ஜம்முனு வாழ காம்கேரின் OTP-176: அப்பாவின் பிறந்த நாளும், மூன்று வாழ்த்துகளும்!


பதிவு எண்: 907 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 176
ஜூன் 25, 2021

அப்பாவின் பிறந்த நாளும், மூன்று வாழ்த்துகளும்!

முக்கியக் குறிப்பு: கடைசியில் கொடுத்துள்ள முக்கியக் குறிப்பை படிக்கத் தவறாதீர்கள்!

நேற்று என் அப்பாவின் நட்சத்திரப் பிறந்த நாள். நான் என்ன பரிசு கொடுத்தேன் தெரியுமா?

அப்பா தினமும் காலையில் எழுந்ததும் வருகின்ற மூன்று இடங்களில் மூன்று வாழ்த்துக்களை என் கையால் எழுதி வைத்தேன். ஏன் மூன்று வாழ்த்துகள்? எனக்கு ஒரு தம்பி, தங்கை. நாங்கள் மூவர். எனவே மூன்று வாழ்த்துகள்.

முதலில் அவர் வருவது எங்கள் வீட்டு பூஜை அறைக்கு. முதல் வாழ்த்தை ஒரு பேப்பரில் எழுதி பிள்ளையாரின் கையில் வைத்தேன்.

இரண்டாவது அவர் குடிப்பதற்காக வெந்நீர் போடுவார். வெந்நீர் போடும் பாத்திரம் இருக்கும் இடத்தில் இரண்டாவது வாழ்த்தை ஒரு பேப்பரில் எழுதி வைத்தேன்.

மூன்றாவதாக அவர் வெந்நீரில் வெந்தயப்பவுடர் கலந்து குடிப்பார். அந்த வெந்தயப்பவுடர் உள்ள ஷெல்பில் மூன்றாவது வாழ்த்தை ஒரு பேப்பரில் எழுதி வைத்தேன்.

வழக்கப்போல் அப்பா பூஜை அறைக் கதவை திறந்த போது பிள்ளையார் கைகளில் இருந்த வாழ்த்துப் பேப்பர் பறந்து வந்து அப்பாவின் உடலில் ஒட்டிக்கொண்டது.

‘வாழ்த்து 1/3: அப்பா, இதுவரை நீ நினைத்தவை எல்லாம் உன் நல்ல குணத்தால் நல்லபடியாகவே நடந்து வருகிறது. பிறந்த நாளான இன்று முதல் நீ நினைத்தில் ஏதேனும் நடக்காமல் இருந்தால் அவை இறை அருளால் நல்லபடியாக நடக்க பிராத்திக்கிறேன்’

அப்பாவுக்கு மிக மிக சந்தோஷம். நான் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த என் இடத்துக்கு வந்து  ‘வாழ்த்தெல்லாம் சூப்பரா இருக்கே. பிள்ளையாரே எனக்குக் கொடுப்பதைப்போல பறந்து வந்தது’ என சொல்லிவிட்டுச் சென்றார். வாழ்த்தையும் ஆசிர்வாதத்தையும் மானசீகமாகப் பரிமாறிக்கொண்டோம்.

அப்பாவின் மகிழ்ச்சியை இன்னும் நீட்டிக்க நான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு அப்பாவுடனேயே சமையல் அறை சென்றேன்.

பிள்ளையார் கொடுத்த வாழ்த்தில் மகிழ்ந்து குதூகலத்துடன் வெந்நீர் போடும் இடத்துக்குச் சென்றார். அங்கு அந்த பாத்திரத்தின் மீதுள்ள பேப்பரை எடுத்துப் பார்த்தார்.

‘வாழ்த்து 2/3: இந்த உலகில் உன்னைப் போல ஒரு பெருந்தன்மையான அப்பா யாரேனும் இருப்பார்களா என தெரியவில்லை. நாங்கள் பாக்கியசாலிகள்’

இதைப் படித்தபோது அப்பாவின் கண்கள் கலங்கின. வளர்த்தவர்களுக்கு கிடைக்கும் ஆகச் சிறந்த நன்றிக் கடனே, அவர்களின் வளர்ப்பை அங்கீகரிப்பதும், கொண்டாடுவதும்தானே?

கண்ணீரை மறைத்துக்கொண்டு மென்மையாக சிரித்தபடி ‘என்ன வாழ்த்து வந்து கொண்டே இருக்கிறது?’ என கேட்டபடி வெந்தயப் பவுடரை எடுக்க ஷெல்ஃபைத் திறந்தார்.

அங்கிருந்த பேப்பரை எடுத்தார். படித்தார்.

‘வாழ்த்து 3/3. அப்பா, உன் நல்ல குணத்துக்கு இன்னும் கூடுதலான மன அமைதியோடு வாழ்வதற்கான சூழல் கடவுள் அருளால் இன்று முதல் உன் வசப்படட்டும்.’

அப்படியே அங்கிருந்த சேரில் அமர்ந்தார். மீண்டும் ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தார். பின்னர் பிள்ளையார் கைகளில் கொண்டு வைத்துவிட்டு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.

2007-ம் ஆண்டு அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் 1-1/2 மணிநேரம் ஓடக்கூடிய ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து சென்னை தி.நகர் வாணிமஹாலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அப்பா அம்மாவின் 40-வது திருமண நாளின் போது அப்பா அம்மாவுடன் பணி புரிந்த 100-க்கும் மேற்பட்ட நண்பர்களை அழைத்து காட்சிப்படுத்தி விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆவணப்படம் எடுத்தது, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது, அப்பா அம்மாவின் நண்பர்களை அழைத்தது எல்லாமே சர்ப்ரைஸ். எதுவுமே நிகழ்ச்சி ஹாலுக்கு என் பெற்றோரை அழைத்துச் செல்லும் நிமிடம் வரை அவர்களுக்கே தெரியாது. நான் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்றே நினைத்திருந்தனர். அப்படித்தான் அவர்களுக்கு சொல்லி அழைத்துச் சென்றிருந்தேன்.

அன்று எப்படி மகிழ்ந்தாரோ என் அப்பா அதே மகிழ்ச்சியை நேற்று நான் என் கைகளால் எழுதிக்கொடுத்த மூன்று வாழ்த்துக்களின்போதும் வெளிப்படுத்தினார்.

நாங்கள் ஆவணப்படம் எடுத்து காட்சிப்படுத்திய போது எங்கள் உறவினர்கள், குடும்ப நண்பர்கள் அனைவரின் வீடுகளிலும் அவர்களின் பிள்ளைகளுக்கு எங்களையே ரோல்மாடலாக சொன்னார்களாம்.

அப்போது ஒரு சில இளைஞர்கள் ‘அவர்கள் தொழில்நுட்பத்திலேயே இருப்பதால் அவர்களால் ஷீட்டிங், எடிட்டிங் எல்லாம் செய்ய முடிகிறது… நாங்கள் வேறு துறை’ என்று அவர்கள் வாயை அடைத்தார்களாம்.

அதற்கு நான், ‘மனம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எப்பேற்பட்ட சந்தோஷத்தையும் பெற்றோர்களுக்குக் கொடுக்க முடியும்… அதற்கு செலவு செய்து ஆவணப்படம் தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. பிள்ளைகள் தங்கள் கைகளால் எழுதிய ஒற்றை வாழ்த்து செய்திகூட அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கும்’ என்றேன்.

பிள்ளைகளுக்கு எத்தனை வயதானால்தான் என்ன, பெற்றோர்களுக்கு எத்தனை வயதானால்தான் என்ன? பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்போதுமே குழந்தைகள்தான். அவர்கள் என்ன பரிசாகக் கொடுத்தாலும் மகிழ்வார்கள்.

விதிவிலக்காக ‘நீ என்ன பெருசா பரிசு கொடுத்துட்டே, பட்டுப் புடவை கொடுத்தியா?’ என்று கேட்கும் அம்மாக்களும், ‘என் செலவுக்கு பத்தாயிரமா கொடுத்தாய் எல்லா கண்ட்ரோலையும் நீதானே வைத்திருக்கிறாய்?’ என்று சொல்லும் அப்பாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

முக்கியக் குறிப்பு:

அப்பாவை நீ வா போ என ஒருமையில் எழுதி இருப்பதை யாரும் விமர்சிக்க வேண்டாம். இறைவனையே பக்தியின் உச்சத்தில் ஒருமையில்தானே அழைக்கிறோம். ‘கடவுளே உனக்கு கண் இல்லையா, இத்தனை கஷ்டப்படறேனே’ என மனதுக்குள் புலம்புவதில்லையா? அதுபோல்தான் அன்பின் உச்சமும், எல்லைகள் அற்றப் பாசத்தின் வெளிப்பாடுகள்தான் பெற்றோரை ஒருமையில் அன்புடன் அழைப்பது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 689 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon