ஜம்முனு வாழ காம்கேரின் OTP-181: ‘அறிவுரைகள்’ – நம் பலவீனத்துக்கான பரிசு!

பதிவு எண்: 912 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 181
ஜூன் 30, 2021

‘அறிவுரைகள்’ – நம் பலவீனத்துக்கான பரிசு!

தலைமைதாங்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் முடிவுகளிலோ அல்லது சிந்தனையிலோ குழப்பம் இருக்கக் கூடாது. அப்படியே குழப்பம் உண்டானாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது. அப்படி வெளிப்படையாகக் காட்டிக்கொண்டால் அவர்களின் கீழ் பணிபுரியும் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க ஆரம்பித்துவிடும். அதன் பின்னர் ஆளாளுக்கு அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

கலந்தாலோசிப்பது என்பது வேறு, அறிவுரை சொல்கிறேன் என எதிராளியின் பலவீனத்தை அசைத்துப் பார்ப்பது என்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கலந்தாலோசித்தல் என்பது குழுவின் தலைமையும் குழுவில் இயங்குபவர்களும் ஒருங்கிணைந்து பேசும்போது அவரவர்களுக்குத் தோன்றும் கருத்துக்களை எடுத்துச் சொல்வது. அறிவுரை என்பது பெரும்பாலும் எதிராளி பலவீனமாகும் நேரம் அல்லது ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கும் நேரத்தில் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாத சித்தாத்தங்களைக் கூட அள்ளி வழங்குவது.

இதற்குத்தான் சொல்கிறேன், தலைமைத் தாங்கும் இடத்தில் இருப்பவர்கள் கலந்தாலோசிக்க வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் அவர்கள் அந்தத் தலைமைக்கு அறிவுரை வழங்கும் சூழலை உருவாக்கிவிடக் கூடாது. அறிவுரைகள் பெரும்பாலும் நாம் பலவீனமாக உணரும் தருணங்களில்தான் மிக சுலபமாக எதிராளிகளிடம் இருந்து தாராளமாகக் கிடைக்கிறது.

உதாரணத்துக்கு கொரோனா சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பியவர்களுக்கு, கொரோனாவினால் துளியும் பாதிக்கப்படாதவர்கள் வாட்ஸ் அப் தகவல்களினால் மட்டுமே இன்ஸ்டண்ட் மருத்துவராகி  ‘இனிதான் நீங்கள் கவனமாக இருக்கணும்’, ‘நல்லா ரெஸ்ட் எடுக்கணும்’, ‘நிறைய தண்ணீர் குடிக்கணும்’ என்று அறிவுரைகள் சொல்வார்கள். அந்த அறிவுரைகள் எல்லாம் சிகிச்சை முடிந்து வந்தவர்களுக்கு எத்தனை எரிச்சலை ஏற்படுத்தும் என்பது அந்த சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

அதாவது பிரச்சனைக்கு வெளியே இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவுரை என்ற பெயரில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால் பிரச்சனையின் உள்ளே இருப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும், அவர்களுக்கு நாம் சொல்வது தேவையா தேவையில்லையா என யோசிக்காமல் பேசுபவர்களை என்னவென்று சொல்வது?

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

கலந்தாலோசிக்க வாய்ப்புக் கொடுக்கும்போது குழுவின் உறுப்பினர்களுக்கும் தங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது என்ற திருப்தி கிடைக்கும். அவர்வர்களுக்குத் தோன்றியதை சொன்னாலும் அவற்றில் இருந்து ஏதேனும் சின்னச் சின்ன விஷயங்கள் அந்தக் குழுவின் செயல்பாடுகளை உயர்த்திச் செல்லும்.

எந்த ஒரு ஆற்றலும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்போதுதான் அதற்கு மதிப்பு. ஆதிக்கம் என்றால் உடனே சர்வாதிகாரம் என்ற கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் பைலட் பயந்து நடுங்கி தடுமாறி கத்தி கூச்சல் போட்டால் விமானத்தில் உள்ளவர்களில் பாதிபேருக்கு பயத்தில் ஹார்ட் அட்டாக் வந்துவிடும். அதனால் பைலட்டுக்கு மனதில் அச்சம் இருந்தாலும் அதையெல்லாம் மறைத்துக்கொண்டு என்ன பிரச்சனை என ஆய்வதிலும் கன்ட்ரோல் அறையில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதிலும் விமானத்தை எப்படி பாதுகாப்பாக அடுத்த லேண்டிங் பாயிண்ட்டில் இறக்குவது என்பது குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அப்போதுதான் விமானத்தில் உள்ள பயணிகள் பயமில்லாமல் அமர்ந்திருக்க முடியும்.

அதைவிட்டு பைலட்டுக்கு, பயணிகள் ஆளாளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டும், பயப்படாதீர்கள், பார்த்து விமானத்தை செலுத்துங்கள் என ஆலோசனை சொல்லிக்கொண்டும் இருந்தால் அந்த சூழல் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். அந்த பைலட்டுக்கான ஒரு கம்பீரம் தொலைந்து போவதுடன் அந்த விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் பெரிதாகி அந்தப் பயணம் நல்லபடியாக முடியாது என்பது நிதர்சனம் தானே? காரணம் பயணிகள் யாருக்குமே விமானம் குறித்த டெக்னாலஜி எதுவுமே தெரிந்திருக்கப் போவதில்லை. அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் அந்த நேரத்துக்கான டென்ஷனாக சூழலுக்கு கொஞ்சமும் பொருத்தமாக இருக்கப் போவதில்லை.

அதனால்தான் சொல்கிறேன் தலைமை அது யாராக இருந்தாலும், யாருக்காக இருந்தலும், எதற்காக இருந்தாலும் அவர்களின் ஆற்றல் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பேராற்றலுடன் இருக்க வேண்டும். கம்பீரமாக இருக்க வேண்டும்.

வீட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன். பெரும்பாலான வீடுகளில் அம்மா, அப்பா இருவரில் யார் குழப்பமே இல்லாமல் தைரியமான முடிவுகளை எடுக்கிறார்களோ அவர்களே அந்தக் குடும்பத்தை வழிநடத்துபவராக இருப்பார்கள். கவனித்திருப்பீர்கள். இதுவரை இல்லை என்றால் இனி அந்தக் கோணத்தில் கவனியுங்களேன்.

தன் சிந்தனையில் தெளிவின்மை, முடிவெடுப்பதில் குழப்பம், ஒரு பிரச்சனையை தன் மனம்போன போக்கில் வெவ்வேறு விதமாக விவாதிப்பது   என்றிருந்தால் அவர்களின் அறிவுரைகள்கூட பெரிதாக பிள்ளைகளிடம் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் வேண்டுமென்றே அவர்களின் அறிவுரைகளைப் புறம் தள்ள மாட்டார்கள். ஆனால் அப்பா / அம்மா இப்படித்தான் குழப்புவார்கள். நாமே முடிவெடுப்போம் என தாங்களாக ஒதுங்கிக்கொள்வார்கள்.

ஆனால் உறுதியாக இந்த பிரச்சனைக்கு இதுதான் தீர்வு, இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும், இப்படி நடந்துகொண்டால் பிரச்சனை உண்டாகும் என தீர்மானமான கொள்கைகளுடன் உறுதியாக அணுகும்போது அவர்களின் அறிவும் ஆற்றலும் மிகப் பெரிய அளவில் பிள்ளைகளிடத்தில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் சொல்கிறேன், வீடாகட்டும், பணியிடமாகட்டும், பொதுவெளியாகட்டும் நம் அறிவையும் ஆற்றலையும் கொஞ்சம் ஆதிக்க மனோபாவத்தில் வெளிப்படுத்தத் தெரிந்தவர்களால் மட்டுமே நல்லதொரு தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும்.

திரும்பவும் சொல்கிறேன், ஆதிக்கம் என்பது அதிகாரம் செய்வது என்று பொருள் அல்ல. எண்ணம், சொல், சிந்தனை இவை அத்தனையிலும் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். அத்துடன் நேர்மையும் உண்மையும் வெளிப்படைத்தன்மையும் இருந்துவிட்டால் உங்கள் செயல்பாடுகள் தானாகவே நல்லதொரு சிம்மாசனத்தைக் கண்டறிந்து உங்கள் அதில் ஏற்றி அழகு பார்க்கும். அப்புறம் என்ன நீங்களும் நல்லதொரு தலைமையே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 809 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon