ஜம்முனு வாழ காம்கேரின் OTP-184: அப்படிக்கும், இப்படிக்கும் சரியாப் போச்சு! டீல் ஓவர்

பதிவு எண்: 915 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 184
ஜூலை 3, 2021

அப்படிக்கும், இப்படிக்கும் சரியாப் போச்சு. டீல் ஓவர்!

உங்கள் வீட்டில் வயதில் முதிர்ந்த பெரியவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் உங்களுக்கு நல்லது செய்திருந்தாலும் சரி, கெட்டது செய்திருந்தாலும் சரி, அவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொண்டிருந்தாலும் சரி, இரவு தூங்கச் செல்லும் நேரங்களில் அவர்களுடன் பேசும்போது ஏதேனும் கடுமையாக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டால் அவர்களிடம் ஜஸ்ட் ஒரு ‘சாரி’ கேட்டுவிடுங்கள். இல்லை என்றால் மறுநாள் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால்  ‘உண்மையில் நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்றால்’ வாழ்நாள் முழுவதும் நீங்கள் பேசிய வார்த்தைகள் உங்களைக் குத்திக்கொண்டே இருக்கும்.

அதனால்தான் நம் பெரியவர்கள், இரவு நேரத்தில் குழந்தைகள் அவர்களின் உடல் நலனுக்கு ஒத்துக்கொள்ளாத தின்பண்டங்கள் ஏதேனும் விரும்பி சாப்பிடக் கேட்டால்கூட ‘இரவு நேரத்தில் கேட்டுவிட்டாயே, கொஞ்சமா எடுத்துக்கோ, உடம்புக்கு ஆகாது. நாளை பகலில் சாப்பிடலாம்’ என்று சொல்வதை கவனித்திருப்பீர்கள். இதன் பின்னால் உள்ள உளவியலை புரிந்துகொள்ளுங்கள்.

ராயல்புஷ்கர் என்ற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூலில், ஒரு அம்மாவுக்கும் மகளுக்குமான பிணைப்பை சொல்லி இருந்தார். இது ஜெர்மனியில் நடக்கின்ற ஒரு கதையாக செல்கிறது.

ஒரு இளம் பெண். அவள் அம்மாவுக்கு அவளைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. சிறு வயதில் ஆரம்பித்த அந்த வெறுப்பு அவள் வளர வளர அதிகரித்ததே தவிர குறையவே இல்லை. வெறுப்புக்கு ‘இதுதான் காரணம்’ என்று குறிப்பாக எதுவுமே கிடையாது. ஆனால் அவள் உடன் பிறந்தவர்களிடம் காண்பிக்கும் அக்கறையும் பாசமும் அவளுக்குக் கிடைக்காது. இப்போது திருமணம், வேலை, குழந்தைகள் என்று ஆன பிறகும் அந்த வெறுப்பு வெவ்வேறு பரிணாமங்களில் தொடர்கிறதே தவிர குறையவே இல்லை. அம்மாவே தன் பிள்ளைகளிடம் இப்படி நடந்துகொள்வாளா எனும் அளவுக்குத்தான் அவளுக்கும் அவள் அம்மாவுக்குமான பிணைப்பு இருந்து வந்தது. கடைசி காலத்தில் அவள் அம்மா அவளிடம்தான் இருந்தார்.

அவள் அம்மா அவளிடம் நடந்துகொண்டதற்கெல்லாம் சேர்த்துவைத்து படாதபாடு படுத்திவைக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவள் அப்படி எல்லாம் செய்யவில்லை.

ஒருமுறை அவள் நெருங்கிய நண்பன் அவளிடம் ‘உன் அம்மாவை எப்படி உன்னால் மன்னிக்க முடிகிறது?’ என்று கேட்டபோது அவள் என்ன பதில் சொல்கிறாள் தெரியுமா?

‘நான் மன்னிக்கவெல்லாம் செய்யவில்லை. நன்றிக் கடனை செலுத்துகிறேன். என் அம்மா என்னிடம் பாகுபாட்டுடன் தான் நடந்துகொண்டாலே தவிர எனக்கு சாப்பாடு போட்டிருக்கிறாள், வீட்டை விட்டு அனுப்பி விடாமல் வளர்த்திருக்கிறாள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் அவளுக்கு என் வெறுப்பை திருப்பிக் காட்டவில்லை…’

இதுபோலவே மலையாளத்தில் ஒரு படம். பெயர் நினைவில் இல்லை. ஒரு அப்பா. அவர் ஒரு மேஸ்த்திரி. அவர் தன் மகனை துச்சமாகக் கருதி வெறுத்து ஒதுக்குகிறார். அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் பிறந்தவுடன் அவள் அம்மா இறந்துவிடுகிறாள். ‘அம்மாவை எடுத்து முழுங்கியவன்’ என்ற ஆறாத வடு அவருக்குள். அதையே காரணம் வைத்து சமயம் கிடைக்கும்போதெல்லாம் குத்திக் குத்திக் காயப்படுத்துகிறார். ரணமாகாத நாட்களே கிடையாது அவனுக்கு. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அக்காவையும் அவனையும் போட்டு அடிப்பார். அக்கா சமைத்த சாப்பாட்டை திட்டிக்கொண்டே சாப்பிட்டு தூங்கிவிடுவார். மறுநாள் வேலைக்குச் செல்வார். இரவு வந்ததும் தினமும் நடக்கும் அதே கதைதான்.

அக்காவுக்கு திருமணம் ஆகி சென்றதும் அவன் மட்டும் தனியாக மாட்டிக்கொண்டான் அப்பாவிடம். வேலைக்குச் சென்றாலும் அங்கு வந்து பிரச்சனை செய்வார். ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அதையும் கெடுத்து நாசம் செய்கிறார். அவளிடம் ஏதேதோ சொல்லி அவள் மனதையும் கெடுத்து அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டாள். அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆசையும் அவனுக்கு வரவே இல்லை. இப்படியே காலம் ஓடுகிறது. வயதும் 42 ஆகிவிடுகிறது.

அவன் எப்படி தன் அப்பாவை மன்னிக்கிறான் என்பதுதான் கதை. இறக்கும் தருவாயில் அவர் அவனிடம் மன்னிப்புக் கேட்டு அழுதிருக்கிறார். கடைசி ஒரு பத்து நாட்கள் அவர் தன் மகனிடம் அத்தனை அன்புடன் நடந்துகொள்கிறார். அதற்குப் பெயர் அன்பா அல்லது குற்ற உணர்ச்சியா என்றெல்லாம் அவருக்கே தெரியவில்லை. காரணம் அந்த பத்து நாட்களும் அவரால் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பெரிய வியாதி வந்துவிட்டது. வாழ்நாள் முழுவதும் வெறுப்பை உமிழ்ந்த தந்தையின் தினப்படி கழிவுகளை எல்லாம் அவன்தான் எடுத்து சுத்தம் செய்து, உடம்பைத் துடைத்து, சாப்பாடு ஊட்டி இப்படி சகலமும் செய்கிறான். பேசவே முடியாமல் கோணலான வாய் இன்னும் கோணலாகி அழுதுகொண்டே கண்ணீருடன் அவன் மடியில் இறக்கிறார்.

இப்படி வாழ்நாள் முழுவதும் குரோதமும் விரோதமும் பாராட்டும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்கள் காலம் முடிந்த பிறகும் வாழப்போவது நாம்தான். நாம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழ வேண்டுமானால் நம்மை வெறுத்தவர்களை மன்னிக்கவெல்லாம் வேண்டாம், அவர்களிடம் அவர்கள் காட்டிய அதே வெறுப்பை பலமடங்காக்கி திரும்பக் காட்ட வேண்டாமே.

அப்படிக் காட்டினால், பிறகு அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் அப்படி, நாம் இப்படி. அப்படிக்கும் இப்படிக்கும் சரியாப் போச்சு. டீல் ஓவர்.

நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாமே முடிவெடுப்போம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 24 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon