ஜம்முனு வாழ காம்கேரின் OTP-186: ‘சும்மா, மோட்டு வளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காதே!

பதிவு எண்: 917 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 186
ஜூலை 5, 2021

‘சும்மா, மோட்டு வளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காதே!

போனில் பேசுவது என்பது தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமல்ல. பேசியபடி மற்ற வேலைகளை செய்வதற்கும் அது ஊக்கம் அளிக்கும் என சொன்னால் நம்ப முடிகிறதா?

அலுவலகம் என்றாலும் வீடு என்றாலும் நடந்தபடியேதான் போனில் பேசுவேன். போனில் பேச ஆரம்பித்தாலே என் இடத்தைவிட்டு அனிச்சையாக எழுந்துகொண்டுவிடுவேன்.

பொதுவாக வீட்டில் போன் பேசும்போது எத்தனை வேலைகளை முடிப்பேன் தெரியுமா?

போன் பேசும்போது ஹெட்செட் போட்டுக்கொண்டோ அல்லது ப்ளூடூத் அணிந்துகொண்டோதான் பேசுவேன். ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு போனில் பேசும்போது என்னால் நான் சொல்ல வந்தை சொல்ல முடியாது. அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பேன். நடந்துகொண்டே பேசினால்தான் எதிராளி பேசுவதற்கு இணையாக ஏதேனும் பதில் கொடுக்க முடியும். என்னுடன் போனில் பேசுகின்ற நிறைய பேர் என்னிடம்  ‘ஏன் மூச்சிறைக்கிறது?’ என கேட்பார்கள். வேலை செய்துகொண்டோ அல்லது நடந்துகொண்டோ பேசுவதே இதற்குக் காரணம்.

ஓர் ஓய்வு நாளில் போனில் பேசினால் அந்த அறை ஷெல்ஃபுகளும், ஜன்னல் கம்பிகளும், ஃபேனும் சுத்தமாகிவிடும். போனில் பேசிக்கொண்டே அத்தனை வேலைகளையும் செய்து முடித்துவிடுவேன்.

போனில் பேசுவதும் கஷ்டமாக இருக்காது, வீடு சுத்தம் செய்வதும் இஷ்டமானதாகிவிடும்.

என்னுடைய இந்தப் பழக்கம், வாக்கிங் செல்வதற்கு  இணையான சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.

அதுபோலவே புத்தகங்கள் வாசிக்கும்போது, துணி மடித்து வைக்கும்போது என சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடை நடை நடைதான்.

இது தவிர காலையில் ஒருமணி நேர வழக்கமான நடைப்பயிற்சியும் உண்டு.

பள்ளி கல்லூரி நாட்களில் பாடப் புத்தகங்களை படிக்கும்போதுகூட நடந்துகொண்டேதான் படிப்பேன். உட்கார்ந்து படித்தால் ஒருப்பக்கம் படிக்க முடிகிறதென்றால் நடந்துகொண்டே படித்தால் 10 பக்கம் படித்துவிட முடியும் என்னால்.

இந்தப் பழக்கத்தினால்தான், இப்போதுகூட என்னிடம் படித்துவிட்டுக் கருத்துச் சொல்வதற்காக புத்தகங்களை அனுப்புவோருக்கு மிக விரைவாகவும் அதே சமயம் முழுமையாகவும் படித்துவிட்டு கருத்து சொல்லிவிட முடிகிறது. புத்தகத்தை என்னிடம் கொடுத்தவர்கள் ‘தள்ளித் தள்ளி படித்தீர்களா அல்லது முழுமையாகப் படித்தீர்களா?’ என கேட்பார்கள். அவர்களுக்கு நிரூபிக்க அந்தப் புத்தகத்தில் ஹைலைட் பாயிண்ட்டுகள் என்னென்ன இருந்தன என்பதை எடுத்துச் சொல்லி அவர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறேன்.

பொது மேடைகளில் போடியத்தில் பேசுவதைவிட ‘ஹேண்ட் மைக்’  வைத்துக்கொண்டு இயல்பாக நடந்தபடி பேசும்போது என்னால் சிறப்பாக பேச முடியும்.

இவ்வளவு ஏன் லிஃப்ட்டுக்காகக் கூட என்னால் பொறுமையாகக் காத்திருக்க முடியாது. வேகமாக படிகளில் ஏறி / இறங்கி சென்றுவிடுவதுண்டு. நான்காவது மாடி செல்ல வேண்டும் என்றால் கூட அலுப்பு பார்ப்பதில்லை.

ஆனால் வீட்டை விட்டு வெளியில் கிளம்பி விட்டால், சைக்கிள் ஓட்டிய காலத்தில் சைக்கிள். இப்போது பைக் அல்லது கார், சென்றடையும் தொலைவிற்கு ஏற்ப.

பொதுவாகவே ஓரிடத்தில் அமர்ந்திருப்பது என்பது என்னைப் பொருத்தவரை  கடினமான செயல். அப்படி அமர்ந்திருக்க வேண்டும் என்றால் தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தால்தான் உண்டு. அங்குதான் எழுந்திருக்காமல் 2-1/2  மணி நேரம் அமர்ந்திருக்க முடியும். நடுவில் எழுந்து செல்ல முடியாதே.

நடந்துகொண்டே இருக்கும்போது நம் எனர்ஜி இரண்டு மடங்காகிறது. ஏதோ செய்துகொண்டிருக்கிறோம் என்ற மனநிறைவும் கிடைக்கிறது. நமக்குள் நேர்மறைகள் அதிகமாகும். எதிர்மறை எண்ணங்கள் விலகிவிடும். தன்னம்பிக்கை ஜிவ்வென ஏறும். உற்சாகம் ஊற்றெடுக்கும்.

‘சும்மா மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காமல் எழுந்து வேலை ஏதாவது இருந்தால் பார்’ என நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.

அதில் உள்ள உளவியல் இதுதான். ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டே இருந்தால் தேவையில்லாத சிந்தனைகள் மனதுக்குள் ஆக்கிரமித்து எதிர்மறை கருத்துக்கள் நம்மிடம் அடைக்கலமாக ஓடோடி வந்துவிடும்.

ஓடிக்கொண்டே இருந்தால் உங்கள் வேகத்துக்கு எதிர்மறைகளால் ஓடிவரவே முடியாது. ‘சும்மா’ உட்கார்ந்திருந்தால் ஜம்மென்று உங்களுக்குள் உங்கள் அனுமதி இன்றி குடியேறி உங்களை ஆட்டுவிக்கும். கவனம்!

முயற்சித்துப் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 587 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon