Mouse என்றால் சுண்டெலிதான், ஆனால் தொழில்நுட்பத்துக்கு?

#Clubhouse என்பதை தமிழில் எப்படி மொழிபெயர்க்கலாம் என்ற விவாதம் ஃபேஸ்புக்கில் வெகு சீரியஸாக நடந்து வருகிறதல்லவா? அது குறித்து நீண்ட விரிவான அலசல்!

பெண்கள் பத்திரிகை உலகில் முதல் தொழில்நுட்பத் தொடர்! 

1996-ம் ஆண்டில் ஒரு நாள். வழக்கம்போல் எனக்குள் ஒரு புது யோசனை. எடுத்தேன் இன்லேண்ட் கடிதத்தை. தலைப்பிட்டேன் ‘உலகம் உன் கையில்’ என. எழுதத் தொடங்கினேன் ‘அன்புள்ள எடிட்டருக்கு…’ என்று.

தமிழில் தொழில்நுட்பத் தொடரை எழுத ஆரம்பிக்க மங்கையர் மலருக்கு ஆலோசனை கொடுத்து கடிதம் எழுதினேன். அன்றைய தபாலில் சேர்த்தும் விட்டேன்.

அடுத்த சில தினங்களில் என்னை வரச் சொல்லி பேசினார்கள். என் துறை சார்ந்து பல விஷயங்களைக் கேட்டறிந்தார்கள். குறிப்பாக எங்கள் காம்கேர் குறித்து நிறைய. மகிழ்ச்சியுடன் வாழ்த்துச் சொல்லி தொடர் எழுதச் சொன்னார்கள்.

VSNL க்கு நிறைய தொலைபேசி அழைப்புகள்!

ஒருவருடம் தொடர்ச்சியாய் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இண்டர்நெட் இணைப்புக்கு வி.எஸ்.என்.எல் (VSNL) மட்டுமே. அவர்கள் அலுவலகத்துக்கு நேரில் சென்று நிறைய கேள்விகள் கேட்டு நானும் புரிந்துகொண்டு ஆய்வு செய்து நான் கற்ற அனைத்தையும் நம் மக்களுக்கு கொண்டு சேர்க்கத் தொடங்கினேன். அந்தத் தொடர் வந்தபிறகு VSNL அலுவலகத்துக்கு நிறைய போன் அழைப்புகள் வந்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தகவல் கொடுத்தார்கள்.

பத்திரிகை உலகில் பாரம்பர்யமிக்க கல்கி குழுமத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த பெண்கள் பத்திரிகையில் வெளியான அந்த கட்டுரைத் தொகுப்புதான் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் பத்திரிகையில் வெளியான முதல் தொழில்நுட்பக் கட்டுரை என்ற சிறப்பைப் பெற்றது. எனது முதல் தொழில்நுட்பக் கட்டுரைத் தொடரும் அதுவே.

ஆங்கிலத்தில் மவுஸ் என்பது சுண்டெலிதான், ஆனால் தொழில்நுட்பத்துக்கு?

நான் அந்தக் கட்டுரைத் தொடரை அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் தொழில்நுட்பம் சாராத பிற பிறவுகளில் இயங்கும் எழுத்தாளர்கள் சிலர் கம்ப்யூட்டர் வார்த்தைகளை தமிழ்படுத்துகிறேன் என மவுஸை ‘சுண்டெலி’ என மொழிபெயர்த்து கட்டுரைகள் எழுதப் பயன்படுத்திய கொடுமைகள்தான் நினைவுக்கு வருகிறது.

அந்த காலகட்டத்திலேயே பல தமிழ் பேராசிரியர்கள் என்னிடம் உங்கள் தொழில்நுட்பப் புத்தகங்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருக்கின்றன. அப்படி இருக்கக் கூடாது என வாதாடுவார்கள் . அதாவது நான் Computer-ஐ கம்ப்யூட்டர் என்றும், Internet-ஐ இண்டர்நெட் என்றுமே பயன்படுத்துவேன். கணினி, இணையம் என்றுகூட பயன்படுத்துவதில்லை. இன்றுவரையும் அப்படியே. Facebook – ஐ ஃபேஸ்புக் என்றும், Twitter – ஐ டிவிட்டர் என்றும், Whats App – ஐ வாட்ஸ் அப் என்றுமே பயனப்டுத்துகிறேன்.

இதில் தமிழுக்கு மரியாதை கொடுக்கிறேன், கொடுக்கவில்லை என்ற விவாதமே வேண்டாம். தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகவே நான் தமிழை பயன்படுத்த ஆரம்பித்தேன். நம் மக்களின் மொழி எதுவோ அதில் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தினால் வெகுவிரைவில் சென்று சேரும் என்பதால் தமிழை ஒரு கருவியாகப் பயன்படுத்தினேன். அவ்வளவுதான். இன்றும் அப்படியே.

யாமறிந்த மொழிகளிலே!

மேலும், நான் பத்து வயதில் இருந்து நாள் தவறாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதுவும் தமிழில். எனக்கு தமிழ் தவிர வேறு சில மொழிகள் தெரிந்திருந்தாலும் என் தாய் மொழி தமிழ். அதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

1992-காலகட்டங்களில் தொழில்நுட்பமே நம் நாட்டுக்குப் புதிது. நம் மக்கள் கம்ப்யூட்டரை பக்கம் தலைவைத்து படுக்கக் கூட அஞ்சிய கொடுமையான காலகட்டம். கம்ப்யூட்டர் ஆங்கிலம் அறிந்தவர்களுக்கானது, பட்டம் பெற்றவர்களுக்கானது, இளைஞர்களுக்கானது, அது வேலை வாய்ப்பை பறித்துவிடும் என்று ஏராளமான கற்பனைக் கட்டுக் கதைகள்.

அந்த கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் உடைத்தெறிந்து தமிழகம் முழுவதும் தொழில்நுட்பத்தை விழுப்புணர்வு இயக்கமாகவே ஆரம்பித்து கொண்டு சென்றதில் என் பங்கும் எங்கள் காம்கேரின் பங்கும் அதிகம் என்று பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

அப்படி இருந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வார்த்தைகளை நேரடி தமிழ்ப்படுத்தி இருந்தால் கம்ப்யூட்டரை படிக்க வேண்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் கூட தலைதெறிக்க ஓடியிருப்பார்கள்.

எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ என எந்தெந்த வழிகளில் எல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல முடிந்ததோ அந்தந்த வழிகளில் எல்லாம் கொண்டு சேர்த்தேன். அதனால்தான் எனது கம்ப்யூட்டர் புத்தகங்கள் தமிழகமெங்கும் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பல வெளிநாடுகளில் உள்ள முக்கிய நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன.

சில வருடங்களுக்கு முன்னர் அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படிக்கும் +1, +2 மாணவ மாணவிகளுக்காக அவர்களின் கம்ப்யூட்டர் புத்தகங்களை மல்டிமீடியா தயாரிப்பாக செய்து தருவதற்கு அழைத்திருந்தார்கள்.

அதை படித்தபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடபுத்தகத்தை தமிழில் படிக்க ஆரம்பித்தபோது அயற்சியே ஏற்பட்டது. இரண்டு பக்கங்களைக் கூட படிக்க முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நேரடி தமிழ்ப்படுத்தி இருந்தார்கள்.

நல்ல வேளை, நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடதிட்டத்தை தமிழ் மீடியத்தில் படிக்கவில்லை என நினைத்துக்கொண்டேன். நிச்சயம் நான் கம்ப்யூட்டர் சயின்ஸை +1, +2-வில் தமிழில் படிக்கச் சொல்லி இருந்தால் திணறியே போயிருப்பேன்.

Programs – கணிப்பொறி நிரல்

Data Type – தரவு இனங்கள்

Calculator – கணிப்பி

Encapsulation – உறைபொதியாக்கம்

Control statements – கட்டுப்பாட்டுக் கூற்றுகள்

Object Oriented Concepts – பொருள்நோக்கு நிரலாக்கக் கருத்துகள்

இப்படி ஒவ்வொன்றையும் நேரடி தமிழ் வார்த்தைகளாக்கி இருந்தார்கள். புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட தமிழ்ப்படுத்தப்பட்ட வார்த்தைகளாலேயே நிரம்பி இருந்தது. எதையுமே என்னால் உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

படித்து முடித்து வேலைக்கு வந்ததும் எந்த இடத்தில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தப் போகிறார்கள். அப்படியே இவர்கள் Odd Man Out ஆக தமிழில் பேசினாலும் அது எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடியும்? ஏன் தமிழ் பேசும் நம் நாட்டில் கூட எந்த அலுவலகத்திலும் இதுபோன்ற தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசவும் போவதில்லை, புரோகிராம் எழுதவும் போவதில்லை, சாஃப்ட்வேர்கள் உருவாக்கவும் போவதில்லை எனும்போது இத்தனை கடினமான நேரடியான மொழிபெயர்ப்புகளுக்கு அவசியம்தான் என்ன?

கம்ப்யூட்டர் சயின்ஸில் புரோகிராம் எழுதுவதும் சாஃப்ட்வேர் தயாரிப்பதுமே எல்லோருக்கும் கைவந்த கலை கிடையாது. ‘லாஜிக்கல் திங்கிங்’ எனப்படும் கணிதத்தின் அடிப்படையிலான நுண்ணறிவு அதிகம் இருப்பவர்களால் மட்டுமே இந்தத் துறையில் நிலைத்திருக்க முடியும்.

அப்படி இருக்க, கம்ப்யூட்டர் சயின்ஸில் புரோகிராம் எழுத சொல்லித்தரவே ஆசிரியர்கள் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்தில் அறிமுகமான முதல் செட்டிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸை பாடதிட்டமாக எடுத்து அதில் இரட்டை பட்டமும் பெற்று (எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து முடித்ததும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்ற சூழலிலும் அவற்றை எல்லாம் உதறித் தள்ளி நம் நாட்டிலேயே ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

எங்களைச் சுற்றி இயங்கும் வங்கிகள், பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள் என ஒவ்வொன்றாக அணுகி அவர்களின் தேவைகளின் ஒரு சிறு பகுதிக்கு சாப்ஃட்வேர்களை  நாங்கள் இலவசமாகவே உருவாக்கிக்கொடுத்து, நாங்களே கம்ப்யூட்டர்களை அசம்பிள் செய்து அதையும் சில நாட்கள் இலவசமாக அவர்கள் அலுவலகத்தில் அவர்களின் பயன்பட்டுக்காக வைத்து அவர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாட்டின் சுவையை உணர வைத்தோம்.

இப்படித்தான் பல்வேறு வங்கிகள் எங்கள் கஸ்டமர்களானார்கள். பல பள்ளிகளை கம்ப்யூட்டர் மயமாக்கினோம். பல மருத்துவமனைகளில் பேஷண்டுகளின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவாக்க வைத்தோம். மளிகைக்கடை, மெடிகல்ஷாப் என கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் அறிமுகம் செய்தோம். இத்தனையும் விண்டோஸ், விஷூவல் பேசிக், டாட்நெட், ஜாவா போன்ற சாஃப்ட்வேர்கள் பரவலாக அறிமுகம் ஆகாத ஆரம்ப நாட்களில் 1992 முதல் 1996-களுக்குள் நாங்கள் செய்த சாதனைகள்.

இப்படியாக தொழில்நுட்பத் துறையின் அத்தனை விஷயங்களையும் தமிழகமெங்கும், இந்தியா முழுவதும் கொண்டு சென்றதில் எங்கள் காம்கேர் நிறுவனத்திற்கும் என் உழைப்புக்கும் பெரும் பங்குண்டு.

காலம் செல்லச் செல்ல கம்ப்யூட்டரின் விலை குறைந்ததுடன், இன்டர்நெட்டின் பயன்பாடும் பரவலாக ஆரம்பிக்க, ஸ்மார்ட்போனே இன்று கம்ப்யூட்டருக்கு இணையாக ஆப்கள் மூலம் இயங்க ஆரம்பித்ததன் விளைவு அதிகம் படிக்காதவர்களும் தொழில்நுட்பத்தை மிக இயல்பாக கையாள்கிறார்கள்.

அதிலும் மொழிப் பிரச்சனையும் இல்லை. அவரவர் தாய்மொழியில் தொழில்நுட்பத்தைக் கையாளக் கூடிய சூழல் உருவான போது தொழில்நுட்பம் மக்களை வெகுவாக கவர்ந்தது. மிக சுலபமாக மக்களை சென்றடைந்தது.

மொழிப் பிரச்சனை, தொழில்நுட்பத்தைக் கையாள உதவும் ஸ்மார்ட்போன், லேப்டாப், இண்டர்நெட் இணைப்பு இவற்றின் விலை குறைப்பு என எல்லாமும் சேர்ந்துகொண்டு இன்று வெர்ச்சுவல் உலகில் மக்கள் தங்கள் வாழ்க்கையை இயல்பாக கடக்கிறார்கள்.

தமிழிலும் பிற மொழிகளிலும் கம்ப்யூட்டர் புத்தகங்கள்!

1992-ல் ஆரம்பித்த எங்கள் நிறுவனத்தின் வயது 28. இத்தனை ஆண்டுகளில் அவ்வப்பொழுது தொழில்நுட்ப ரீதியாக நான் பெற்ற அனுபவங்களை எல்லாம் அந்தந்த காலக்கட்டத்திலேயே புத்தகமாக தமிழில் கொண்டுவர ஆரம்பித்தேன்.

இதுவரை 150 புத்தகங்களுக்கும் மேல் எழுதி உள்ளேன். அதில் 120 தொழில்நுட்பம் சார்ந்தவை. முதலில் அதை தமிழில் எழுதி வெளியிட்டுவிடுவேன். பின்னர் அதில் தேவைக்கு ஏற்ப சில புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிடுவேன். ஒரு சில தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் வெளியாகி உள்ளன.

நீங்கள் மொழிபெயர்ப்பாளரா?

‘ஒரு சிலர் நீங்கள் மொழிபெயர்ப்பாளரா?’ என என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள்.  ‘இல்லை. நான் மொழிபெயர்ப்பாளர் கிடையாது’ என் தொழில்நுட்பப் புத்தகங்கள் அத்தனையும் என் அனுபவங்களின் தொகுப்பு. என்னிடம் முறையாக முன் அனுமதி பெற்று, என் புத்தகங்களைத்தான் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து சில பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துகிறார்கள்’ என்று சொல்வேன்.

நான் எழுதும் கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் சார்ந்த தொழில்நுட்பப் புத்தகங்களில் நான் எந்த ஒரு தொழில்நுட்ப வார்த்தையையும் நேரடி தமிழ்ப்படுத்தியதில்லை. தொழில்நுட்ப வார்த்தைகளை அப்படியேதான் பயன்படுத்தி வருகிறேன். உதாரணத்துக்கு சில. Object என்றால் ஆப்ஜெக்ட், Internet என்றால் இன்டர்நெட், Control statements என்றால் கன்ட்ரோல் ஸ்டேட்மென்ட்டுகள் இப்படி.

பல்கலைக்கழகங்கள் கொண்டாடும் தொழில்நுட்பப் புத்தகங்கள்!

நான் எழுதிய புத்தகங்களில் பல 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு பாடத்திட்டமாக உள்ளன.

பெரும்பாலும் தமிழ்த்துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டப் புத்தகங்களை அந்த மாணவர்கள் விரும்பிப் படிப்பதாக துறைத்தலைவர்கள் என்னிடம் மகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்கள்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சுத்த தமிழில் மொழிமாற்றம் செய்யாமல் நான் தொழில்நுட்ப வார்த்தைகளை அப்படியே எளிமையாக தமிழில் எழுதும் என் எழுத்துநடைதான் மாணவர்களுக்குக் கூட பிடித்திருக்கிறது. அதுவும் தமிழ்த்துறை மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும்.

எதையெல்லாம் மொழிபெயர்ப்பு செய்யலாம்?

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை பெயர்ச்சொற்களை   மொழிபெயர்க்கக்கூடாது.  ஒருமுறை ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற என் நிறுவனப் பெயரை ஒரு தமிழ் ஆர்வலர் ‘கணினிசார் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம்’ என்றுதான் பயன்படுத்த வேண்டும் என வாதாடினார்.  ‘தமிழ் நாட்டில் இருந்துகொண்டு ஆங்கிலத்தில் நிறுவனப்பெயர் வைத்துள்ளீர்கள்’ என்று கொஞ்சம் அத்துமீறி விவாதம் செய்தார்.

இது நடந்து 25 வருடங்கள் கடந்திருக்கும். அவருடன் நான் அன்று நீண்ட நேரம் பேசி புரிய வைக்க முயற்சித்தேன். அவர் ஏற்றுக்கொள்ளாமல் போக நானே  ‘இனி தொடர வேண்டாம்’ என கூறி முற்றுப்புள்ளி வைத்தேன்.

தொழில்நுட்பத்தை தமிழில் எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்?

பொதுவாக நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்கில் நான் வலியுறுத்தும் முக்கியமான விஷயத்தை இங்கு பதிவிடுகிறேன்.

‘மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை தமிழில் புரிய வையுங்கள். ஆனால் தொழில்நுட்ப வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே பயன்படுத்துங்கள்.

ஒரு லாஜிக்கை புரிய வைக்க தமிழ் மொழியைப் பயன்படுத்துங்கள். உதாரணத்துக்கு ‘இந்த நிபந்தனையின் பதில் சரி என வந்தால் இந்த ஸ்டேட்மெண்ட்டுகளை இயக்கவும், தவறு என வந்தால் அடுத்த ஸ்டேட்மெண்ட்டுகளை இயக்கவும்’ என்று தமிழ் வார்த்தைகளைச் சொல்லி புரிய வைக்கலாம்.

ஆனால் ஆங்கில வார்த்தைகளை மாற்றாமல் அப்படியே தமிழில் உச்சரியுங்கள். உதாரணத்துக்கு ‘இந்த நிபந்தனையின் பதில் சரி என வந்தால் இந்த கட்டளைக் கூற்றுகளை இயக்குங்கள், தவறு என வந்தால் அடுத்த கட்டளைக் கூற்றுக்களை இயக்குங்கள்’ என தூய தமிழில் கட்டளைக் கூற்றுக்கள் என்றெல்லாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஸ்டேட்மெண்ட்டுகளை அப்படியே தமிழில் உச்சரியுங்கள். அப்போதுதான் அவர்களால் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளவும் முடியும். அதே சமயம் படித்து முடித்து வேலையில் அமரும்போது இலகுவாக பலதரப்பட்ட மொழிகளில் படித்தவர்கள் ஒன்றுகூடும் நிறுவனங்களில் அவர்களுடன் ஐக்கியமாகி ஜெயிக்க முடியும்…’

தொழில்நுட்பக் கருத்தரங்குகளில் மட்டுமல்ல எங்கெல்லாம் தமிழும் கம்ப்யூட்டரும் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் இதே கருத்தைத்தான் நான் சொல்லி வருகிறேன்.

இன்று  ‘Club House’ – ஐ எப்படி தமிழில் பயன்படுத்துவது என்ற விவாதம் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது நாங்கள் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்து பல கோணங்களில் சிந்தித்துத் தேர்ந்தெடுத்த எங்கள் நிறுவனப் பெயரை தமிழில் இப்படித்தான் எழுத வேண்டும் என வாதாடிய அந்த தமிழ் ஆர்வலர் விவாதமே நினைவுக்கு வந்தது.

அதனால்தான் இந்த நீண்ட பதிவு.

நீண்ட பதிவை வாசித்த அனைவருக்கும் என் நன்றிகள்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
June 11, 2021

(Visited 150 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon