ஜம்முனு வாழ காம்கேரின் OTP-187: ந(ண்)பர்கள்!

பதிவு எண்: 918 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 187
ஜூலை 6, 2021

ந(ண்)பர்கள்!

நேற்றைய செய்தி!

திருமணம் ஆகி கர்ப்பவதியான ஒரு பெண், ஃபேஸ்புக்கில் ஆண் குரலில் பேசி ஏமாற்றிய இரண்டு பெண்களை பத்து மாதத்துக்கும் மேலாக காதலித்து வந்திருக்கிறார். நேரில் சந்திக்காமலேயே சாட்டிங்கிலும் போனிலும் மட்டுமே பேசிப் பழகி வந்திருக்கிறார்கள். இடையில் அவருக்குக் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் ஃபேஸ்புக் நண்பனை திருமணம் செய்துகொள்ளும் ஆசை மட்டும் விலகவில்லை. அதற்குத் தன் குழந்தை  இடைஞ்சலாக இருக்கும் என கருதி தன் குழந்தையை கொன்றுவிட அது போலீஸ் கேஸாகி அவர் கைதாக, ஆண்களாக நடித்த அந்த  இரண்டு பெண்களும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இதைப் படித்தபோது கல்லூரி நாட்களில் கேள்விப்பட்ட உண்மை சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

நான் தினமும் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு மனநிலை பிழன்றவர் தெருவில் அலைந்துகொண்டிருப்பார். அவருக்குப் பின்னால் உள்ள கதையை சக மாணவிகள் பேசி சிரித்துக்கொள்வார்கள்.   அவர்களுக்கு எப்படி தெரியும் என்றெல்லாம் நினைத்துக்கொள்வேன். ஆனால் கேட்டதில்லை.

அந்த நாட்களில் நான் தினம் ஒரு கதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். என் நித்தியப்படி வேலைகளும் அதுவும் ஒன்றாக இருந்தது.  இந்த உண்மைக் கதையை எழுதி எழுதி பார்த்தேன். சரியான வடிவமே வரவில்லை. காரணம் அதன் பின்னால் உள்ள விவரமே எனக்கு சரியாக புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததுதான்.

அப்போதெல்லாம் எதிர்காலத்தில் சினிமா எடுக்க வேண்டும் என்கின்ற ஆர்வமும் இருந்தது. எங்கள் நிறுவனப் பணிகளில்  ஆவணப்படம் எடுப்பதும் ஒன்றானதும் அதன் தாக்கத்தில்தான்.

என் கல்லூரியின் உள்ளேயே இருந்த ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கும் மாணவிகளை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரித்து வேறு அறை மாற்றுவார்கள். ‘இரண்டு மாதங்கள் நன்றாக பழகி நட்பாக இருப்பவர்களை ஏன் பிரித்து வேறு அறை மாற்றுகிறார்கள்?’ என்றெல்லாம் நினைத்துக்கொள்வேன். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகள் மீது பரிதாபம் உண்டாகும். பாவமாக இருக்கும்.

நேற்று, மூன்று பெண்கள் சம்மந்தப்பட்ட விபரீத செய்தியை படித்தபோது அந்த மனநிலைப் பிழன்றவர் நினைவுக்கு வந்தார்.

இரண்டு இளைஞர்கள். இணைபிரியாத நண்பர்கள். ஒருவர் இல்லாமல் மற்றொருவரை பொதுவெளியில் பார்க்கவே முடியாது. நட்பு என்ற வார்த்தைக்கே இலக்கணம் எழுதியவர்கள் அவர்கள்தானோ என்ற அளவுக்கு அப்படி ஒரு நட்பை வெளிக்காட்டிக்கொள்வார்கள்.

ஒருவனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன. மற்றொருவன் திருமணம் ஆகி ஒரு மாத காலத்துக்குள் பிரச்சனை உண்டாகி விவாகரத்தானவன்.

அவன் பெற்றோர் அவனுக்கு வேறு திருமணம் செய்துவைக்க மன்றாடினார்கள். ஆனால் அவனோ வேண்டாம் வேண்டாம் என மறுத்துக்கொண்டே வந்தான். அவன் பெற்றோர் அவனுக்காக பார்க்கும் ஒவ்வொரு பெண் வீட்டாரையும் மகனுக்கு அறிமுகம் செய்கிறார்களோ இல்லையோ அவன் நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்து எப்படியாவது அந்த சம்மந்தத்தை மகனுக்கு முடித்து வைக்க கேட்டுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அந்த நண்பன் அந்த குடும்பத்துக்கு நெருக்கம்.

அவனும் தன் நண்பனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. எந்த பெண்ணையுமே பார்க்கும் முன்பே வேண்டாம் வேண்டாம் என மறுத்துக்கொண்டே இருக்கிறான். அவன் பெற்றோருக்கும் அலுத்து சலித்துப் போய்விட்டது. நண்பனுக்கும் தான். ஆனாலும் அவன் பெற்றோரிடம் அடுத்த சம்மந்தத்தை நிச்சயம் முடித்துவிடலாம் என உத்திரவாதம் அளித்து வருகிறான்.

ஒருநாள் தன் மகன் விவாகரத்து செய்த அந்தப் பெண்ணை ஒரு கடையில் பார்க்கிறார்கள் அந்த பெற்றோர்.

அவள் வேறு  திருமணம் செய்துகொண்டிருந்தாள். அருகில் ஒரு குழந்தை அவள் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது.

அவள் இயல்பாக சிரித்தாள். ஆனால் அவர்களால் சிரிக்க முடியவில்லை. தலை குனிந்து தடுமாறி நகர முற்பட்டார்கள்.

‘என்ன ஆண்ட்டி, எப்படி இருக்கிறீர்கள், உங்கள் மகன் எப்படி இருக்கிறார்’ என கேட்டாள்.

‘ம்… இருக்கிறோம். உங்களுக்குள் என்ன பிரச்சனை என எங்களுக்கு இதுவரை பிடிபடவே இல்லை. அவன் திருமணம் செய்துகொள்ளவே மறுக்கிறான்… உன்னால் ஏற்பட்ட அதிர்ப்த்தியினால்…’ என்று எதையோ சொல்லப் போய் எதையோ சொல்லி உளறிக்கொட்டினார்கள்.

‘ஆண்ட்டி, என்னால் அதிர்ப்த்தி இல்லை. அவருடைய நண்பன் மீதான ஈர்ப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம்… அதை அவரே வெளிப்படையாக என்னிடம் சொன்ன பிறகு எப்படி வாழ முடியும்… ஆனால் அந்தக் காரணத்தை சொல்ல வேண்டாம் என என் காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொண்டதால் மியூட்ச்சுவலாக வேறு காரணங்களை சொல்லி பிரிந்து விட்டோம்…’

அவர்கள் அதிர்ச்சியாகி நின்றார்கள். அப்படிப்பட்ட நண்பனிடமா பெண் வீட்டாரை அறிமுகம் செய்து வைத்து எப்படியாவது தன் மகனை திருமணத்துக்கு சம்மதம் சொல்லச் சொல்லி வந்தோம் என வெட்கினார்கள். அவர்களுக்குள்ளான ‘நட்பு’ அந்த லட்சணத்தில் இருக்கும்போது அவன் எப்படி தன் மகன் திருமணம் செய்துகொண்டு வாழ உதவி செய்வான்?

பொது இடம் என்றும் பாராமல் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள் அந்த பெற்றோர்.

இது சாத்தியமா, சாத்தியமில்லையா?, திருமணம் ஆன ஒரு ஆணுக்கும், ஆகாத ஒரு ஆணுக்கும் ஈர்ப்பு வருமா? அந்த நண்பனிடம் இது குறித்து எப்படி கேட்பது? எப்படி தன் மகனை அவன் நண்பனிடம் இருந்து மீட்பது? என்றெல்லாம் கவலைப்பட்டு மருத்துவர்களிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். நண்பனிடம் பேசியும் பார்த்திருக்கிறார்கள்.

அதற்கு அவன் ‘உங்கள் மகன் சொல்லட்டும் நான் விலகுகிறேன்’ என சொல்லி இருக்கிறான். மகனோ ‘எதற்காக என் நண்பனிடம் இதையெல்லாம் பேசினீர்கள்? என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள்…’ என கத்தி பெற்றோரை வாய்க்கு வந்தபடி திட்டி தனி வீடெடுத்து சென்றுவிட்டான்.

நண்பனிடம் பேசியதற்கே இந்தக் கூத்து, அவன் எப்படி மருத்துவரை சந்திக்க வருவான்?

இந்தக் கவலையிலேயே அவன் அப்பா அம்மா அடுத்தடுத்து இறந்துபோனார்கள்.

அவனுடைய அப்பா அவன் பெயரில் ரெஜிஸ்ட்டர் செய்து கொடுத்த வீட்டைக் கூட தன் நண்பன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுத்துவிட்டதாகவும், வீடு வாசல் இத்யாதி இத்யாதி எல்லாவற்றையும் இழந்து மனநிலைப் பிழன்று தெருவில் அலைந்துகொண்டிருப்பதாகவும், அவனை ஈர்த்த அந்த நண்பன் வீடு, குடும்பம், மனைவி, மக்கள் என சந்தோஷமாக இருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள்.

சில சம்பவங்கள், நிகழ்வுகள் நம் மனதைவிட்டு விலகுவதில்லை. அதுபோலதான் இதுவும். அதனால்தான் நான் என்றாவது சினிமா எடுத்தால் இந்தக் கதையை திரைப்படமாக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். அட்லீஸ்ட் ஆவணப்படமாகவாவது கொண்டு வருவேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 45 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon