. எத்தனை கொரோனா வந்தால்தான் என்ன பெண்களுக்கான பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது.

இது குறித்து ஒருசில பெண்களிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் ‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது…’ என்று சட்டென  ‘சேம் சைட் கோல்’ போட்டார்.

‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது…’ அப்படி என்றால் என்ன என்று அவரிடம் கேட்டேன்.

‘நாம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்…’ என்று மீண்டும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மழுப்பலான பதிலையே சொன்னார்.

அதாவது அவரிடம் யாரும் வாலாட்ட முடியாதாம். ஏனென்றால் அவர் மிகவும் பர்ஃபெக்ட்டாம். அதுதான் அவர் மறைமுகமாக சொல்ல வந்தது.

ஒரு சில விஷயங்களில் நாம் எப்படித்தான் நடந்துகொண்டாலும் அந்த விஷயங்களை அந்த சூழல்களை நம்மால் இம்மியும் மாற்ற முடிவதில்லை. அதனால்தான் அடிக்கடி நான் சொல்வேன் ‘நம் சுயத்தை இழந்துதான் பணம், புகழ், பதவி எல்லாம் கிடைக்கும் என்றால் எவ்வளவு சீக்கிரம் அந்த சூழலை விட்டு வெளியே வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட வேண்டும். அப்படி செய்தால் கொஞ்சம் நிம்மதியாவது மிஞ்சும்’.

ஆனால் அதையும் 100 சதவிகிதம் பின்பற்றுவது சாத்தியம் இல்லாமல் போகிறது. தனியார் நிறுவனம் என்றால் வேலையை உதறிவிட்டு வேறு வேலைக்குக்கூட முயற்சிக்கலாம். ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் அரசாங்கப் பணியில் இருப்பவர் எப்படி அங்குள்ள ஒரு அதிகாரியால் உண்டாகும் பிரச்சனைக்காக வேலையை உதறிவிட்டு வர முடியும். அவரது வேலையும் மாதாந்திர சம்பளமும் அவருடைய குடும்பத்துக்கு எத்தனை அவசியம் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதற்காக அதை அவர் பொறுத்துக்கொண்டு பணி புரிய வேண்டுமா? என்று கேட்பதும் புரிகிறது.

ஆரம்பத்திலேயே நமக்குப் பிடிக்காத விஷயங்களை எதிராளி செய்யத் தொடங்கினால் அதை சொல்லிவிட வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்தாக இருந்தாலும், அப்படி சொன்னாலும் பிறரை சீண்ட வேண்டும் என முடிவெடுத்தவர்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள்.

எப்படி சொன்னாலும் அதை தங்களுக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்வார்கள். மென்மையாக சொன்னால் ‘எவ்வளவு நல்லவள் நீ. என் மீது இத்தனை நட்பிருப்பதால்தானே இவ்வளவு மென்மையாக பேசுகிறாய்?’ என்று சொல்வது, கடுமையாக கோபப்பட்டு சொன்னால் ‘எவ்வளவு அன்பானவள் நீ. என் மீது எத்தனை பாசம் உனக்கு. அதனால்தான் இப்படி உரிமையுடன் கடிந்துகொள்கிறாய். இப்படி உரிமை எடுத்துக்கொண்டு கடுமையாகப் பேசுவதே எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. யாரிடம் இப்படி கடுமையாகப் பேசுவார்கள். திகட்டத் திகட்ட அன்பிருப்பவர்களிடம் தானே இப்படி உரிமையுடன் கோபப்படுவார்கள்’ என்று சொல்வது.

இப்படி பெண்கள் எப்படித்தான் தங்கள் விருப்பு வெறுப்புகளை சொன்னாலும் அதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் ஆண்கள் இங்கு ஏராளம்.

விதிவிலக்குகளும் ஏராளம். எல்லோரையும் சொல்லவில்லை. எனவே இங்கு விவாதிக்கப்படும் விஷயத்தில் உள்ள நியாயத்தை மட்டும் கவனியுங்கள்.

உங்கள் வீட்டில் நீங்கள் பெற்றெடுத்த மகளுக்கு நீங்கள் எத்தனையோ அறிவுரைகள் சொல்லி இருப்பீர்கள். அதில் ஒன்று ‘பார்த்து பத்திரமா நடந்துக்கோம்மா… நீ வேலை செய்யும் இடத்தில் பலதரப்பட்ட மனநிலை கொண்ட ஆண்கள் இருப்பார்கள்… கவனம்’ என்று சொல்லாமல் வேலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர், குறிப்பாக அப்பாக்கள் யாரேனும் உண்டா?

அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம், இப்படி உடை அணிந்துகொள்வதால்தான் அப்படி நடந்துகொள்கிறார்கள், இப்படி சுதந்திரமாய் இரவு 10 மணிக்கு வேலை விட்டு திரும்பி வருவதால்தான் பிரச்சனைகள் வருகிறது என்று ஒரே மாதிரியான கருத்துக்களைக் காலம் காலமாக கேட்டுக் கேட்டு பெண்களின் காதுகளுக்குக் கூட சலிப்பாய் உள்ளது.

‘தூணுக்குப் புடவை கட்டி வைத்தால்கூட அதைப் பெண்ணாக நினைத்து மகிழும் ஆண்கள் இருக்கிறார்கள்’ என என் அம்மாவின் பாட்டி அதாவது எங்கள் கொள்ளுபாட்டி சொல்லி இருக்கிறாராம். நூறு வருடங்களுக்கு முன்பே இந்த நிலைதான்.

தினமும் ஆள் அரவம் அதிகம் இல்லாத காலைப் பொழுதில் பகல் ஷிஃப்ட்டுக்காகப் பணிக்கு தெருவில் நடந்து செல்லும் ஐம்பது ஐம்பத்தைந்து வயது பெண்களின் பின்னால் பைக்கில் சென்று ‘நான் உங்களை ரயில்வே ஸ்டேஷனில்விடுகிறேன். ஏறிக்கொள்ளுங்கள்’ என சொல்லும் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மறுத்தால் அவர்கள் பின்னாலேயே ஸ்டேஷன் வரை செல்வது, பைக்கை தள்ளியபடி அவர்களுடன் ஏதேனும் பேசிக்கொண்டே நடப்பது என அவர்கள் செயல்பாடுகள் இருக்கும்.

‘உதவுவது நல்ல விஷயம் தானே’, ‘லிஃப்ட் கொடுப்பது தவறில்லையே’ என்றெல்லாம் நினைக்காதீர்கள். அவர்கள் உதவி செய்யும் நோக்கத்தில் கேட்பதில்லை. ‘பாவம் நீங்கள், இப்படி தினமும் இத்தனை தூரம் நடந்து வருகிறீர்களே, என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள், நான் உங்களை உள்ளங்கைகளில் வைத்து தாங்குகிறேன்’ என்று ஒரு வயதில் மூத்த பெண்ணிடம் ஒரு இளைஞன் சொல்லி இருக்கிறான். ‘யப்பா தம்பி, எனக்கு உன் அம்மா வயதப்பா…’ என்று சொன்னபோது ‘இருந்தால் என்ன, மனம் ஒத்துப் போனால் வயதெல்லாம் பிரச்சனை இல்லை’ என்று சினிமா டயலாக் வேறு சொல்லி இருக்கிறான்.

இது எங்கோ நடக்கும் ஓரிரு விஷயங்கள் அல்ல. பரவலாக ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் அவலம். வெளியில் சொல்பவர்கள் குறைவு அவ்வளவுதான். மனதளவில் இப்படி சிதைந்து சீர்கெட்டுப்போன இளைஞர்கள் ஏராளம் இன்று.

விதிவிலக்குகளும் ஏராளம். எல்லோரையும் சொல்லவில்லை. எனவே இங்கு விவாதிக்கப்படும் விஷயத்தில் உள்ள நியாயத்தை மட்டும் கவனியுங்கள்.

தவிர கூட்டமாக இருக்கும் பஸ், ரயில்களில் நடக்கும் சீண்டல்களை சொல்லவே வேண்டாம். எத்தனை பேரால் தனி பைக்கிலும், காரிலும் அலுவலகம் சென்றுவர முடிகிறது?

போதாத குறைக்கு, இப்போது வெர்ச்சுவல் உலகில் சமூக வலைதள தொடர்பில் இருப்பவர்களால் உண்டாகும் பிரச்சனைகள் வேறு சேர்ந்துகொண்டுள்ளது. வீட்டில் பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருக்கும் வயது வந்த மகளையும், சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருக்கும் மனைவியையும், சுவாமி அறையில் பூஜை செய்து கொண்டிருக்கும் தந்தையையும், பால்கனி தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிர்ய்க்கும் தாயையும் வைத்துக்கொண்டே நடுக் கூடத்தில் சாட்டமாக அமர்ந்துகொண்டு மொபைலில் சமூக வலைதள தொடர்பில் உள்ள பெண்களிடம் வம்பு செய்யும் ஆண்கள்  இங்கு பெருகி வருகிறார்கள்.

விதிவிலக்குகளும் ஏராளம். எல்லோரையும் சொல்லவில்லை. எனவே இங்கு விவாதிக்கப்படும் விஷயத்தில் உள்ள நியாயத்தை மட்டும் கவனியுங்கள்.

இப்படியாக அறிந்தவர், அறியாதவர், தெரிந்தவர், தெரியாதவர், புரிந்தவர், புரியாதவர் என எல்லா திசைகளில் இருந்தும் ஏதேனும் ஒருவிதத்தில் சின்னதும் பெரியதுமாய் சீண்டல்கள் நிஜ உலகிலும், வெர்ச்சுவல் உலகிலும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

சிலருக்கு தங்களுக்குப் பிடித்தப் பெண்களை மனதால் நினைத்துக்கொண்டாலே போதும், சிலருக்கோ அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் போதும், சிலருக்கோ அவர்களுடன் நட்பாய் பேசிக்கொண்டிருந்தால் போதும்.

சிலருக்கோ அவர்களை வார்த்தைகளால் சீண்டிக்கொண்டிருந்தால் உல்லாசமாக இருக்கிறது. சிலருக்கோ மனரீதியாக தொந்திரவு கொடுத்தால் திருப்தியாக இருக்கிறது. இன்னும் சிலருக்கோ உடல் ரீதியாக பிரச்சனைகள் கொடுத்தால் நிம்மதி கிடைக்கிறது.

இப்படி சின்னதும் பெரியதுமாக பெண்களுக்கு எதிரான மென்கொடுமைகளும், வன்கொடுமைகளும் வயது வித்தியாசம் இன்றி அரங்கேறிக்கொண்டுதான் உள்ளன.

இன்று பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பொதுவெளியில் பேச முடிகிறது. அதுவும் தொழில்நுட்ப வளர்ச்சி கொடுத்த சுதந்திரம்.

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஆண்களுக்கு இல்லையா என கொடிபிடிக்க வேண்டாம். அவர்களுக்கு இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரானப் பிரச்சனைகள் காலம் காலமாக அரங்கேறிவருவதால் அதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டி உள்ளது.

இது ஒரு சமூகப் பார்வையிலான சுருக்கமான அலசல் மட்டுமே. விரிவாக பேசினால் இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் அதற்கான இடம் சமூக வலைதளம் அல்ல.

ஒரு பெண் பாதிக்கப்படும்போது சம்மந்தப்பட்ட ஒரு ஆண் தரமிழக்கிறான். அதுவும் ஒருவகையில் சமுதாய சீரழிவே. தானாக சீரழிந்தால் என்ன, பிறர் சீரழித்தால் என்ன சீரழிவும் சீரழிவதும் அவலம் தானே.

முற்றிலும் சீரழிவதற்கு முன் விழித்துக்கொள்வோம். ஏனெனில் நாமெல்லாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற ஆறறிவுள்ள மனிதர்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 904 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon