பதிவு எண்: 911 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 180
ஜூன் 29, 2021
இலக்கியா கேட்ட ஒரு கேள்வி!
நேற்று நான் எழுதி இருந்த ‘கமலி From நடுக்காவேரி’ என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியை ஒட்டியப் பதிவுக்கு நல்ல வரவேற்பு.
ஃபேஸ்புக்கில் மட்டுமில்லாமல் என் வெப்சைட்டிற்கும் நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக +1 படிக்கும் ஒரு மாணவியிடம் இருந்து வந்திருந்த போன் அழைப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
அவள் போனில் என்னை அழைத்து, நான் எடுத்ததுமே தன் பெயரைச் சொல்லி தான் இன்னார் மகள் என முறையாக அறிமுகம் செய்துகொண்டது (என் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வரும் திரு. கோபி சரபோஜியின் மகள்), இப்போது உங்களால் பேச முடியுமா அல்லது பிசியாக இருந்தால் பிறகு அழைக்கிறேன் என மரியாதையாக பேசியது என எல்லாமே அவள் வளர்ப்பின் சாட்சியங்களாயின.
அவள் அழைத்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் பத்து நிமிடங்கள் கழித்து நானே அழைப்பதாகக் கூறினேன்.
அவளுடைய அப்பா அந்தப் பதிவை அவளுக்கும் அவளுடைய சகோதரனுக்கும் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்து படிக்கச் சொல்லி இருக்கிறார். அந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் அதற்கு நன்றி சொல்வதற்காகவும் போன் செய்ததாகக் கூறினார்.
‘ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி. உங்கள் பதிவில் இருந்து நான் இன்று எப்படிப் படிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். எனக்கு ஒரு சந்தேகம், கேட்கலாமா?’ என்றாள்.
‘ஓ… தாராளமா’ என்றேன்.
‘ஏன் ஆண்ட்டி, எங்களுக்கெல்லாம் அந்த திரைப்படத்தில் வரும் ஆசிரியர் போல் ஒரு நல்ல ஆசிரியர் கிடைப்பதில்லை…’
அவள் கேள்வியில் இருந்த ஏக்கம் என்னை ஒரு நொடி தடுமாறச் செய்தது.
‘என்ன கேட்டாய்?’ என திரும்பவும் அவளிடம் கேட்டேன். அவள் எந்த கோணத்தில் அந்தக் கேள்வியைக் கேட்கிறாள் என்பதை புரிந்துகொள்ளவே இரண்டாம் முறை கேட்டேன்.
அவள் திரும்பவும் அதே கேள்வியை அட்சரம் மாறாமல் அப்படியே அதே தொனியில் கேட்டாள்.
அவள் பெயரே படு அமர்க்களம். இலக்கியா. குரலோ +1 படிக்கும் மாணவியின் குரல் போல் இல்லாமல் சிறுமியின் குரலைப் போல இனிமை. அவள் கேட்ட கேள்வியோ பெரியவர்களுக்கும் தோன்றாத வகையில் பிரமாண்டத்தை உள்ளடக்கிய கனமான கேள்வி.
நான் பொறுமையாக பதில் சொன்னேன்.
‘இலக்கியா, நம்மைச் சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் இருந்தால் நமக்கு கண்களில் நல்ல விஷயங்கள் சட்டென கண்களில் படும். ஆனால், இப்போதெல்லாம் நம்மைச் சுற்றி நல்ல விஷயங்கள் குறைந்து வருவதால் அவற்றைத் தேடினால்தான் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள். இப்போது நடப்பது டிஜிட்டல் யுகம். வெர்ச்சுவல் உலகம். ஆசிரியர்கள் மனித உருவத்தில்தான் நடமாட வேண்டும் என்பதில்லை. மேலும் நல்ல ஆசிரியர் என்பவர் நேரடியாக போர்டில் எழுதி வகுப்பெடுப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை.
நேற்று நீ படித்த என்னுடைய கட்டுரை உனக்கு ஒரு ஆசிரியராக இருந்து வழிகாட்டியது அல்லவா? ‘இன்று நான் ஒரு விஷயத்தை உங்கள் பதிவில் இருந்து கற்றுக்கொண்டேன்’ என்று நீயே சொன்னாய். ஆக இன்று ஒரு கட்டுரை உனக்கு ஆசிரியராக இருந்தது. அந்தக் கட்டுரையை எழுதிய நான் உனக்கு மறைமுகமாக ஓர் ஆசிரியரானேன்.
நாளை நீ யு-டியூபில் பார்க்கும் ஒரு நல்ல வீடியோ, பாட்கேஸ்ட் மூலம் நீ கேட்கும் ஒரு நல்ல ஆடியோ, உன் கவனத்தை ஈர்க்கும் கருத்தாழமிக்க ஒரு ஓவியம், உன் கண்களில் படும் நல்ல புத்தகங்கள் இப்படி எவையெல்லாம் உன்னை அசைத்துப் பார்க்கிறதோ, எவைவெல்லாம் உன்னிடம் ஒரு ‘நல்ல’ மாற்றத்தை உண்டு செய்து ஒருபடி உயர்த்துகிறதோ அவையெல்லாமே உனக்கு ஆசிரியர்கள் போலதான்.
அப்படி உன்னைச் சுற்றியுள்ள நல்ல விஷயங்கள் உனக்கு ஆசானாக வேண்டுமானால் நீ நல்ல ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும். நல்லவை, கெட்டவை குறித்த ஆழமான தெளிவான புரிதலுடன் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நல்ல நேர்மறை சிந்தனைகளுடன் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் உன்னைச் சுற்றி இருக்கும் நல்ல விஷயங்கள் உன் கண்களுக்கும் உன் சிந்தனைகளுக்கும் புலப்படும். இன்னும் சொல்லப் போனால் அவை உன்னை நோக்கி தானாகவே வரும். தீயவை தானகவே விலகிப் போக ஆரம்பிக்கும். தீயவை விலகினாலே நல்லவை அனைத்தும் உனக்கு ஆசான் தானே.
சில தீய சக்திகள் நீ உறுதியாக இருந்தால், நீ தெளிவாக இருந்தால் தானாகவே விலகிவிடும். ஆனால் சில தீய சக்திகளை பிரம்மப் பிரயத்தனம் செய்துதான் விலக்க வேண்டி இருக்கும். அதற்கு உன் பெற்றோரின் உதவியுடன் தான் செயல்படுத்த வேண்டியிருக்கும். எனவே இந்த வயதில் உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை உன் பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டு அவர்களின் அரவணைப்புடன் பாதுக்காப்பாக செயல்பட வேண்டும்.
எத்தனைக்கு எத்தனை நேர்மறையாக செயல்படுகிறாயோ அத்தனைக்கு அத்தனை உன்னைவிட்டு தீய சக்திகள் அகன்று ஓடிவிடும். அப்புறம் என்ன உன்னைச் சுற்றி உள்ளவை அனைத்துமே நல்ல சக்திகள்தான். அவை ஒவ்வொன்றும் ஒரு ஆசிரியர்தான்…’
நான் கொடுத்த இந்த விளக்கத்தை இடைமறிக்காமல் பொறுமையாக கேட்டாள் நல்லதொரு ஆசிரியரைத் தேடும் அந்த இளம் மாணவி.
அவளுக்கு நான் கொடுத்த விளக்கத்தில் பூரண திருப்தி. அவளுக்கு மட்டும் அல்ல. எனக்கும்தான்.
நான் கொடுத்துள்ள விளக்கத்தை உங்கள் குழந்தைகளிடம் நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மட்டுமல்ல நம்மைப் போன்ற பெரியோர்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே கிடைக்கும். அதை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். ஒரு கட்டத்தில் அது தானாகவே நம்மை நோக்கு வரும். இதுதான் இயற்கை. எனவே நல்லவற்றையே சிந்திப்போம். நல்லவற்றையே பேசுவோம். நல்லவற்றையே செயல்படுத்துவோம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP
இலக்கியாவின் தந்தையின் கருத்து!
மகள் குறித்த நல்லதொரு மதிப்பீட்டிற்கும், அறிமுகத்திற்கும் நன்றி மேம்.
மதிய உணவை பிள்ளைகளோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்களுக்கு ABCD தெரியுமா? எனக் கேட்டேன்.மகள் மெலிதாக சிரித்துக் கொண்டே ‘எப்படிக் கேட்டாலும் தெரியும்’ என்றாள். மகனோ, ‘டாடி…அதுலாம் எல்.கே.ஜி.ல இருந்து படிச்சிட்டு வந்தது. அது தெரியாமல் இருக்குமா?’ என்றான். நான் பதிலுக்கு ‘உங்கள் இருவருக்குமே ABCD தெரியாது. ஏன் எனக்கே கூட தெரியாது’ என்றேன். ‘எப்படி சொல்றீங்க?’ என்றார்கள்.
உங்களின் நேற்றைய பதிவை பிரிண்ட் எடுத்து ஆளுக்கொன்றாய் கொடுத்தேன். இரவு சாப்பாட்டிற்காக மீண்டும் சேர்ந்து சாப்பிட அமர்ந்த போது மதிய உரையாடலின் தொடர்ச்சி நீண்டது. பிரிண்ட் அவுட்டை முதலில் மகள் படித்திருந்தாள். அவள் தனக்கு ABCD தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றாள். மகனுக்கோ படு ஆச்சர்யம். ‘என்னலே…ஸ்கூல்ல ஃப்ர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்கிற. இப்படி சொல்ற’ என்றான். ‘நீயும் டாடி தந்த பிரிண்ட் அவுட்டைப் படி அப்புறம் சொல்லு’ என்றாள். அவனும் வாசித்து முடித்து விட்டு ‘இலக்கியா சொன்னது சரி தான். நானும் ஒப்புக் கொள்கிறேன்’ என்றான்.
இரவு படுக்கைக்கு முந்தைய உரையாடலும் அது சார்ந்தே நீண்டது. ‘அந்த பிரிண்ட் அவுட்டை அப்பப்ப எடுத்து வாசிச்சு பார்த்துக்கப் போறேன். அப்போது தான் அதுல சொல்லி இருக்குற விசயம் மறக்காமல் இருக்கும்’ என்றாள் மகள். ‘தேங்ஸ் டாடி’ என்றாள்.
அதை எனக்கு சொல்வதற்கு பதில் புவனேஸ்வரி மேடத்துக்கு சொல்வது தான் சரி. இது அவர்கள் பதிந்திருந்த தகவல் என்றேன். உங்களிடம் கேட்ட அதே கேள்வியை (‘ஏன் ஆண்ட்டி, எங்களுக்கெல்லாம் அந்த திரைப்படத்தில் வரும் ஆசிரியர் போல் ஒரு நல்ல ஆசிரியர் கிடைப்பதில்லை…’) என்னிடமும் கேட்டாள். நான் ‘ஆசிரியர் தொழில் என்பது இப்பொழுதெல்லாம் ஒரு வேலையாக மாறிப்போய்விட்டது காரணம்’ என்ற அடிப்படையில் ஒரு பதில் சொல்லி இருந்தேன். அதில் அவளுக்கு திருப்தி இல்லை.
‘புவனேஸ்வரி மேடத்திடம் தேங்ஸ் சொல்லி விட்டு அவர்களிடமே இந்தக் கேள்வியைக் கேட்கவா?’ என்றாள். கேள். நிச்சயம் ஒரு சிறப்பான, மாறுபட்ட பதில் கிடைக்கும் என்றேன். ரொம்ப தயங்கினாள். கேள். எதுவும் நினைக்க மாட்டார்கள் என்றேன். உங்கள் பதிலில் அவளுக்கு அவ்வளவு திருப்தி. நன்றி மேம். உங்களிடம் பேசிவிட்டு வந்து அவள் எனக்கும், மகனுக்கும் அதை அச்சரம் பிசகாது சொன்னாள். எனக்கும் திருப்தி. அதன் பின் மகனும், மகளும் அப்துல்கலாம் இளமை பருவம் குறித்து அவர்கள் அறிந்திருந்த விசயங்களை ஷேர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் படிக்கும் முறை உங்களின் பதிவு மாற்றி அமைக்கும் என நினைக்கிறேன்.