ஜம்முனு வாழ காம்கேரின் OTP-164: நீங்கள் மாற்றுத்திறனாளியானாலும் கைத்தூக்கிவிடும் மந்திரக்கோல்! (Sanjigai108)

பதிவு எண்: 895 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 164
ஜூன் 13, 2021

நீங்கள் மாற்றுத்திறனாளியானாலும் கைத்தூக்கிவிடும் மந்திரக்கோல்!

நேர்மையாக இருப்பதைப் பற்றியும், ஒழுக்கமாக இருப்பதைப் பற்றியும் எழுதும்போதெல்லாம், ‘சரியாகச் சொன்னீர்கள், அப்படி இருந்தால் எதையும் எட்டிப் பிடித்துவிடாலாம், எல்லாவற்றிலும் ஜெயித்து விடலாம், அனைத்திலும் முதலாவதாக இருக்கலாம்’ என்று பின்னூட்டமிடுபவர்களுக்கு அவ்வப்பொழுதே பதில் சொல்ல நினைத்திருக்கிறேன். ஆனால் அனைவருக்கும் பொதுவாக பதில் சொல்ல வேண்டியே தனிப்பதிவாக இன்று எழுதுகிறேன்.

நேர்மையாக இருப்பது…
ஒழுக்கத்துடன் நடந்துகொள்வது…
மனிதாபிமானத்துடன் வாழ்வது…
அறம் செய்வது…
அன்புடன் அணுகுவது…
பண்பைப் பேணுவது…

இப்படியெல்லாம் இருந்தால், நாம் என்னவோ செயற்கறிய செயல்களை செய்பவர்களைப் போல நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கான அடையாளமே மேலே சொன்ன விஷயங்கள்தான்.

இதெல்லாம் மனிதனுக்கு Add-On குணநலன்கள் கிடையாது. மனிதன் என்றாலே இதெல்லாம் இருந்தால்தான் அவன் மனிதன்.

இப்படியெல்லாம் இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் என்றோ, எல்லாவற்றிலும் ஜெயம்தான் கிடைக்கும் என்றோ, இலட்சியங்களை விரைவாக அடைந்துவிட முடியும் என்றோ நினைத்துவிட வேண்டாம்.

உங்களுக்கான வெற்றி தோல்விகள், இலட்சியங்கள் பூர்த்தியாதல், எடுத்தக் காரியங்கள் கைகூடுதல் இவை எல்லாம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளின் அடிப்படையில் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள்.

நேர்மை, ஒழுக்கம், அன்பு, பண்பு, மனிதாபிமானம் போன்றவை உங்கள் புறவாழ்க்கையின் அடையாளங்களான வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை. இவை உங்கள் அகவாழ்வை சுத்தப்படுத்துகிறது. அகவாழ்வு என்பது உங்கள் சந்தோஷம், மகிழ்ச்சி, நிம்மதி, பூரணத்துவம் பெறுதல், நேர்மறை எண்ணங்களை உங்களைச் சுற்றி பரவவிடுதல் இவற்றைக் குறிக்கிறது.

நீங்கள் ஒரே ஒரு அறைகொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தாலும் சரி, பல அறைகள் கொண்ட பங்களாவில் வாழ்ந்து வந்தாலும் சரி, நீங்கள் மகிழ்ச்சியாக நிம்மதியான வாழ்க்கை வாழ்வதே உங்கள் உண்மையான வெற்றி. அந்த நிம்மதிக்கு உத்திரவாதம் கொடுப்பதற்குத்தான் நான் மேலே சொன்ன மனிதனுக்கான அடையாளத்துடன் வாழும் கலை உதவுகிறது.

மாதம் ஒரு லட்சம் சம்பாதித்து, மூன்று நபர்கள் இருக்கும் வீட்டுக்கு முன் இரண்டு கார்கள் வாங்கி நிறுத்தி, நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து, எண்ணுவதையெல்லாம் எண்ணம்போல் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எல்லோராலும் செய்யக் கூடியதே. இதன் மூலம் கிடைக்கின்ற சந்தோஷமும் நிம்மதியும் அந்த வசதிகள் உங்களுடன் இருக்கும்வரைதான்.

ஆனால் உங்களுக்குள் அகமகிழ்ச்சியும், சந்தோஷமும், நிம்மதியும் நிரந்தரமாகக் குடியேறியிருந்தால் இந்த வசதிகள் எல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையோ இழந்ததைப் போன்ற உணர்வில்லாமல் வாழ முடியும்.

இப்படி அகம் சார்ந்து நிறைவாக வாழும் சூட்சுமம் அறிந்துகொண்டவர்களுக்கு புறத்தால் கிடைக்கும் வசதிகள் எல்லாம் வாழ்க்கையை இலகுவாக வாழ்வதற்கு உதவும் கருவிகளாக மட்டுமே உணரும் பக்குவம் இருக்கும்.

ஏதேனும் ஒரு காரணத்தால் வீட்டில் இருக்கும் காரை விற்கும் நிலை ஏற்பட்டாலோ அல்லது மாத சம்பளம் திடீரென குறைந்தாலோ அந்த சூழலை எதிர்கொள்ளும் பக்குவத்தை அகம் சார்ந்து நிறைவாக வாழும் உங்கள் குணாதிசயம் உங்களுக்குக் கைக்கொடுக்கும்.

அகம் சார்ந்த பூரணத்துவத்தைப் பெறுகின்ற கலையில் நேர்மை, ஒழுக்கம், மனிதாபிமானம், அன்பு, பண்பு இவை எல்லாம் வரும். இவை உங்களை ஒருபோதும் கைவிடாது. புற வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றை இழக்கும்போது உங்களுக்குக் கைத்தாங்கலாக இருப்பதே உங்கள் அகவாழ்க்கையே.

உங்கள் அகத்தை சரியாக வலுவாக கட்டமைத்துக்கொண்டால் உங்கள் புற வாழ்க்கை நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும். அகத்தை கட்டமைக்கும் ஆற்றல் இல்லாத அல்லது கற்காத அல்லது முயற்சிக்காதவர்கள் புறத்தால் பாதிக்கப்படும்போது விபத்தில் உடல் உறுப்புகளை இழந்த மாற்றுத்திறனாளிபோல் மாறிவிடுவார்கள்.

எனவே புற வாழ்க்கையில் வசதிகளை மேம்படுத்த மேம்படுத்த அகவாழ்க்கையில் உங்கள் பண்புகளுக்கு மென்மேலும் வலுசேர்த்துக்கொண்டே இருங்கள். அவைதான் உங்கள் வாழ்க்கையை சமன் செய்யும் அற்புத ஆற்றல் பெற்ற மந்திரக்கோல்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon