பதிவு எண்: 916 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 185
ஜூலை 4, 2021
கஷ்டங்களைவிட அவை ஏற்படுத்தும் கழிவிறக்கமே பெருந்துன்பம்!
என்னிடம் சில பெண்கள் போனில் பேசும்போது ‘ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலை சரியா இருக்கும்’ என்பதை அடிக்கடி கழிவிறக்கத்துடன் வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்னவோ அவர்களுக்கு மட்டும்தான் வீட்டு வேலை இருப்பதைப் போலவும் எதிராளி ஹாயாக காலை நீட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பதைப் போலவும் இருக்கும் அவர்கள் பேச்சு.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொறுப்பாக இருப்பவர்களுக்கு வீடு குடும்பம் என்று ஒன்றிருந்தால் தொடர்ச்சியாக வேலை இருந்துகொண்டுதான் இருக்கும். பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர்கள்தான் இப்படி அடிக்கடி தங்களுக்கு மட்டுமே வேலை இருப்பதைப் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
நான் வாரம் ஒருமுறை என் உறவினர்கள் அனைவரையும் போனில் அழைத்து பேசி நலன் விசாரித்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். என் அப்பா அம்மாவின் பழக்கம் இது. அவர்கள் போனில் பேசிவிட்டு என்னிடமும் கொடுப்பார்கள். அதுவே எனக்கு நிரந்தர வழக்கமும் பழக்கமும் ஆகிவிட்டது.
நான் பிசினஸ் செய்வதால் என் நேரம் முழுவதும் என் கைகளில் என்பதால் என்னால் இப்படி செயல்பட முடிகிறது என பலரும் இதை என்னிடம் நேரடியாக சொல்லி இருக்கிறார்கள்.
நான் பிசினஸ் செய்வதால் மட்டும் அல்ல, ஒரு இடத்தில் வேலைக்குச் சென்றிருந்தாலோ அல்லது வேலை எதுவும் செய்யாமல் வீட்டை மட்டும் நிர்வகித்திருந்தாலோ கூட நான் இப்படித்தான் இருந்திருப்பேன். என் சுபாவம் அப்படி. என் வளர்ப்பு அப்படி.
காலையில் 3 மணிக்கு விழிப்புக் கொடுக்கும் பழக்கம் என் 10 வயதில் ஆரம்பித்தது. என் படிப்புக்காகவும், கனவுகளை துரத்துவதற்காகவும் உண்டான பழக்கம் இன்று வரை தொடர்கிறது. இதனால் தினமும் எல்லோரையும்விட எனக்கு 4 மணி நேரம் அதிகம் கிடைக்கிறது. அதில் எவ்வளவு சாதிக்க முடியும் தெரியுமா? விடியற்காலையில் 4 மணி நேரம் என்பது ஏழுட்டு மணி நேரத்துக்கு இணையானது. காரணம் நம் மனமும் உடலும் புத்துணர்வாக இருக்கும். தொலைபேசி அலைபேசி அழைப்பு, டிவி சப்தம், அலுவலகப் பொறுப்புகள் இத்யாதி இத்யாதி, இவை எதுவுமே இல்லாமல் 4 மணி நேரம் எனக்கான நேரமாக இருப்பதால் அந்த நேரத்தில் நான் செய்கின்ற ஒவ்வொரு வேலையும் பூரணமாக இருக்கும்.
இப்படி கொஞ்சம் மெனக்கெட்டால் எல்லோராலும் நேரத்தை அவரவர்கள் எல்லைக்குள் அவரவர் கைகளில் வைத்துக்கொள்ள முடியும். கையாள முடியும்.
எனக்கு பிரம்ம முகூர்த்த நேரம் பிடிக்கிறது. அதை எனதாக்கிக்கொள்கிறேன். நீங்கள் உங்களுக்கான நேரத்தை தேர்ந்தெடுங்கள். நம் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் நமக்கே நமக்கான 2 மணி நேரம் அவசியம் தேவை. அதுகூட இல்லை என்றால் நாம் பிறந்து வாழ்ந்து மடிவதில் என்ன பிரயோஜனம்?
ஒரு முறை அமெரிக்காவில் என் சகோதரி தன் வீட்டில் நவராத்திரி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தாள். அப்போது நானும் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக அங்கு சென்றிருந்தேன். இந்தியர்களும் அமெரிக்கர்களுமாய் நிறைய விருந்தினர்கள்.
அப்போது ஒரு அமெரிக்கர் என் சகோதரியிடம் ‘தினமும் இப்படி சுறுசுறுப்பாய் ஆஃபீஸிலும் வீட்டிலும் வேலை செய்துகொண்டே இருக்கிறீர்களே… நடுநடுவே இதுபோல குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்கிறீர்கள். குழந்தைகளையும் அத்தனை கருத்துடன் கவனித்துக்கொள்கிறீர்கள். வியப்பாக இருக்கிறது…’ என பாராட்டிவிட்டு கடைசியில் ஒரு கேள்வி கேட்டார்.
‘எல்லாம் சரி, உங்களுக்கே உங்களுக்காக நீங்கள் என்ன செய்துகொள்வீர்கள்?’
உடனே என் சகோதரி, ‘இப்போது நான் செய்கின்ற அத்தனையுமே எனக்காகவும் சேர்த்துத்தானே… வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப நிகழ்ச்சிகள்…’ என சொன்னபோது அவர் இடைமறித்தார்.
‘நன்றாக யோசித்துப் பாருங்கள் நான் கேட்ட கேள்விக்கான பதிலை… உங்களுக்கே உங்களுக்காக நீங்கள் என்ன செய்துகொள்வீர்கள்?’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஆமாம். வீட்டில் நாம் செய்யும் வேலை குடும்பத்தினர் அனைவருக்குமானது. அலுவலகத்தில் நாம் செய்யும் வேலை நிர்வாகத்தினருக்கானது. குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்பது சுகமான கடமை. எதையுமே நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. ஒதுக்கவும் தேவையில்லை.
ஆனால் நமக்கே நமக்கான ஒரு வேலையை அது ‘சும்மா’ எந்த வேலையுமே செய்யாமல் படுத்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, டிவியில் பிடித்த சேனலை பார்த்துக்கொண்டு, பிடித்த சினிமாவை முழுமையாக உட்கார்ந்த இடம் விட்டு நகராமல் பார்த்துக்கொண்டு… இப்படி ஏதேனும் ஒரு வேலையை நமக்கே நமக்காக செய்துகொள்பவர்கள், அதிலும் குறிப்பாக பெண்களை பார்ப்பது அரிது. அப்படியே அவர்கள் நேரம் ஒதுக்கி தனக்குப் பிடித்ததை செய்தாலும் ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள். நேரத்தை வீணடித்துவிட்டேன். அந்த நேரத்தில் மகனுக்கு பிடித்த தின்பண்டம் செய்துகொடுத்திருக்கலாம், மகளுடன் அமர்ந்து அவளை தேர்வுக்கு தயார் செய்திருக்கலாம் இப்படி ஏதேனும் ஒரு காரணத்தைத் தாங்களாகவே தேடித்தேடி எடுத்து தன் தலையில் சுமையாக்கிக்கொள்கிறார்கள்.
இந்த மனோபாவத்தை மாற்றிக்கொண்டால் பெண்களின் உடல் நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது. பிற்காலத்தில் குடும்பத்தினராலோ அல்லது பிள்ளைகளாலோ ஏமாற்றங்கள் ஏற்பட்டால் அது அத்தனை வேதனைப்படுத்தாது. ‘எப்படி எல்லாம் தியாகம் செய்தேன்… எப்படியெல்லாம் உழைத்தேன்…’ என்ற கழிவிறக்கம் தோன்றாது. நமக்கு உண்டாகும் துன்பங்களைவிட அவை கொடுக்கும் கழிவிறக்கமே நம்மை அதிகமாக பலவீனமாக்கும்.
இதே லாஜிக்தான் அலுவலகத்திலும். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்குள் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்று குடும்பத்துடன் யாரால் நேரத்தை செலவிட முடிகிறதோ அவர்களே திறமையானவர்கள்.
அதைவிட்டு 9 மணி நேர உழைப்புக்கு 12, 13 மணி நேரம் எடுத்துக்கொண்டு ‘நான் நாயா உழைத்தேன்… பேயா வேலை செய்தேன்… ஆனால் கொஞ்சமும் நன்றி இல்லாமல் நிர்வாகம் இப்படி செய்துவிட்டதே…’ என புலம்புபவர்களை பார்த்திருப்பீர்கள்.
அலுவகத்தில் நீண்ட நேரம் இருப்பவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களால் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியை முடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களில் எத்தனை பேருக்கு தங்களுக்குப் பிடித்த ஒரு திரைப்படத்தை சமையல் செய்துகொண்டோ அல்லது வீட்டு வேலை செய்துகொண்டோ பார்க்காமல் சோஃபாவில் ஓய்வாக அமர்ந்து கொண்டு ரசித்து பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது சொல்லுங்கள்.
பிள்ளைகள் செட்டில் ஆன பிறகு தானும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்த பாக்கியம் ஒரு சிலருக்குக் கிடைக்கலாம். அதுகூட பலருக்குக் கிடைப்பதில்லை. காரணம் அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் பலர்.
இனியாவது வாழும்போதே நமக்கே நமக்கான ஒருசில மணித்துளிகளை ஒவ்வொரு நாளும் ஒதுக்கப் பழகுவோம். அதுவும் ஒருவகையில் நம் எனர்ஜியை பூஸ்ட் செய்துகொள்ளவே உதவும். வீட்டில் அலுவலகத்தில் நம் கடமைகளை இன்னும் ஈடுபாட்டுடன் செய்யவே உதவி செய்யும்.
செல்போனைக் கூட தினமும் இரண்டுமுறை சார்ஜில் போட வேண்டியுள்ளது. மனிதர்கள் நாம் நம்மை சார்ஜ் செய்துகொள்ள வேண்டாமா? சொல்லுங்கள்.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. முயற்சியுங்களேன்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP