ஜம்முனு வாழ காம்கேரின் OTP-196: யாரைப் பார்த்தும் பரிதாபப்படாதீர்கள்!

பதிவு எண்: 927 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 196
ஜூலை 15, 2021

யாரைப் பார்த்தும் பரிதாபப்படாதீர்கள்!

ஒருவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது சிம்பதி. இதனை கருணை, பச்சாதாபம் என்றெல்லாம் சொல்லலாம். ‘அடடா இப்படி ஆகிவிட்டதே…’ என பரிதாபப்படுவதை சிம்பதி எனலாம்.

ஒருவரின் துன்பத்தை தன் துன்பமாக பாவித்து உணர்வது எம்பதி. அடுத்தவரை அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை அதன் வீச்சிலேயே புரிந்துகொண்டு அவர்களின் துன்பத்தைப் பார்த்துப் பரிதாபப்படுவதுடன் அந்த துன்பம் நமக்கு வந்தால் எப்படி துடிப்போமோ அதே வீரியத்துடன் அதனை உணர்ந்து அவர்களின் துன்பத்துக்கு வடிகாலாக நம்மால் செயல்பட முடியுமானால் அதுவே எம்பதி எனப்படுகிறது.

மற்றவர்களின் பிரச்சனை நம் கவனத்துக்கு வரும்போது அந்த நிமிடம் நமக்குள் ஒரு பரிதாப உணர்வு, பச்சாதாபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஆனால் தொடர்ச்சியாக அதையே நினைத்துக்கொண்டு அதுகுறித்தே பேசிக்கொண்டிருந்தால் மனோரீதியாக நமக்குள் ஒரு எதிர்மறை சிந்ததனை அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக்கொள்ளும்.

இதைத்தான் அவரவர்கள் கர்மாவை அவரவர்கள் அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும் என்கிறார்கள். அவரவர்களின் கஷ்டநஷ்டங்களை அவரவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்து நாம் தொடர்ச்சியாக பரிதாபப்பட்டால் நமக்குள்ளும் எதிர்மறை சிந்தனை ஒட்டிக்கொள்ளும்.

எங்கள் உறவினர் ஒருவர் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த செய்தியைக் கேள்விப்பட்ட மற்றொரு உறவினர் மனதளவில் கொஞ்சம் அப்செட். சதா அவரைப் பற்றியே நினைத்து, அதுகுறித்தே பேசி கொஞ்ச நாட்களில் அவரே ஒரு நோயாளிபோல் ஆனார்.

ஒருநாள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மருத்துவர்கள் சொன்ன ஒரு கருத்து வியக்க வைத்தது.

சிறுநீரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட உறவினர் குறித்தே சதா சிந்தனை செய்துகொண்டிருந்ததால் அந்தப் பிரச்சனை தனக்கும் வந்துவிட்டதாக மனோரீதியாக கருத ஆரம்பித்துவிட்டார். கடுமையான வெயில், போதுமான தண்ணீர் குடிக்காமை, மனச்சோர்வு இவற்றினால் சிறுநீர் வெளியாறாமல் தவித்திருக்கிறார். தனக்கு சிறுநீரகம் பழுதாகிவிட்டதாகவே பயந்ததால் மயக்கம் அடைந்திருக்கிறார். இது ஒரு விதமான மனோரீதியான பிரச்சனை. அந்த நினைவுகளில் இருந்து அவர் விடுபட்டாலே போதும் உடல்நலமாகிவிடும் என்றார்.

இப்படி சிம்பதியாக பரிதாபப்படுவதை விட்டு எம்பதியாக அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்யலாம். உதவி என்பது பணமாகவோ, பொருளாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ஏதேனும் ஒருவிதத்தில் அவர்களின் மனோபலத்தை மேம்படுத்த நம்மால் உதவ முடிந்தால் நமக்கும் எதிர்மறை எண்ணங்கள் ஒட்டிக்கொள்ளாது.

இது குறித்தும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவனே உண்மையாக உயிர் வாழ்பவனாவான். அப்படி  உதவாதவன்  இறந்தவர்களாகக் கருதப்படுவான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

(குறிப்பு: புதிய தலைமுறை பெண் இதழுக்காக எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி)

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 359 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari