ஜம்முனு வாழ காம்கேரின் OTP-182: உன் தம்பிக்கும் சேர்த்து நீ தேர்வெழுத வேண்டும் என்றால்? (Sanjigai108)

பதிவு எண்: 913 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 182
ஜூலை 1, 2021

உன் தம்பிக்கும் சேர்த்து நீ தேர்வெழுத வேண்டும் என்றால்?

காலையில் எழுந்ததும் நம் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்யத் தொடங்குவதன் மூலம் அந்த நாளில் நாம் செய்யும் அத்தனை விஷயங்களிலும் ஒரு நேர்மறைத்தன்மையைப் பெற முடியும். உற்சாகமான மனநிலை கிடைக்கும். புத்துணர்வுடன் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

இதை உங்கள் பிள்ளைகளிடம் இளம் வயதிலேயே சொல்லிக்கொடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் நீங்களே நினைத்தாலும் அந்த வழக்கத்தை அவர்களிடம் இருந்து மாற்றவே இயலாது.

மனதுக்குப் பிடித்த விஷயம் என்றால் அது எழுதுவது, பாடுவது, படிப்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

காலையில் எழுந்ததும் தான் படுத்து உறங்கிய பாய், தலையணை, போர்வை இவற்றை ஒழுங்காக மடித்து அதன் இடத்தில் வைத்தால்கூட ஒரு மனநிறைவு கிடைக்கும். அது கொடுக்கும் திருப்தியில் அவர்களுக்குள் ஒரு உற்சாகம் தானாகவே ஒட்டிக்கொள்ளும். அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் மகிழ்ச்சியாக செய்வார்கள்.

பாட்டு கற்றுக்கொள்பவர்கள் கூட ‘பாடிப் பாடி’ சாதகம் செய்து பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு விடியற்காலையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். காரணம் அந்த நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நாள் முழுவதும் நம் உடலுக்கும் மனதுக்கும் தேவையான ஆற்றலை முழுமையாக நமக்குக் கொடுக்கும். அப்போது செய்கின்ற எந்த ஒரு செயலும் தங்கு தடையின்றி செய்யப்படுவதால் முழுமையான செயலாற்றலுடன் இயங்கி வெற்றியைத் தரும்.

ஒரு செல்போனில் சார்ஜ் போடுவதற்கு போனை ஆஃப் செய்து விட்டு சார்ஜ் போட்டால் எப்படி அது விரைவாக சார்ஜ் ஆகுமோ அப்படித்தான். நம் எல்லா கவலைகளையும், பிரச்சனைகளையும், அன்றாடப் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் எடுத்துக்கொண்ட ஒரு குறிக்கோளுக்காக அதிகாலை நேரத்தைத் தேர்ந்தெடுத்து உழைக்கும்போது அது இறையருள் பெற்றதைப் போல பூரணத்துவத்துடன் வெற்றி அடையும்.

என் கிரியேட்டிவிட்டி நாள் முழுவதும் என்னுள் பரவிக்கொண்டே இருந்தாலும் அதற்கு அழகான வடிவம் கிடைப்பது பிரம்மமுகூர்த்தத்தில்தான். மற்ற நேரங்களில் நான் உருவாக்கும் ஒரு படைப்பை திரும்பவும் பிரம்மமுகூர்த்தத்தில் செய்தாலோ அல்லது ஏற்கெனவே செய்ததை சரி செய்தாலோ அது வேறொரு பரிணாமத்தில் புதுப் பொலிவுடன் அழகுடன் வெளிப்படும்.

இதுகுறித்தெல்லாம் ஒரு பள்ளி மாணவியிடம் கவுன்சிலிங்கின் போது பேசிக்கொண்டிருந்தபோது, நான் கூறிய உதாரணத்தை அவள் நேரடியாக பொருள்கொண்டு என்னிடம் அவள் ஒரு கேள்வி கேட்டாள்.

‘மேம், போர்வையை மடித்து வைத்தாலே நமக்குள் ஒரு புத்துணர்ச்சி வரும் என்று சொல்கிறீர்களே, என் அம்மா தினமும் காலையில் எழுந்து அதைத்தான் செய்கிறார். ஆனால் நாள் முழுவதும் ஏதேதோ டென்ஷனில் கத்திக்கொண்டே இருக்கிறார்…’

‘ஓ… அம்மா என்ன செய்கிறார்?’

‘ஒரு நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலையில் இருக்கிறார்’

‘சரி, வீட்டில் உன் அப்பா அம்மாவுக்கு ஏதேனும் உதவி செய்வாரா?’

‘இல்லை மேம், அப்பா காலையில் எழுந்து ஆஃபீஸ் கிளம்புவதற்கே நேரம் சரியாக இருக்கும்…’

‘ஓ… அப்போ உன் அம்மாதான் வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்து உனக்கும் உன் தம்பி உன் அப்பாவுக்கும் சமையல் சாப்பாடு டிபன் செய்து தானும் ரெடியாகி ஆஃபீஸ் செல்ல வேண்டும்… அப்படித்தானே?’

‘ஆமாம் மேம்…’

‘நீ காலையில் எழுந்ததும் போர்வையை மடித்து வைத்துவிட்டு என்ன செய்வாய்?’

‘நான் ஸ்கூலுக்குக் கிளம்புவேன், விடுமுறை நாட்களில் டிவி, மொபைல், நண்பர்கள் போனில், தம்பியுடன் கேம்ஸ் இப்படி பொழுதைக் கழிப்பேன்…’

‘சரி, அம்மா எல்லா நேரங்களிலும் அதாவது வருடத்தின் 365 நாட்களிலும் ஒரு நாளின் 24 மணி நேரமும் வீட்டு வேலை ஆஃபீஸ் வேலை இப்படி தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்க வேண்டும்… அப்படியானால் காலையில் எழுந்ததில் இருந்து உறங்கும் வரை அவர் செய்கின்ற ஒவ்வொரு வேலையுமே அவர் மீது சுமத்தப்படும் சுமைகள்தானே… பிறகு எப்படி அவர் உற்சாகமாக இருப்பார்? அவர் உற்சாகமாக இருக்க வேண்டுமானால் நீ உன் அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் உன் வேலைகளையாவது நீயாக செய்துகொள்ள பழக வேண்டும். அப்போதுதான் உன் அம்மாவும் உற்சாகமாக செயல்படுவார்.

உதாரணத்துக்கு நீ உன் பாடத்தைப் படிக்கிறாய். உன் தம்பியின் பாடத்தையும் சேர்த்து நீதான் படிக்க வேண்டும், அவனுக்கு பதிலாக நீதான் பரிட்சை எழுத வேண்டும், அவன் மதிப்பெண் குறைந்தால் அப்பாவிடம் நீதான் திட்டும் அடியும் வாங்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் உன்னால் தாங்க முடியுமா? உனக்கு கோபமும் எரிச்சலும் வரும்தானே?

உன் பாடத்தைப் படிப்பதே உனக்குக் கஷ்டம். இதில் உன் தம்பியின் பாடத்தையும் சேர்த்து படிக்கச் சொன்னால்… நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா?

அதே சூழலில் உன் அம்மாவை வைத்துப் பார். உன் அம்மா உனக்காகவும், உன் அப்பாவுக்காவும், உன் தம்பிக்காகவும் சேர்த்து உழைக்கிறார். அவர் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வேண்டுமானால் நீ உன் வேலைகளை நீயாக செய்துகொண்டு அவருடைய சுமையைக் குறைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இல்லை என்றால் அவர் டென்ஷன் குறைவதற்கு வாய்ப்பே இல்லை…’

இந்த கவுன்சிலிங்கிற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து அவளுடைய அம்மா போன் செய்து, ‘மேடம், உங்களிடம் பேசிய பிறகு என் மகளிடம் நிறைய மாற்றங்கள்… அவள் வேலைகளை அவளேதான் செய்வேன் என்று பிடிவாதமாக செய்கிறாள். நன்றாக படிக்கவும் ஆரம்பித்துவிட்டாள். தம்பியுடனும் நல்ல நட்பாக இருக்கிறாள். இவ்வளவு ஏன் அவள் அப்பாவிடமே ‘ஏம்பா அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவக்கூடாதா’ என கேள்வி கேட்கிறாள்…’ என்று மகிழ்ச்சியுடன் நன்றி சொன்னார்.

எல்லோருக்கும் எல்லோரையும் வழிக்குக் கொண்டுவரத் தெரியும். ஆனால் அதைச் சொல்லும் விதத்திலும் புரியவைக்கும் கோணத்திலும் சற்று மாற்றம் செய்தால்போதும். அது எதிராளியின் மனதில் சரியாகப் பொருந்திவிடும். அதைத்தான் நான் பெரும்பாலும் செய்கிறேன்.

‘படி படி… படித்தல்தான் நல்ல வேலைகிடைக்கும். சம்பாதிக்க முடியும். வாழ்க்கை நன்றாக அமையும்’ என்று எல்லோரும் பெரும்பாலும் சொல்வதையே சற்று மாற்றி, ‘படிக்காவிட்டால் எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’ என்பதை அழுத்தமாக வலியுறுத்திவிட்டு  ‘படித்தால் படிப்பு சார்ந்த வேலைக்கும் செல்லலாம், நமக்குப் பிடித்த திறமை சார்ந்த வேலைக்கும் செல்லலாம் அல்லது சுயமாக பிசினஸும் செய்யலாம்’ என அதன் பரிணாமங்களையும் எடுத்துச் சொல்வேன். அவ்வளவுதான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 693 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon