ஜம்முனு வாழ காம்கேரின் OTP-195: நம்மைப் பிடிப்பதற்கும் வெறுப்பதற்கும் காரணம் உண்டா?

பதிவு எண்: 926 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 195
ஜூலை 14, 2021

நம்மைப் பிடிப்பதற்கும் வெறுப்பதற்கும் காரணம் உண்டா?

மிக சமீபத்தில் ஒரு பேட்டி. என் முன் வைக்கப்பட்ட ஏராளமான கேள்விகளில் இரண்டை மட்டும் இங்கு பகிர்கிறேன்.

—கேள்வி:1—

மற்றவர்கள் உங்களைப் பார்த்து வியப்பதற்கும், முன்னுதாரணமாக வைத்துக்கொள்வதற்கும் என்ன காரணம்?

‘அட, நம்மைப் பார்த்து வியக்கக்கூட செய்கிறார்களா?’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டு பேட்டிக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

மற்றவர்கள் ஏன் என்னைப் பார்த்து வியக்கிறார்கள் என நான் ஆராய்ச்சி எல்லாம் செய்ததில்லை. காரணம், வியக்கிறார்கள் என்று உங்கள் கேள்வி மூலம் சொன்னபோதுதான் அந்த உண்மை எனக்கே தெரிந்தது. ‘என்னையே எனக்கு ஏன் பிடிக்கிறது?’ என்பதற்கு நான் பதில் சொன்னால் அதுவே நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கு மிகப் பொருத்தமான பதிலாகிவிடும்.

முதலாவது…

ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்வது. அதற்கானப் பாதையை உருவாக்குவது. அதில் நேர்மையாகப் பயணிப்பது.

இலக்கு என்பது என் நிறுவனம் சார்ந்து சாஃப்ட்வேர் தயாரிப்பதிலும் அனிமேஷன் வடிவமைப்பதில் மட்டும் அல்ல. படிக்கின்ற காலத்தில் படிப்பு சம்மந்தப்பட்ட இலக்குகள், ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது என் திறமை சம்மந்தப்பட்ட இலக்குகள், சமைக்கும்போது சமையல் குறித்த இலக்குகள், குடும்ப விழாக்களுக்கு அது குறித்த இலக்குகள் என ஒவ்வொரு சின்ன விஷயத்துக்குமே ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படும்போது அதுவே என்னை உந்திச் செலுத்தும் ஆக்க சக்தியாக மாறுகிறது.

இரண்டாவது…

அப்படி இலக்கை நோக்கிய பயணத்தில் ஏதேனும் தடங்கல்கள் வந்தால் எடுத்துக்கொண்ட முயற்சியை பாதியிலேயே விட்டுவிடாமல் காரணங்களை ஆராய்ந்து மாற்று முயற்சிகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் உறுதியுடன் செயல்படுவது.

அதுபோல என் முயற்சிகளுக்கு தேவையில்லாத எதிர்மறை விமர்சனங்கள் வரும்போது என் காதுகள் தானாகவே மூடிக்கொள்ளும். இதனால் மன உளைச்சல்களில் சிக்கிக்கொள்ளாமல் செயல்பட முடிகிறது.

மூன்றாவது…

ஏதேனும் தவறுகளோ அல்லது தடுமாற்றமோ ஏற்பட்டால் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு அது மீண்டும் நடக்காத அளவுக்கு மனதை தயார்படுத்துவது. என் செயல்பாடுகளையும் என் சூழலையும் கண்காணிப்பது.

இதெல்லாம் ஏதோ அலுவலகக் கோட்பாடுகள் போல இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். என் நிறுவனத்தில் மட்டும் அல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சின்ன சின்ன விஷயங்களிலும் நான் பின்பற்றுபவை.

இதுவே என்னை எனக்குப் பிடிப்பதற்குக் காரணம். இதுவே மற்றவர்கள் வியக்கவும் காரணமாக இருக்கலாம். எனக்கு சரியாகத் தெரியவில்லை.

—கேள்வி:2—

கேள்வி இரண்டு: உங்களை வெறுப்பவர்களும் உண்டா?

நம்மை நேசிப்பவர்களைவிட நம்மை வெறுப்பவர்களை எளிதாக இனம் கண்டுகொள்ள முடியும். காரணம் நம்மை நேசிப்பதற்கு நம்மிடம் ஆயிரம் ஆயிரம் நல்ல விஷயங்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறுப்பதற்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் இருந்து விட்டால் போதும்.

ஆம். நம்மிடம் உள்ள அசாத்திய தன்னம்பிக்கை ஒன்றே போதுமே, மற்றவர்கள் நம்மை வெறுப்பதற்கு.

‘வெறுக்கிறேன்’ என யாரும் நேரடியாக சொல்வதில்லை. ஆனால் விலகிவிடுவார்கள். அதில் இருந்து தெரிந்துகொள்வதுதான்.

அசாத்திய தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு, வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லை, அவர்கள் மிகவும் ஆனந்தமாக வாழ்பவர்கள், அவர்களுக்கு எந்த சோகங்களுமே கிடையாது, அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக கடவுள் அருள் புரிகிறார், அவர்கள் கொண்டாட்டமான வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டுமே பிறப்பெடுத்திருக்கிறார்கள் என பல்வேறு தவறான நம்பிக்கைகள் உள்ளன.

எல்லாவற்றையும் விட கொடுமையானது என்னவென்றால், ‘தன்னம்பிக்கையானவர்களுக்கு எவ்வளவு அடித்தாலும் வலிக்கவே வலிக்காது’ என்று நினைத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் துரோகங்கள் செய்வதுதான்.

அவர்களுக்கும் வலிக்கும். அவர்களுக்கும் அழுகை வரும். அவர்களுக்கும் கோபம் வரும். அவர்களாலும் திருப்பி அடிக்க முடியும். அவர்களாலும் எல்லாம் செய்ய முடியும். ஆனாலும் அவர்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு மேலும் மேலும் நல்ல பண்புகளை உட்செலுத்தி அவர்களை செம்மைப்படுத்துகிறது. அவ்வளவுதான்.

(பேட்டி வெளியானதும் முழுமையான நேர்காணலை பகிர்கிறேன்.)

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 836 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon