பதிவு எண்: 914 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 183
ஜூலை 2, 2021
இயற்கைக்கு வசப்படுவோமே!
ஒவ்வொருவரின் உணர்வுகளும் ஒவ்வொரு மாதிரி. எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது. ஒரு வானத்துக்கும் பூமிக்குமாய் பிரமாண்டமாய் விரிந்த பச்சை பசேலென்ற இயற்கைக் காட்சி. அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.
இயற்கை ரம்யமானது. அழகானது. அட்டகாசமானது. அற்புதமானது. அந்த இடத்தில் ஒரு வீடு இருந்தால் எத்தனை பேரானந்தமாய் இருக்கும் அப்படி இப்படி என்று ஆளுக்கொன்றாய் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் தோன்றும்.
உங்களைப் போலவே எனக்கும் ஒன்று தோன்றும். என்ன தெரியுமா? கொஞ்சம் பயம் உண்டாகும். அகன்று விரிந்த ஆகாசத்துக்கும் நிலத்துக்குமாக படந்திருக்கும் இயற்கைக் காட்சியைப் பார்க்கும்போது மனதுக்குள் சட்டென ஒரு இனம் புரியாத கலக்கமான மனநிலையே உருவாகும்.
காரணம். அந்த பிரமாண்டத்துக்கு முன் நான் ஒரு ஆளாக தனித்து நின்றுகொண்டிருப்பதைப் போல ஒரு கற்பனை தோன்றும். அப்படி தனி ஒரு ஆளாய் நின்றுகொண்டிருக்கும்போது என் எதிரில் கொள்ளை அழகில் ஒய்யாரமாய் உயர்ந்திருக்கும் அந்த இயற்கை எனக்கு பரவசத்தைக் கொடுக்காமல் ஒரு சின்ன பயத்தையேக் கொடுக்கும். அதை பயம் என்றுகூட சொல்ல முடியாது நம் கண் முன் கடவுள் விஸ்வரூப தரிசனம் கொடுத்தால் நமக்கு எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு மனநிலை உண்டாகும்.
என்னைப் பொருத்தவரை இயற்கையும் கடவுளும் ஒன்றே. அருவமாக இருக்கும் கடவுளின் சாட்சியே உருவமாக காட்சி தரும் இயற்கை.
உண்மையைச் சொல்லப் போனால் இயற்கை தன்னை எழிலாக மட்டுமே காட்டிக்கொண்டிருப்பதால்தான் அதை நாம் மாசுபடுத்திக்கொண்டே இருந்துவிட்டோமோ என்றுகூட தோன்றும்.
கொஞ்சும் அழகுடன் சேர்த்து அவ்வப்பொழுது கொஞ்சம் மிரட்டலாய், கொஞ்சம் ஆக்ரோஷமாய், கொஞ்சம் அதட்டலாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தால் நாம் அதை ‘ஜஸ்ட் லைக் தட்’ மாசுபடுத்தி அதற்கான இடத்தை மிக சுலபமாக தன் வசப்படுத்தி ஆக்கிரமித்துக்கொண்டு காற்றுக்கு ஃபேன், குளுமைக்கு ஏசி, குளிர்ச்சிக்கு ஃப்ரிட்ஜ் என இயற்கையை செயற்கையாய் வீட்டுக்குள் கொண்டு வந்திருக்க மாட்டோம்.
இப்போது சுவாசிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை. பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் சிலின்டருடன் சுவாசிக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு மரத்தை வைத்திருந்தால் இயற்கையே நமக்கு பேரணாக அமைந்திருக்கும். அவற்றைப் பேசிப் பயனில்லை. இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நம் அடுத்தடுத்த சந்ததியினருக்கு நாம் எதையுமே விட்டு வைக்காமல் சுரண்டிக்கொண்டு சென்றுவிடும் துர்பாக்கிய நிலையே.
பெரும்பாலான நேரங்களில் இயற்கை பேரழகாய் மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொண்டதன் விளைவு அதற்கு மரியாதை கொடுக்காமல் ‘குரங்குக் கைகளில் பூமாலையாய்’ அதை நாம் நம் இஷ்டத்துக்கு எடுத்தாள ஆரம்பித்துவிட்டோம். விளைவை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
1992-களில் நாங்கள் சென்னையில் குடியேறியபோது ஐஐடி வளாகம் உள்ள வேளச்சேரி அடையார் பகுதிகளில் இயற்கைக் கொஞ்சும் மரங்கள் அத்தனை ரம்மியமாக தோற்றமளிக்கும். அந்த சாலையில் முகத்தில் காற்று மோத வேகமாக பைக்கில் செல்வதே அத்தனை பேரானந்தமாக இருக்கும். ஆனால் சாலை செப்பனிடும் பணி காரணமாக அத்தனையும் வெட்டி வீழ்த்தியபோது அந்த இடமே வெறிச்சோவென கட்டாந்தரை போல ஆகிவிட்டது.
இப்படித்தான் அழகாக இருப்பவை மற்றவர்கள் கண்களுக்கு உறுத்தலாகவே தோன்றும். அதை எந்த வகையிலாவது தன் வசப்படுத்த துடிப்பார்கள். அதற்குப் பேரழகான இயற்கையையும் விதிவிலக்கல்ல.
இயற்கையின் வசம் நாம் இருக்கும்போதுதான் நமக்குப் பாதுகாப்பு. மாறாக இயற்கையை நம் வசப்படுத்தினால் சர்வ நாசமே. இப்போதுள்ள கொரோனா காலம் அந்தப் பாடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த கொரோனா காலத்தில் ஊர் உலகமே வீட்டுக்குள் முடங்கி இருக்க வேளா வேளைக்கு நாம் சாப்பிட காய்கறிகளும், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தனை மளிகைப் பொருட்களும் தொடர்ச்சியாகக் கிடைத்து வந்தன. இப்போதும் அப்படியே.
நினைத்துப் பாருங்கள், காய்கறிகளும் மளிகை சாமான்களும் கிடைக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? அவற்றை உற்பத்தி செய்பவர்களும் வீட்டுக்குள் முடங்கியிருந்தால் நம் நிலைமை அதோகதிதான்.
இப்படி கற்பனை செய்து பாருங்கள். உணவுப் பொருட்கள் விளைவிக்கப்படும் நிலமும் கொரோனோ போன்று வேறு ஏதேனும் புதுவகையான வைரஸினால் பாதிக்கப்பட்டு எதை விளைவித்தாலும் அது வைரஸுடன்தான் விளையும். எனவே அரிசி, பருப்பு, காய்கறிகளை யாரும் இன்னும் ஒரு மாதத்துக்கு சாப்பிடக் கூடாது என அதற்கும் ஒரு ‘லாக் டவுன்’ போட்டால் என்ன ஆகும் நம் நிலை.
கடுமையான வறட்சி, உணவுப் பற்றாக்குறை, பசி, பட்டினி இப்படி நம் கண் முன் இந்த உலகம் அழிவதை நாம் காண வேண்டிய துர்பாக்கிய நிலை உண்டாகும்.
அந்த நிலை ஏற்படுவதற்கு முன்பாவது நாம் இயற்கையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
வீட்டு மொட்டை மாடியில் வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கொரோனா காலத்தில் காய்கறிகளுக்குப் பஞ்சம் இல்லாமல் கிடைத்து வந்தன. அதையே ஒரு ரோல் மாடலாக வைத்துக்கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதில் கவனம் செலுத்தலாம். மாடித்தோட்டம் என்பதை நான் ஓர் உதாரணத்துக்காகவே சொன்னேன்.
இப்படி உங்களைச் சுற்றி உங்களால் முடிந்த வகையில் சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி இயற்கையை ஏதேனும் ஒரு வகையில் போற்றிக்கொண்டே வந்தால் கால மாற்றத்தில் ஏதேனும் நல்லது நடக்கலாம். அப்படி இல்லை என்றால் நிச்சயமாக இயற்கை நம்மை விட்டுவைக்காது. அதை மட்டும் மனதில் வைத்துக்கொள்வோம்.
இயற்கையின் வசம் நாம் இருக்கும்போதுதான் நமக்குப் பாதுகாப்பு என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுவோம்.
வாருங்கள், இயற்கைக்கு வந்தனம் செய்வோம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP