எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இணையத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எனக் கூறும், காம்கேர் கே.புவனேஸ்வரி: கடந்த 1990களில், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மெல்ல அடி எடுத்து வைத்தது. 1996க்கு பிறகு இன்டர்நெட், கம்ப்யூட்டருடன் இணைய ஆரம்பித்து, இணைய பெருவெளியை ஆக்கிரமித்து கொண்டு, ‘விர்ச்சுவல்’ உலகத்தை உருவாக்கி, அழகு பார்த்து வருகிறது.தகவல்களை எழுத்து வடிவில், ஒலி வடிவில், ஒலி – ஒளி வடிவில் பெறுவதற்கு உதவுவதற்கு ஏராளமான ‘சாப்ட்வேர்’ களும், செயலிகளும், ‘டூல்’களும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சரியானதை தேர்வு செய்ய தெரிந்து வைத்திருக்க வேண்டியது, நம் ஒவ்வொருவரின் கடமை.இப்படி, மனிதர்கள் விர்ச்சுவல் உலகில் தனித்துவத்துடன் இயங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அதை பயன்படுத்தும் சூட்சுமத்தை அறிய வேண்டியது மட்டுமே நாம் எடுக்கும் முயற்சியாகும். அந்த சூட்சுமத்தை அறிந்து கொண்டால், வீட்டில் இருந்தபடி ஜமாய்க்கலாம்.நாம் வாழும் இந்த உலகத்தை போலவே, இணையத்தில் உலா வரும் மற்றொரு உலகமே விர்ச்சுவல். இதில் நாம் ஒவ்வொருவரும் பயணப்படவும், அந்த பயணம் இனிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையப்பெற, சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும்; உல்லாசமாக உலா வரலாம்.குறிப்பாக, நாம் பயன்படுத்தும் ‘லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்’கள் வைரஸ் பாதிக்காமல் இருக்க, ‘ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்’ வாங்கி, ‘இன்ஸ்டால்’ செய்து கொள்ளலாம்.
அடுத்து, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் நம்மை பற்றியும், நம் குடும்பத்தை பற்றியுமான ‘பர்சனல்’ தகவல்களை வெளிப்படுத்துவதில், கவனமாக இருக்க வேண்டும்.உங்கள் பிறந்த தேதி, தொலைபேசி எண் இவற்றை எல்லாம் ‘பப்ளிக் செட்டிங்’கில் வெளிப்படுத்தாமல், ‘ஒன்லி மீ’ செட்டிங்கில் பொருத்திக் கொள்ளுங்கள்.அதுபோல, ‘சிங்கிள் சேலஞ்ச், கப்பிள் சேலஞ்ச்’ என்பது போன்ற பொதுவான ‘ட்ரெண்டிங்’குகளில் பங்கேற்பதை தவிர்க்கவும். இந்த ‘ஹேஷ் டேக்’குகளை பயன்படுத்தி உங்கள் குடும்ப புகைப்படங்களை பகிர்வது மிக ஆபத்தானது.முன்பெல்லாம் பொது இடங்களில், ‘சத்தமாக பேசாதீர்கள்’ என, நம் வீட்டு பெரியவர்கள் அறிவுரை சொல்லி வழிநடத்தினர்.
இன்று உலகத்துக்கே தெரிவதை போல, நம் பர்சனல் விஷயங்கள் அத்தனையையும் கொட்டி தீர்க்கிறோம் பொது வெளியில்!எதை எல்லாம் இணைய பொதுவெளியில் வெளிப்படுத்தலாம், வெளிப்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தால், இணையவெளி பயணம் பாதுகாப்பாக, இனிமையாக அமையும்!
– தினமலர் ஜுன் 25, 2021