ஜம்முனு வாழ காம்கேரின் OTP-163: ஸ்மார்ட்போனின் காதுகளும் கண்களும் மிக ஷார்ப்!

பதிவு எண்: 894 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 163
ஜூன் 12, 2021

ஸ்மார்ட்போனின் காதுகளும் கண்களும் மிக ஷார்ப்!

முன்பெல்லாம் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்காக ஸ்டுடியோவில் சொல்லி வைப்போம். அவர்கள் வந்து நிகழ்ச்சியை ரெகார்ட் செய்வார்கள். குறிப்பாக வீடியோவில் உள்ள பின்னணி குரல்களையும் சப்தங்களையும் ‘மியூட்’ செய்துவிட்டு வேறு ஏதேனும் இசையை சேர்த்து இனிமையான வீடியோவாக எடிட் செய்து கொடுப்பார்கள்.

ஆனால் இன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கிறார்கள்.

அவை வெறும் வீடியோக்களாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஒவ்வொருவர் கைகளில் இருப்பதும் CCTV காமிரா போல் அல்லவா செயல்படுகிறது?

பெரும்பாலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கலைகட்டுவதே உறவுகளின் புகார்களினாலும், புரளிகளினாலும், வம்புகளினாலும்தானே. அவை அவர்களுக்குள்ளான சாதாரண பேச்சு வார்த்தைகளாக இருந்துவிட்டால், ‘டைம்பாஸ்’ உரையாடல்களாக இருந்துவிட்டால் பரவாயில்லை. அவர்களின் ‘கிசுகிசு’ பேச்சுகள் எத்தனை குடும்பங்களை பாதிக்கின்றன என்பதை அவர்கள் தெரிந்துதான் செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடித்துக்கொண்டே செய்கிறார்களா? ஒன்றும் புரியவில்லை.

சுபநிகழ்ச்சிகள் சுபமான விஷயங்களுக்காக நடைபெறுவது. நல்ல விஷயங்களைப் பேசி நல்லவற்றை பரப்ப வேண்டும். அப்படி நல்ல விஷயங்களைப் பேச முடியாவிட்டாலும், கெட்ட விஷயங்களைப் பேசாமலாவது இருக்க வேண்டும்.

எல்லாமே சரியாக இருந்தாலும் ‘பாரேன், கல்யாணப் பொண்ணுக்கு இத்தனை சிம்ப்பிளா புடவை எடுத்திருக்கிறார்கள்…’, ‘மாப்பிள்ளை பார்க்கிறதுக்கே சகிக்கலையே, எப்படி இவனை தேர்ந்தெடுத்தார்கள்?’, ‘பொண்ணுக்கு கொஞ்சம் மூக்கு நீட்டா இருக்கே…’, ‘என்னை மாப்பிள்ளை வீட்டில் மதிக்கவே இல்லை…’, ‘பொண்ணு வீட்டில் என்னை கண்டுக்கவே இல்லை. நான் வந்து ஒருமணி நேரம் ஆகிறது, காபி சாப்பிடறியான்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை’ இதெல்லாம் கல்யாண வீடுகளில் நடைபெறும் வம்பு பேச்சு வார்த்தைகள்.

இத்துடன் அவர்கள் பேச்சு வார்த்தைகள் நின்றுவிட்டால் பரவாயில்லை. ‘மாப்பிள்ளை பையன் ஒரு பொண்ணை லவ் பண்ணி இருக்கான். அது ப்ரேக் அப்பாம். அதான் அவங்கப்பாம்மா சட்டுபுட்டுன்னு இந்த சம்மந்தந்த முடிச்சுட்டாங்க’, ‘ஆமாமாம், பொண்ணு மட்டும் என்ன அதுக்கும் சற்றும் குறைஞ்சவளா, அவளுக்கும் ஒரு பையனோட ப்ரேகப்பாம்…’, ‘உனக்கு சங்கதி தெரியாதா, பொண்ணு வேறொரு பையனோட லிவிங் டுகெதரா ஒரு வருஷம் வாழ்ந்திருக்கா… என்ன பிரச்சனையோ…’ என அவர்களின் பேச்சு வார்த்தைகளில் விஷம் ஏற ஆரம்பித்தால், அவர்களுக்குள் ரகசியமாக கிசுகிசுவென பேசிக்கொள்ளும் விஷயங்கள் துல்லியமாக அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் நபரின் போனில் ரெகார்ட் ஆகிக்கொண்டிருக்கும்.

அவர் வேண்டுமென்றே வேவு பார்ப்பதற்காக அவர்களின் உரையாடல்களை ரெகார்ட் செய்திருக்க மாட்டார். அவர் மிக இயல்பாக தன் போனில் நிகழ்ச்சியை பதிவு செய்துகொண்டிருப்பார். அவ்ருக்கு அருகில் இருந்து பேசுபவர்களின் உரையாடல்கள் காதில்கூட விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஸ்மார்ட்போனின் காதுகள் கொஞ்சம் ஷார்ப்!

அவர்கள் என்ன பின்னணி சப்தங்களையும் பேச்சு வார்த்தைகளையும் மியூட் செய்துவிட்டா எடிட் செய்து பயன்படுத்தப் போகிறார்கள்?

அப்படியே சுடச்சுட ரெகார்ட் செய்து சுடச்சுட யு-டியூபில் பதிவேற்றியோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பகிர்ந்து விடுகிறார்கள்.

ஒரு வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சியில் அசுப விஷயங்களை பேசிக்கொண்டிருப்பவர்களின் பேச்சு வார்த்தைகள் ஊர் உலகம் முழுவதும் பரவி சிரிப்பாய் சிரிக்கும்.

மேலும் இப்போதெல்லாம் ட்ரோன் நுட்பத்தில் பறந்து பறந்து புகைபடம் மற்றும் வீடியோக்கள் எடுக்கிறார்கள். எங்கிருந்து எப்படி பேசினாலும் எப்படியாவது உரையாடல்கள் பதிவாவது உறுதி.

எனவே மாட்டிக்கொண்டால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. தப்பிக்க வாய்ப்பே இல்லை. ‘என்ன தலையையா சீவிவிடப் போகிறார்கள்?’ என்று எகத்தாளமாக நினைத்துவிடாதீர்கள். தலை போனால்கூட பரவாயில்லை. உங்கள் இமேஜ், உங்கள் மீதான நம்பிக்கை, உங்கள் மீதான மதிப்பு, அன்பு, பாசம் இப்படி அத்தனையும் தூள் தூளாகிவிடும். கவனம்.

அதுவும் சின்னதும் பெரியதுமாக ஏதேனும் திருட்டு நடந்தாலும் மிக சுலபமாக கண்டுபிடித்துவிட முடிகிறது. ‘வாட்ஸ் அப் குழுமத்தில் யார் யார் எல்லாம் வீடியோ எடுத்தீர்களோ அதை எங்களுக்கு ஃபார்வேர்ட் செய்ய முடியுமா?’ என ஒரு கேள்வியை மணமகன் / மணமகள் வீட்டில் எழுப்பினால் அத்தனை பேரும் பெருமகிழ்ச்சியுடன் தாங்கள் எடுத்த வீடியோவைப் பகிரப் போகிறார்கள். பெரிய பெரிய திருட்டுகள் எல்லாம் இப்படி நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் போனில் எடுக்கும் வீடியோக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரு சிறுவன் மணமகன் அறையில் அவருக்கு அலங்காரம் செய்யும்போது வேடிக்கைப் பார்ப்பதற்காக கூடவே இருந்து அவருடைய ப்ரேஸ்லெட்டை எடுத்து தன் டிராயர் பையில் போடுவதை கண்டுபிடித்துள்ளார்கள். அந்த சிறுவன் மணமகளின் உறவினர். கேட்கவா வேண்டும் விவகாரத்துக்கு?

மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் விஷயத்தைச் சொல்ல ‘நாங்கள் என்ன திருட்டுப் பரம்பரையா’ என அவர்கள் தங்கள் பரம்பரையை இழுத்து பேச்சு வார்த்தை முற்றி திருமணமே விவாகரத்தில் சென்று முடிந்தது.

அதுவும் இப்போது கொரோனா காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மிகக் குறைவு என்பதால் ஒவ்வொருவர் மூச்சு விடும் சப்தம் கூட மிக துல்லியமாக போனில் ரெகார்ட் ஆகிறது.

எனவே உங்களைச் சுற்றி பல CCTV கேமிராக்கள் உங்களை உற்று நோக்குகின்றன என்பதை மறந்து விடாதீர்கள். மறந்தும் வம்பு பேசாதீர்கள். ஒருசிலர் பேசியபடி வீடியோ எடுப்பார்கள். அவர்கள் பேச்சு சுவாரஸ்யமான நகைச்சுவையான சம்பாஷனைகளாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. வம்பாக இருந்துவிட்டால் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

ஏனெனில் நம் கைகளில் உள்ளது வெறும் ஸ்மார்ட்போன் அல்ல, CCTV கேமிரா என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பொது இடங்களில் பேசுங்கள். ஸ்மார்ட்போன்கள் CCTV காமிராவுக்கு நிகரானது. மிக கவனம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 3 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari