பதிவு எண்: 908 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 177
ஜூன் 26, 2021
நம்மிடம் உதவி பெற்றவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துவது ஏன்?
நம்மிடம் ஏதேனும் ஒரு வகையில் உதவியை கேட்டுப் பெற்றவர்கள்தான் நம்மை அதிகம் காயப்படுத்துவார்கள் என்பதை நாம் ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். இப்படியும் சொல்லலாம், நம்மை நன்கு அறிந்தவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துவார்கள்.
காரணம்?
நம்மிடம் ஒருவர் ஓர் உதவியை கேட்கிறார் என்றால், அவர் நம்மை நன்கு அலசி பிழிந்து காய வைத்துவிட்டுத்தான் நம்மிடம் பேசவே ஆரம்பித்திருப்பார். நம்மை நாம் அறிந்ததைவிட அவர் நன்கு அறிந்து வைத்திருப்பார். காரணம் அவருக்கு நம்மிடம் வேலை ஆக வேண்டும். அது ஒன்றுதான் அவருடைய ஒரே நோக்கம். நம்மிடம் எப்படி கேட்டால், எந்த வகையில் பேசினால், எந்தக் கோணத்தில் நயிச்சியமாக வார்த்தைப் பிரயோகங்கள் செய்தால் அவரது காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பார். அத்துடன் நம் பலம், பலவீனம் அனைத்தையுமே புரிந்து வைத்திருப்பார். நம் பலத்தைப் பயன்படுத்தி ஆதாயம் அடைவதைப் போல பலவீனத்தைப் பயன்படுத்தி நம்மை மனதளவில் காயப்படுத்தவும் செய்வார்.
அந்த வேலை முடிந்ததும் அவர் கண்களில் இருந்து நாம் மறைந்துவிடுவோம். நம்மை தொடர்பு எல்லைக்கு வெளியே வைத்துக்கொள்வார். அதன் பிறகு நம் தேவை அவருக்கு ஏற்பட்டால் திரும்பவும் தொடர்பு எல்லைக்கு வருவார். கொஞ்சமும் கூச்சமோ, வருத்தமோ, சங்கோஜமோ வைத்துக்கொள்ள மாட்டார்.
இப்போதெல்லாம் மற்றுமொரு மோசமான குணம் பெருகி வருகிறது. உதவி கேட்பவர்கள் என்ன கேட்கிறார்களோ அதை அப்படியே செய்துதர வேண்டும், அதில் கொஞ்சம் மாற்றம் செய்து உதவினால் அது அவர்களைப் பொறுத்தவரை உதவியே இல்லை. அதனால் நாம் செய்யும் செயலை மதிப்பதும் இல்லை.
உதாரணத்துக்கு, என் நிறுவனத்தில் தங்கள் பிள்ளைகளுக்காக கல்லூரி ப்ராஜெக்ட் செய்வதற்காக அணுகுவார்கள். அவர்களுக்கு ஏற்ற ப்ராஜெக்ட் என்னுடைய நிறுவனத்தில் இல்லை என்றால், அவர்களின் படிப்புக்கு ஏற்ற நிறுவனத்தை அணுகச் சொல்லி ஏற்பாடு செய்துகொடுத்தால்கூட நாம் செய்த உதவியை புறம் தள்ளுவதுடன் ‘என்னவோ பெருசா ஐடியா கொடுக்க வந்துட்டா, எங்களுக்குத் தெரியாதா அங்கெல்லாம் செல்ல…’ என மனதுக்குள் ஏளனத்துடன் செல்வார்கள்.
கல்லூரி ப்ராஜெக்ட் செய்யாமலேயே செய்ததைப் போல் சான்றிதழ் கேட்பார்கள். ‘பணம்கூட கொடுத்துவிடுகிறோம்’ என்று பெருமிதமாக சொல்வார்கள். இதுபோன்ற செயல்களை நான் ஊக்கப்படுத்துவதில்லை என்பதால் அதையும் நான் தெளிவாகவே சொல்லிவிட்டு மறுத்தால் ‘என்னவோ, இவதான் உலகத்திலேயே நியாயவாதி போல…’ என எகத்தாளமாக பார்ப்பார்கள்.
சின்னச் சின்ன உடல் மொழிகள் கூறும் ஓராயிரம் அர்த்தங்களை புரிந்துகொள்ளும் கலையையெல்லாம் அறிந்து வைத்திருக்காவிட்டால் எப்படி ஒரு நிறுவனத்தை தொய்வில்லாமல் இத்தனை ஆண்டுகள் கொண்டு செல்ல முடிந்திருக்கும்?
மேலும், உள்ளுணர்வின் சக்தி அதிகம் இருப்பதால் பெரும்பாலும் நடக்க இருப்பதை என் மனம் முன்கூட்டியே எடுத்துச் சொல்லி எச்சரிக்கை மணி அடித்து உணர்த்திவிடும்.
சரி சரி விஷயத்துக்கு வருகிறேன். நம்மிடம் உதவி பெற்றவர்கள்தான் நம் முதுகில் குத்தும் முதல் நபராக இருப்பார்கள் என்ற விவாதத்துக்கு வருகிறேன்.
மனிதர்களின் சுயநலம் பெருகிவிட்டதால் ஏற்பட்ட மனச்சிதைவு இது. தனக்குக் காரியம் ஆக வேண்டும். அது ஒன்றுதான் ஒரே நோக்கம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். இதில் என்ன தவறு இருக்கிறது. நான் என்ன உலகத்தில் நடக்காததையா செய்துவிட்டேன்? இப்படி அவரவர் மனதுக்கு ஆயிரம் காரணங்களை சொல்லிக்கொள்ளலாம்.
மனசாட்சியே மரத்துப் போகும் அளவுக்கு நம் எண்ணங்களின் வீச்சு கைமீறி சென்றுவிட்டதால் ஏற்பட்டுள்ள துயரமான காலத்தின் கோலம் இது.
ஒருமுறை எங்கள் அப்பாவின் கிராமத்துக்குச் சென்றிருந்த போது வயதில் முதிர்ந்த ஒரு பாட்டி கூன் போட்டபடி பரிதாபமாக அமர்ந்துகொண்டு ஒரு குடிசையில் சமைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவருக்கு உதவி செய்யலாம் என நினைத்து 200 ரூபாயைக் கொடுத்தோம். அதற்கு அவர் என்ன சொல்லி இருப்பார் என நினைக்கிறீர்கள்?
‘இந்த 200 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஒரு புடவை கூட வாங்க முடியாது…’ என சர்வ சாதாரணமாக முனகிக்கொண்டே சென்றார்.
மனித மனம் எப்படி எல்லாம் மாறிவிட்டது. கால மாற்றத்தில் இன்றைய தலைமுறையினர்தான் மாறுவிட்டார்கள் என்றால், சென்ற தலைமுறையினரும் அந்த ஜோதியில் கலந்துவிட்டார்கள்.
இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், உதவி செய்ய முடிவெடுத்துவிட்டால் உதவி பெற்றவர்களின் உடல் மொழியையும் அவர்களின் எண்ணங்களையும் அவர்கள் நமக்குப் பின் பேசும் வார்த்தைகளையும் புறம் தள்ளிவைக்க முடிந்தால் உதவி செய்வோம். அதற்குத் திராணி இல்லை என்றால் உதவி செய்துவிட்டு வருந்துவதை விட வேறு வழியில்லை.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP