ஜம்முனு வாழ காம்கேரின் OTP-165: ‘எங்கள் Boss செம போல்ட்’!

பதிவு எண்: 896 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 165
ஜூன் 14, 2021

‘எங்கள் Boss செம போல்ட்’!

பொதுவாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றாலே அவர்கள் ஏற்றிருக்கும் பொறுப்பில் பாதி வெற்றியை அடைந்துவிட்டதைப் போல்தான்.

வீடுகளையே எடுத்துக்கொள்ளுங்களேன். பொதுவாக அதிகம் படிக்காத அம்மாக்கள் இருந்த முந்தைய தலைமுறை வீடுகளில் அம்மாவை விட அப்பாவுக்கே மதிப்பு அதிகம் இருந்ததை பார்த்திருக்கலாம். அம்மா என்றால் சமையல், சாப்பாட்டு, அன்பு, அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான இடையே கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு தூதுவர் இவ்வளவுதான்.

காரணம் அவர்கள் உணர்வுப் பூர்வமாக இருப்பார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷிப்பதும், சட்டென உடைந்து அழுவதும், எதைச் சொன்னாலும் நம்புவதும் என அவர்கள் உணர்வுரீதியாக மிக எளிமையாக அவர்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குணாதிசயங்களினால் இருக்கலாம்.

ஆனால் அவள் எத்தனை தைரியமானவள், எத்தனை உறுதியானவள், எத்தனை தன்னம்பிக்கையானவள், எத்தனை சக்திவாய்ந்தவள், எத்தனை புத்திசாலி என அவள் உள்ளுணர்வுக்கு தெரியும். வெளிப்படுத்திக்கொள்ள மாட்டாள்.

அவளுக்கு தான் மிக மென்மையாக அடையாளப்படுத்தப்படும் பாங்கு மிகவும் பிடித்திருந்ததால் அதை மாற்ற அவளும் விரும்பவில்லை. அந்த மென்மை தன்மையினால் தன் குழந்தைகளை தன் அரவணைப்பிலேயே அடைகாத்து வந்தாள். அதனால்தான் ஆண் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆனதும் அவர்கள் தங்களில் பாதியை இழந்ததைப் போல உணர ஆரம்பித்து மருமகளை தன் மகனை அபகரிக்க வந்த ஜீவனாகப் பார்க்க ஆரம்பிக்கிறாள். ஆண்களும் மனைவிடம் சதா ‘என் அம்மா சமையலைப் போல் வருமா?’, ‘என் அம்மா போல அன்பாய் இருக்க முடியுமா?’ என சொல்லி வாங்கிக்கட்டிக் கொண்டே இருப்பார்கள்.

முந்தைய தலைமுறை அப்பாக்கள் அத்தனை சீக்கிரம் அன்பை வெளிக்காட்டிக்கொண்டுவிட மாட்டார்கள். குழந்தைகளிடம் பாசம் இருந்தாலும் அதை அம்மாக்கள் மூலமே அவர்களிடம் கடத்துவார்கள். இதனால்தான் அவர்கள் உணர்வுரீதியாக பாதிக்கப்படாமல் தைரியமானவர்கள், அறிவாளிகள், தன்னம்பிக்கையானவர்கள், சக்தி வாய்ந்தவர்கள் என கொண்டாடப்பட்டார்கள். அவர்கள் படித்திருந்தாலும் படித்திருக்காவிட்டாலும். முக்கால்வாசி அப்பாக்கள் சின்ன விஷயத்துக்கே துவண்டுவிடும் குணம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அம்மாக்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் அவர்கள் வீராப்புடன் வளைய வருவார்கள். ஆனால் வெளியில் அதெல்லாம் தெரியாது. பிள்ளைகளால்கூட அதை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு தங்கள் உணர்வுகளை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் வல்லவர்கள்.

இப்படித்தான் நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்குமான வித்தியாசமும். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு ஆண் தன்னிடம் பணிபுரியும் பணியாளர்களிடம் தன் கோபத்தை நேரடியாக காண்பிக்கவே மாட்டான். அன்பாக இருப்பதைப் போலவே நடந்துகொண்டு தனக்குக் கீழ் பணிபுரியும் அடுத்த தலைமையிடம் தன் கோபத்தை பணியாளர்களிடம் கடத்தும் பணியை ஒப்படைத்துவிடுவான். ‘மாட்டிக்கொள்வது’ தலைமையின் சொல்லைக் காப்பாற்றும் பொறுப்பில் உள்ள அடுத்த தலைமை. இதனால்தான் பெரும்பாலான நிறுவனங்களில் பி.ஆர்.ஓக்களும், பி.ஏக்களும் பணியாளர்களுக்கு வில்லன்களாகவே காட்சி தருவார்கள். ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை’ என சபிப்பார்கள்.

உண்மையிலே நடப்பது என்ன? அந்த சாமிதான் தன் சட்ட திட்டங்களை நடத்திவைக்க பூசாரியை முன்னிருத்திப் பேச வைக்கிறது.

ஆனால் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களில் என்னதான் அவர்களுக்கான பி.ஆர்.ஓக்களும், பி.ஏக்களும் இருந்தாலும் அவ்வப்பொழுது நேரடியாக(வும்) தன் கட்டுப்பாட்டை இழந்து கோபத்தையும், டென்ஷனையும் வெளிக்காட்டிக்கொண்டுவிடுவார்கள். சட்டென எரிந்து விழுந்துவிடுவார்கள். இதனால் அவர்கள் மீதான மதிப்பை இழந்துவிடுகிறார்கள்.

ஒரு நிறுவனத்தின் ஆண் தலைமை கோபத்தை வெளிப்படுத்தினால் அது ‘வேலை டென்ஷன்’ என்ற கோணத்திலும் ஒரு பெண் தலைமை கோபத்தை வெளிப்படுத்தினால் அது ‘வீட்டில் என்ன பிரச்சனையோ… சிடுமூஞ்சி’ என்ற கோணத்திலுமே அணுகப்படுகிறது.

எனவே எந்த ஒரு தலைமையும் பிறரால் கொண்டாடப்பட வேண்டும் என்றால் தங்கள் உணர்வுகளைக் கையாளப் பழக வேண்டும். அதற்கான பயிற்சி வேண்டும். இல்லை என்றால், உங்களை எப்படி உணர்வு ரீதியாக காயப்படுத்தலாம் என்பதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு உங்களை சமயம் பார்த்து அடிப்பார்கள். உங்களுக்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டே பின்னால் நின்றுகொண்டு நிறுவனத்தை வீழ்த்துவார்கள்.

உணர்வுகளை நேரடியாக வெளிக்காட்டிக்கொள்ளாதீர்கள். பாராட்ட வேண்டும் என்றாலோ, குற்றம் குறைகள் சொல்ல வேண்டும் என்றாலோ அவற்றை  ‘ப்ரொஃபஷனலாக’ கையாளுங்கள். வீடுகளில் நினைத்ததை நினைத்த நேரத்தில் பேசுவதைப் போல அலுவலகத்தில் தோன்றிய நேரத்தில் எல்லாம் பேசாதீர்கள்.

உங்கள் முன் அவர்கள் கட்டுண்டு கைகட்டி வாய்பொத்தி கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் பின்னால் என்ன பேசுவார்கள் தெரியுமா?

‘எங்கள் பாஸை எப்படி கையாள்வது என எனக்குத் தெரியும்’, ‘அவரை வழிக்குக்கொண்டு வருவது சுலபம்’, ‘அவருக்கு ஆமாம் சாமி போட்டால்போதும், காரியத்தை சாதித்துக்கொள்ளலாம்’ என மிக மோசமான பிம்பத்தை உங்கள் மீது வைத்துக்கொண்டிருப்பார்கள். வெளிப்படையாக தங்களுக்குள்ளும் பொதுவெளியிலும் பேசுவார்கள்.

‘எங்கள் பாஸ் அம்மாவைப் போல பாசமானவர்கள், மிக அன்பாக இருப்பார்கள்’ என்ற பெயரெடுப்பதற்காக வீட்டில் குழந்தைகளிடம் கையாளும் அதே நுணுக்கத்தை அலுவலகத்தில் கையாளாதீர்கள்.

‘எங்கள் பாஸ் செம போல்ட்… அவரது ஆளுமையை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது’ என்று தன்னம்பிக்கையான உறுதியான பிம்பத்தைப் பெறுவதற்கு முயற்சியுங்கள். பெண் தலைமைகளும் கொண்டாடப்படுவீர்கள்.

பெண் என்பதை எந்த ஒரு கோணத்திலும் ஒரு கருவியாக்காதீர்கள். நீங்கள் ஒரு தலைமை என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த  சூழலையும் ஜெயித்துவிடலாம்.

போரை தலைமை ஏற்று நடப்பவர் எதிரிகளின் படைபலத்தைப் பார்த்து பயந்து நடுங்கினால் டென்ஷன் ஆனால் அவரால் எப்படி அவரது படையை தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்? வழி நடத்த முடியும்? அவருக்குள் டென்ஷன் இருந்தாலும், படபடப்பு இருந்தாலும் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல், அவற்றைத் தன் கட்டுக்குள் வைத்து ஆளுமை செய்து, பீடு நடைபோட்டு படையை முன்னிருத்தி எதிரியுடன் போர் செய்து வென்றால் ‘வெற்றியாளன்’, தோற்றால் ‘வீரன்’ என்ற பட்டத்துடன் வெளிவருபவனே வெற்றிகரமான தலைமையாகத் திகழ முடியும்.

எல்லா இடங்களிலும் அன்பு மட்டும் போதாது ஜெயிப்பதற்கு, வீரமும் கூடவே விவேகமும் வேண்டும் ஜெயிப்பதற்கு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 796 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari