ஜம்முனு வாழ காம்கேரின் OTP-179: ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு! (Sanjigai108)

பதிவு எண்: 910 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 179
ஜூன் 28, 2021

ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு!

ஒரு சிறிய ஊர். ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஒரு மாணவி. ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். அவளுடைய படிப்பு ஆர்வத்துக்கு உதவுவதற்காக அந்தப் பேராசிரியர் அந்த மாணவிக்கு டியூஷன் எடுக்க முடிவெடுக்கிறார்.

முதல் நாள் வகுப்புக்கு செல்கிறார் அந்த மாணவி. ஐந்து நிமிடம் தாமதம். ஆசிரியர் கடிகாரத்தையும் அந்த மாணவியையும் மாறி மாறிப் பார்க்கிறார்.

‘சாரி சார், என்னுடைய வாட்ச் ஐந்து நிமிடம் ஸ்லோ’ என காரணம் சொல்கிறாள்.

‘முதலில் உன் வாட்ச்சில் சரியான நேரத்தை வைத்துக்கொள்… நீ ரேசில் கலந்துகொள்ள இருக்கிறாய். நேரம்தான் எல்லாவற்றுக்கும் மிக முக்கியம்’ என ஆங்கிலத்தில் அறிவுரை சொல்கிறார் அந்த பேராசிரியர்.

அந்த மாணவி தான் கொண்டு வந்திருந்த தடிதடியான புத்தகங்களை அவர் முன் உள்ள டேபிளில் வைத்துவிட்டு ‘சார், இந்த புத்தகமெல்லாம் போதுமா, வேறு ஏதாவது வேண்டுமா?’ என கேட்கிறாள்.

‘இதெல்லாம் புத்தகங்கள் அல்ல. Guide. உன்னை கைட் செய்ய நான் இருக்கேன்…’ என  சொல்லிவிட்டு அவளிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து அதை படித்துக்கொண்டு வர சொல்கிறார்.

அந்த பேப்பரைப் பார்த்த மாணவிக்கு முகத்தில் ஆச்சர்யம். அதில் A முதல் Z வரை பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதி இருந்தது. ‘சார், ஏபிசிடி தானே சார், எனக்கு நல்லா தெரியும்’ என சொன்ன மாணவியை பார்த்து அந்தப் பேராசிரியர் ‘நான் சொல்வதை செய்’ என ஆங்கிலத்தில் சொல்கிறார்.

அவள் வீட்டுக்கு வந்ததும் அவள் தோழிக்கு போன் செய்கிறாள். தோழியிடம்  ‘அந்த ஆசிரியர் சரியான காமெடி பேர்வழி’ என சொல்லி தன்னை ஏபிசிடி படித்து வரச் சொல்லி இருக்கிறார் என கிண்டலாக சொல்கிறாள்.

அடுத்தநாள் மிக உற்சாகத்துடன் வகுப்புக்கு சரியான நேரத்துக்குச் செல்கிறாள். அந்தப் பேராசிரியர் அவளிடம் ஏபிசிடி-யில் இருந்தே கேள்விகளைக் கேட்கிறார்.

‘ஏபிசிடி- சொல்லு…’

மாணவி மிக உற்சாகத்துடன் சொல்கிறாள்.

‘Z – ல் இருந்து சொல்லு…’

மாணவி அதே உற்சாகத்துடன் சொல்கிறாள்.

‘முதல் எழுத்து என்ன?’

மாணவி ‘A’ என்கிறாள்.

‘26-வது எழுத்து என்ன?’

மாணவி ‘Z’ என்கிறாள்.

‘17-வது எழுத்து என்ன?’

மாணவி இப்போது கொஞ்சம் குழப்பத்துடன் விரல்களைவிட்டு எண்ணி ‘Q’ என்கிறாள்.

‘12-வது எழுத்து என்ன?’

இப்போது மாணவி இன்னும் சற்று குழப்பமாகி விரல்களின் துணையுடன் எண்ண ஆரம்பிக்கிறாள்.

அந்தப் பேராசிரியர் அவளை முடிக்க விடவில்லை. ‘எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்… இன்னிக்குப் போய் நன்றாக கான்சண்டிரேட் செய்து படிச்சுட்டு நாளைக்கு வா…’ என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.

அந்த மாணவி கொஞ்சம் வருத்தத்துடன் வகுப்பில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருகிறாள். ஆசிரியர் எழுதிக் கொடுத்த ஏபிசிடி பேப்பரை கையில் வைத்துக்கொண்டு வேறு மாதிரி படிக்கத் தொடங்கினாள்.

A for 1, B for 2, C for 3, D for 4 என வாய் விட்டுப் படிக்கத் தொடங்க அதற்குள் அவளுடைய தோழியிடம் இருந்து போன் அழைப்பு. ‘என்னடி அந்த ஆள் என்ன காமெடி செய்தார் இன்று’ என்று எகத்தாளமாகக் கேட்ட தோழிக்கு ‘அவர் எவ்வளவு பெரிய புரொஃபசர்… அவரைப் போய் அந்த ஆள் அது இது என்று சொல்கிறாய். நான் நாளைக்கு டெஸ்ட்டுக்கு தயாராகனும்… முதல்ல போனை வை’ என்று சொல்லிவிட்டுப் படிக்கத் தொடங்குகிறாள்.

அடுத்த நாள் மிகச் சரியான நேரத்துக்கு வகுப்புக்குச் செல்கிறாள்.

பேராசிரியர் அவளிடம் ‘தயாராக வந்திருக்கிறாயா? என கேட்டுவிட்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறார்.

’14-வது எழுத்து என்ன?’, ‘19-வது எழுத்து என்ன’ என்ற கேள்விகளுக்கு N, S என சரியாக சொன்னாள், விரல்களைவிட்டு எண்ணாமல் மனக்கணக்கிலேயே.

அவளை பாராட்டிவிட்டு போர்டில் N+S என எழுதி விடை கேட்க 33 என சொல்கிறாள். N^2 + S^2 என்ற கேள்விக்கு சில நொடிகள் மனதில் கணக்கிட்டு 557 என மிகச் சரியாகச் சொல்கிறாள். அடுத்து Y^2 + K – B^2 * g^2 என்ற கேள்விக்கு அவள் தன்னுடைய நோட்டில் எழுதி கணக்கிட்டு 440 என சரியான விடை சொல்கிறாள்.

பேராசிரியர் அவளைப் பாராட்டிவிட்டு ‘நன்றாக புரிந்துகொண்டு செய்கிறாய். ஆனால் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாய்… வீட்டுக்குப் போய் நன்றாக ப்ராக்டிஸ் செய்துவிட்டு நாளைக்கு வா’ என சொல்லி அனுப்புகிறார்.

அந்த மாணவி உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்து தன் அறையில் அமர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறாள். அதற்குள் அவளுடைய சகோதரன் அவளுடைய தோழி அழைப்பதாக மொபைலை கொண்டுதர ‘நான் இல்லைன்னு சொல்லிடு’ என சொல்லச் சொல்லி படிப்பில் கவனமாகிறாள்.

இப்படியாக அவளுடைய பயிற்சி வகுப்பு, மூன்றாம் நாளைக் கடந்து நான்காவது நாளை அடைகிறது.

அடுத்த நாளும் மிகச் சரியான நேரத்துக்குச் செல்கிறாள். பேராசிரியர் அவளுக்காக போர்டில் 10 கேள்விகளை எழுதி வைத்திருக்கிறார். அவளிடம் 10 நிமிடங்களில் அந்த 10 கேள்விகளுக்கும் பதிலை எழுதச் சொல்கிறார்.

அந்தப் பேராசிரியருக்கு முன் இரண்டு டீ கப்புகள் இருந்தன. அதில் ஒன்றில் டீயை ஊற்றி குடித்தார்.

பத்து நிமிடங்கள் முடிந்ததும் மாணவியின் விடைத்தாளை அவளிடம் இருந்து வேகமாக எடுக்க முயல்கிறார். இன்னுமொரு ஐந்து நிமிடம் கொடுக்கச் சொல்கிறாள் அந்த மாணவி. ‘இதுபோல எக்ஸாம் ஹாலில் கேட்பாயா?’ என கேட்டுக்கொண்டே விடைத்தாளை பார்வையிடுகிறார்.

‘சரியாகத்தான் பதில் சொல்லி இருக்கிறாய். ஆனால் 10 கேள்விகளில் 6 கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லி இருக்கிறாய்…’ என்று சொல்லிக்கொண்டே அவர் டேபிளுக்கு முன் இருந்த மற்றொரு டீ கப்பில் டீயை ஊற்றி அவளிடம் கொடுத்து குடிக்கச் சொல்கிறார். அவளும் குடிக்கிறாள்.

இதற்குள் அவர் போர்டில் Concentrate, Understand, Practice என எழுதிவிட்டு அவளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிக்கிறார்.

‘நீ வகுப்புக்கு வர ஆரம்பித்த இந்த மூன்று நாட்களில் நீ என்ன கற்றுக்கொண்டாய்? முதல் நாள் உனக்கு கான்சண்டிரேட் செய்ய சொல்லிக்கொடுத்தேன். அடுத்த நாள் பாடத்தை புரிந்துகொண்டு படிக்கச் சொல்லிக்கொடுத்தேன். மூன்றாவது நாள் உனக்கு பயிற்சி எடுக்க கற்றுக்கொடுத்தேன். இன்னிக்கு உன்னால் 10 கேள்விகளுக்கு 6 கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடிந்தது. இன்னும் கொஞ்சம் நன்றாகப் புரிந்துகொண்டு கூடுதலாகப் பயிற்சி எடுத்தால் உன்னால் 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்ல முடியும். ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு இவ்வளவுதான்.

எவ்வளவு பேர் பரிட்சை எழுதறாங்க… அதில் எவ்வளவு பேர் பாஸ் செய்யறாங்க என்றெல்லாம் நீ கவலைப்பட வேண்டாம். தேர்வு ஹாலில் உன் கையில் கேள்வித்தாள். அதில் 90 கேள்விகள். உனக்கு 180 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்படும். ஒரு கேள்விக்கு 2 நிமிடம். அதில் நீ எத்தனை கேள்விக்கு சரியா பதில் சொல்லப் போகிறாய் என்பதுதான் முக்கியம். எல்லா கேள்விகளுமே உன் சப்ஜெக்ட்டில் இருந்துதான் கேட்பார்கள். நீ ஏபிசிடி-தானேன்னு அலட்சியமா இருந்த மாதிரி இல்லாமல், எல்லா பாடங்களையும் நன்றாக கான்சன்டிரேட் செய்து ஆழமாக புரிந்துகொண்டு படிக்கணும். படிச்சதை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யணும்.

சரி, அப்போ இந்த வகுப்பில் என்ன பண்ணப் போறோம்னு கேட்கறியா? ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு வைக்கப் போகிறேன். தேர்வு இல்லாத நாட்களில் உன் சந்தேகங்களை தீர்த்து வைப்பேன். உன் தேர்வுக்கு 300 நாட்கள் இருக்கின்றன. ஆக ஒரு நாள்விட்டு ஒருநாள் தேர்வு எழுதினால் மொத்தமாக 150 முறை தேர்வு எழுதி பயிற்சி எடுத்துவிடுவாய்.

உன் உண்மையான தேர்வு நாள் அன்று நீ எழுதப் போகும் தேர்வு 151-வது தேர்வாக இருக்கும். அப்போது உனக்குள் இருக்கும் தைரியமும் பயிற்சியும் உன்னை சரியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை எழுதி முடிக்க வைக்கும்… என்ன சார் சொல்வது புரிகிறதா?’

என கேட்டுவிட்டு அந்தப் பேராசிரியர் வெற்றிக்கான மந்திரமாக மற்றொரு விஷயத்தையும் சொல்கிறார்.

‘நீ எப்படி டீ குடித்தாய்?’

‘கப்பில்…’

‘ஆங்… டீயை சுவைக்க ஒரு கப் தேவையாக இருக்கிறதல்லவா, அதுபோல்தான் வெற்றியை சுவைக்கவும் ஒரு கப் உள்ளது. அதுதான் வெற்றிகான மந்திரம்’ என சொல்லி போர்டில் எழுதி இருந்த Concentrate, Understand, Practice என்ற மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தை வட்டமடித்துக் காட்டி, இந்த CUP தான் வெற்றியை சுவைக்க உதவும் மந்திரம் என சொல்கிறார்.

C- Concentrate – வகுப்பில் கவனமாக இருத்தல்,

U – Understand – பாடங்களை ஆழமாக புரிந்துகொள்ளுதல்,

P- Practice – தினந்தோறும் பயிற்சி எடுத்தல்

இதுவே வெற்றியின் மந்திரம் என்று விளக்கம் கொடுத்து நாளை முதல் மாதிரி தேர்வு ஆரம்பம் என சொல்கிறார். இந்த மந்திரத்தை என்றும் மறக்கவே கூடாது என அட்டகாசமாக அறிவுரை சொல்கிறார்.

அந்த மாணவியின் முகத்தில் பரவசம். பேராசிரியரின் அனுமதி பெற்று தான் குடித்த டீ கப்பை வெற்றிக்கான மந்திரமாகக் கருதி தன்னுடன் எடுத்துச் செல்கிறாள்.

இந்த காட்சி ‘கமலி From நடுக்காவேரி’ என்ற திரைப்படத்தில் வருகிறது.

இந்தக் காட்சியில் சொல்லப்பட்டிருக்கும் ABCD லாஜிக்கும், Tea CUP லாஜிக்கும் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு அவசியம் தேவை. உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,072 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon