பதிவு எண்: 925 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 194
ஜூலை 13, 2021
வலி இல்லாத உறக்கம்!
முக்கியக் குறிப்பு!
இன்றைய பதிவுக்கு யாரும் பரிதாபப்பட வேண்டாம். என் உடல் நலனையும் ஆரோகியத்தையும் மிக நன்றாகவே பார்த்துக்கொள்வேன். பார்த்துக்கொள்கிறேன். இனியும் பார்த்துக்கொள்வேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதையும் நான் நன்கறிவேன். நடந்த ஒரு நிகழ்வை பதிவாக்கி அதிலும் ஓர் உளவியலை சொல்ல முற்பட்டேன். அவ்வளவுதான். எனவே ‘உடற்பயிற்சி செய்யுங்கள்’, ‘நடைப் பயிற்சி செய்யுங்கள்’, ‘மூச்சுப் பயிற்சி செய்யுங்கள், ‘யோகா செய்யுங்கள்’, ‘தியானம் செய்யுங்கள்’ என்பது போன்ற அறிவுரைகளை தவிர்க்கவும். என் பதிவுகளின் தொடர் வாசகர்கள் இயற்கையுடன் இயைந்த என் வாழ்க்கை முறையை நன்கறிவர். எத்தனைதான் நம்மை நாம் பார்த்துக்கொண்டாலும் சில அசெளகர்யங்கள் ஏற்படத்தான் செய்யும். அதுவே இயற்கை. அப்படி இருந்தால்தான் அது இயல்பான வாழ்க்கையும்கூட. எனவே, அனைவரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி.
—-
சென்ற வாரத்தில் ஒருநாள் இரவு 7 மணி இருக்கும். எங்கள் நிறுவனத்தின் ஒரு ப்ராஜெக்ட் டீம் அனுப்பி இருந்த புரோகிராமின் லாஜிக்கில் சிறு பிழை. அவர்களால் சரி செய்ய முடியாததால் எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதை இயக்கி ஆங்காங்கே புரோகிராமை சற்று மாற்றி அமைத்து டைப் செய்து சரி செய்துகொண்டிருந்தேன்.
திடீரென Alt + Tab கீக்களை அழுத்தும் கட்டை விரலிலும் நடுவிரலிலும் சுருக்கென ஒரு வலி. வலி என்னவோ இடது கையில்தான். ஆனால் ஷாக் அடித்ததைப் போல வலது கையையும் உதறிக்கொண்டு இடது கையை அப்படியே சில நொடிகள் பார்த்தேன். மீண்டும் மெதுவாக, ‘பூனை நடை’ என்று சொல்வார்களே அதுபோல மிக மென்மையாக அதே Alt + Tab கீக்களை அழுத்துவதாக நினைத்துக்கொண்டு அந்தக் கீக்களை தடவிக்கொடுத்தேன். அழுத்த முடியவில்லையா அல்லது ‘சுருக்’-கென்ற அந்த வலிக்கு மனம் எச்சரித்ததால் அவ்வளவுதான் அழுத்தினேனா என தெரியவில்லை. வலிக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு அசெளகர்யமாக இருந்தது.
‘சரி பார்ப்போம்’ என நினைத்துக்கொண்டு இரண்டு கைகளிலும் விரல்களுக்கும், மணிகட்டுக்கும் வழக்கமாக செய்யும் சிறு அசைவுப் பயிற்சியை செய்தேன். பின்னர் லாஜிக்கை சரி செய்து முடித்து அனுப்பி விட்டு, ஒரு வீடியோ எடிட்டிங் இருந்ததால் அதை எடுத்தேன். அப்போது மீண்டும் அதே விரல்களில் வலி. இந்த முறை சுருக்கென வலிக்கவில்லை. ஆழமாக வலித்ததைப் போல இருந்தது.
மணிக்கட்டை லேப்டாப்பின் மீது வைத்தபடியே கட்டைவிரலையும் நடுவிரலையும் அசைத்து அசைத்து பார்த்தேன். அந்த விரல்களில் மட்டும்தான் வலியா அல்லது மற்ற எல்லா விரல்களிலும் வலியா என தெரிந்துகொள்ள எல்லா விரல்களையும் பியானோ வாசிப்பதைப் போல கீபோர்டில் எந்த கீக்களையும் அழுத்தமால் ஆக்ஷன் மட்டும் செய்து பார்த்தேன். எங்கு வலிக்கிறது என சரியாக தெரியவில்லை. ஆனால் வலி மெல்ல கை விரல்களில் பரவுவதை மட்டும் உணர முடிந்தது.
இதை சாக்காக வைத்துக்கொண்டு லேப்டாப்பை மூடிவைத்து ஆன்லைன் ஆஃபீஸை பூட்டிவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தேன். டீவி சேனல்களை மாற்றிக்கொண்டே வந்தேன். எந்த சேனலை மாற்றினாலும் வில்லிகள் விழிகளை விரித்து ஆள்காட்டி விரலை உயர்த்தி எதிரே நிற்கும் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ மிரட்டும் காட்சிகளே. வலி எடுத்த இடது உள்ளங்கையில் ஒரு மென்மையான பந்தை எடுத்து வைத்துக்கொண்டு அதை கை விரல்களால் அழுத்துவதைப் போல பயிற்சி செய்தபடி வலது கையால் ரிமோட்டில் சேனலை மாற்றிக்கொண்டே இருந்தேன்.
எந்த சேனலையும் பார்க்கப் பிடிக்கவில்லை. ஏதோ ஒரு சேனலில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துவிட்டு இரவு வழக்கமாக குடிக்கும் மூலிகை வெந்நீர் தயாரிக்க சமையல் அறை சென்றேன்.
சீரகம் + கருஞ்சீரகம் + பெருஞ்சீரகம் + ஓமம் + மஞ்சள் + கடுக்காய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் பொடி டப்பா வைத்திருக்கும் சிறிய ஷெஃல்பின் கதவை வலது கையால் திறந்தபடி இடது கையால் அந்த டப்பாவை எடுத்தேன். நான் எடுத்தேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எடுக்கவில்லை. எடுக்க முடியவில்லை. அந்த டப்பா என் கைகளில் அகப்படாமல் சண்டித்தனம் செய்தது. மீண்டும் மீண்டும் எடுக்க முற்பட்டு தோற்றேன். அந்த டப்பாவை மட்டுமல்ல. எதையுமே பிடிக்க முடியவில்லை. வலி பெரிதாக இல்லை என்றாலும் அழுத்தவே முடியவில்லை. அழுத்தினாலும் ஆவிகள் (!) லேசாக மிதந்துகொண்டு அலையுமே அதுபோல உணர்ந்தேன். உடலின் மற்ற பாகங்களை அசைத்துப் பார்க்கிறேன். நடந்து பார்க்கிறேன். ஓடிப் பார்க்கிறேன். எல்லாம் ஓகே. இடதுகை விரல்களில் மட்டுமே பிரச்சனை என்றபோது கொஞ்சம் நிம்மதியானது.
இப்போதுதான் என் அப்பாவிடம் சொல்லலாம் என நினைத்து அழைத்தேன். செயல் முறை விளக்கத்துடன் செய்தும் காண்பித்தேன்.
கொதிக்க ஆரம்பித்த வெந்நீரை ஆளுக்கொரு டம்ளரில் ஊற்றி மூலிகைப் பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கலக்கிக் கொடுத்தார் அப்பா.
அப்போது இரவு மணி 9. அமெரிக்காவில் இருக்கும் அம்மா போன் செய்யும் நேரம் அது. என் கைவலி அமெரிக்கா வரை பறந்து சென்றது வாட்ஸ் அப் மூலம். அங்கிருந்து என் உடன்பிறந்தோருக்கும் பறந்தது. அம்மா சுக்குப் பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து தடவிக்கொள்ளச் சொன்னார். தடவிக்கொண்டேன்.
கை விரல்களில் மட்டும்தான் வலி. ஆனால் நான் மணிக்கட்டு வரை சதும்பத் தடவிக்கொண்டேன். கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. ஆனாலும் அந்த எரிச்சல் வலிக்கு இதமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் சுக்கு பேஸ்ட் கையின் சூட்டுக்குக் காய்ந்து உதிர ஆரம்பித்தது.
அதற்குள் அப்பா தன்னுடைய ஹோமியோபதி மருந்து பீரோவைத் திறந்து இனிப்புருண்டையில் மருந்தை கலந்து ஒரு சிறிய டப்பாவில் அடைத்தார். ஏன் பெரிய டப்பாவில் அடைக்கக் கூடாதா என நினைக்க வேண்டாம். ஹோமியோபதி மருந்தெல்லாம் குட்டி குட்டி டப்பாக்களில்தான் வைத்திருப்பார்கள். அவை குழந்தைகளின் பால் பாட்டிலின் மைக்ரோ சைஸை நினைவுப்படுத்தும்.
கைகளின் மேலே தடவிக்கொள்ளவும், உள்ளே சாப்பிடவும் என இரண்டு வகை ஹோமியோ மருந்துகளை என் படுக்கையின் அருகே கைக்கு எட்டும் தூரத்தில் வைத்தார். வலி அதிகமானால் இரண்டையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
தூங்க முற்பட்டேன். என் கை தன் ‘கை’வரிசையைக் காட்ட ஆரம்பித்தது. வலி மெல்ல மெல்ல எல்லா விரல்களுக்குள்ளும் ஊடுருவிச் சென்றது. இடது கையை அப்படி இப்படி என எப்படியெல்லாமோ வைத்துக்கொள்ளப் பிரயத்தனப்பட்டேன். மரத்துப் போனதைப் போல ஒரு உணர்வு. ஆனால் வலி மட்டும் தெரிந்தது. எதையுமே விரல்களால் பிடிக்க முடியவில்லை. தொடு உணர்வு அறவே இல்லை. விக்ஸ் பாட்டிலை எடுக்க முடியவில்லை. போர்வையை போர்த்திக்கொள்ள முடியவில்லை. படுக்கும் முன் கடைசியாக நாங்கள் அன்று செய்து முடித்து அப்லோட் செய்திருக்கும் ப்ராஜெக்ட்டை ஒருமுறை மொபைலில் பார்ப்பேன். அதையும் செய்ய முடியவில்லை.
எப்படியோ இரவு 12 மணிக்கு தூங்கி இருப்பேன் என நினைக்கிறேன்.
இப்படியாக முதல் நாள் ‘வலி’ இரவு கழிந்தது.
மறுநாள் காலை வழக்கம்போல் 3 மணிக்கு விழிப்பு தட்டியது. அப்போதுதான் கை நினைவு வந்தது. அசைத்துப் பார்த்தேன். வலி அதிகமாக தெரிந்தது. கையை உயர்த்தவே முடியவில்லை. மரத்திருந்தது.
எப்படியோ மெல்ல எழுந்தேன். கொசுவலைக்குள் இருந்து குனிந்து வெளியே வரவே முடியவில்லை. ஒரு கை இல்லாமல் இருப்பது எத்தனை அவஸ்த்தையாக இருக்கும் என்பதை நேரடி அனுபவமாக உணர்ந்தேன்.
பல் தேய்த்து, முகம் கழுவி என அதையுமே நிம்மதியாக செய்ய விடாமல் இடது கை வலி மணிக்கட்டையும் தாண்டி முட்டிக்கையை நோக்கிப் பரவியதைப் போல இருந்தது. கெய்சரை ஆன் செய்து வெந்நீரை போட்டு அதை வெதுவெதுப்பாக கைகளில் ஊற்றிக்கொண்டேன். அத்தனை சுகமாக இருந்தது.
சுவாமி அறைக் கதவை வலது கையால் மட்டுமே திறந்து வழக்கம்போல சுவாமிகளுக்கு அட்டெண்டன்ஸ் கொடுத்துவிட்டு காபி கலக்க ஆயத்தமானேன்.
பால் பாக்கெட்டைக் கூட கட் செய்ய முடியவில்லை. எப்படியோ வலது கையாலேயே கட் செய்து டப்பாவில் ஊற்றினேன். முதல்நாள் போட்டிருந்த டிகாஷனே இருந்ததால் அதில் காபி கலந்து சாப்பிட்டேன்.
லேப்டாப்பை ஆன் செய்தேன். இதற்கு அப்பா சொன்ன ஹோமியோ மருந்து நினைவுக்கு வர அதை எடுத்து கைகளில் தடவிக்கொண்டேன்.
ஒரு கை விரல்களாலேயே ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவை டைப் செய்ய ஆரம்பித்தேன். கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பேசி டைப் செய்யும் வசதியை பயன்படுத்தலாம் என்றால் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு தொந்திரவாக இருக்கும் என்பதால் தவிர்த்தேன். சுருக்கமாக டைப் செய்து பிழை திருத்தம் செய்து பதிவிட்டேன்.
எழுதிய பதிவை அப்லோட் செய்துவிட்டு வாக்கிங் செல்வதற்கு முன் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ளலாம் என நினைத்துப் படுத்தேன். இதற்குள் அப்பா எழுந்து விட்டார்.
டிவியில் ‘யோகமான நாள், தொட்டதெல்லாம் துலங்கும், அமோகமாக இருக்கும். சந்திர மங்கள் யோகம், எங்கேயோ செல்லப் போகிறீர்கள்… கஷ்டங்கள் எல்லாம் உங்களைப் பார்த்தால் தெறித்து ஓடிவிடும்’ என்று ஜோதிடர் என் ராசிக்கு பலன் சொல்லிக்கொண்டிருந்தார்.
வலி என்னைப் பார்த்து தெறித்து ஓடப் போகிறதா? நான் வலியைப் பார்த்து தெறித்து ஓடப் போகிறானா? என போகப் போகத்தானே தெரியும் என நினைத்து சிரித்துக்கொண்டேன்.
பத்து நிமிடங்கள் கூட படுக்கையில் இருப்பு கொள்ளவில்லை. எழுந்ததும் அப்பா நேரிலும், அம்மா போனிலும் ‘எப்படி இருக்கிறது கைவலி?’ என கேட்டார்கள். வாட்ஸ் அப்பில் உடன் பிறந்தோரின் நலன் விசாரிப்புகள் வந்திருந்தன.
மீண்டும் சுக்குப்பொடி வைத்தியம் செய்துகொண்டேன். ஹோமியோபதி மாத்திரையையும் எடுத்துக்கொண்டேன்.
வாக்கிங் செல்வதற்காக மொட்டை மாடிக்குச் சென்றபோது அந்த கதவின் பூட்டை ஒற்றைக் கையால் திறப்பது அத்தனை சிரமமாக இருந்தது. எப்படியோ திறந்து, செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, பறவைகளுக்கு உணவளித்து, வாக்கிங் சென்றுவிட்டு மீண்டும் கதவை பூட்ட முற்பட்டபோது வலது கையில் கொடுத்த கூடுதல் அழுத்தம் இடதுகைகளுக்குச் சென்று வலியைக் கூட்டியது. எப்படியோ பூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.
அப்போதுதான் கவனித்தேன். என் கைகளை நான் கீழேயே தொங்க விடவில்லை. மருதாணி இட்டுக்கொண்டு அது காய்வதற்காக வைத்துக்கொள்வார்களே அதுபோல தூக்கியே வைத்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். கீழே தொங்க விட முடியவில்லை. வலி. பிராணன் போகும் வலி என்பார்களே அதுப்போன்றதொரு வலி.
குளிக்க, தலை வாரிக்கொள்ள, காப்பி கலக்க, உணவு சாப்பிட என எல்லாவற்றையும் ஒற்றைக் கையாலே செய்வது பிராண அவஸ்த்தையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் உதவி தேவைப்பட்டது. ஆனாலும் கூடுமானவரை நானே செய்யவே முற்பட்டேன்.
என்னவோ எனக்கு, பக்கவாதத்தால் இடது கைகால் செயலிழந்த என் பெரியப்பா நினைவு வந்தது. ஆனாலும் அவர் ஒரு கை ஒரு காலால் நடப்பார். பெரியம்மாவுக்கு சமையல் வேலைகளில் உதவுவார். தீபாவளி பட்சணங்கள் செய்வார்.
இதை நேரில் என் அப்பாவிடமும், போனில் என் அம்மாவிடமும் சொன்ன போது ‘சும்மா பைத்தியக்காரத்தனமா எதுவும் நீயா யோசிக்காதே… தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கிறேன் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறாய் உன் பதிவுகளில்…. எத்தனை பேர் கண் பட்டிருக்கிறதோ…’ என்றார்கள். அவர்களின் அஞ்ஞானம் அவர்கள் வார்த்தைகளில் வழிந்தோடியது.
ஒரு கையாலேயே வெர்ச்சுவல் அலுவலகத்தில் மேற்பார்வை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். ப்ராஜெக்ட்டில் எந்த பிரச்சனை என்றாலும் போனில் பேசி மட்டுமே தீர்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
மருதாணி இட்டுக்கொள்வதைப் போல சுக்கு, ஹோமியோ மருந்து, மற்றும் நீலகரி தைலம் என மாறி மாறி போட்டு இடது கையில் நிரந்தரமாக ஒரு மருந்து வாசனை ஏறியதைப் போல் இருந்தது.
இப்படியாக இரண்டாவது நாள் இரவும் கழிந்தது.
மூன்றாம் நாள் காலை வழக்கம்போல மூன்று மணிக்கு விழிப்பு வந்தது. இப்போது வலி தெரியவில்லை. காரணம் பழகி விட்டிருந்தது. ஆனால் கையை மருதாணி இட்டுக்கொண்டு காயும் போஸில் இருந்து மாற்ற முடியவில்லை.
ஒரு கையால் வேலை செய்வதும் பழகிவிட்டது. ஒன்றில்லாதபோது அல்லது ஒன்றை இழக்கும்போதுதான் அதன் மதிப்பும் நமக்குப் புரியும் என்ற உண்மையை மீண்டும் வலுவாக உணர்த்தியது வலி மிகுந்த அந்த கை.
இப்படியாக மூன்று நான்கு நாட்கள் கழிந்தன.
இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என கருதி நேற்றுதான் எப்போதேனும் நாங்கள் செல்லும் எங்கள் குடும்ப மருத்துவரிடம் சென்றோம்.
அவர் உடல் முழுவதும் கவச உடை அணிந்து, மாஸ்க் அணிந்து ஒரு அடி தள்ளி நின்றுகொண்டு நான் சொன்ன பிரச்சனையை கேட்டார். கிளவுஸ் அணிந்த கைகளால் என் உள்ளங்கையை அழுத்திப் பார்த்தார்.
‘எங்கேனும் அடிபட்டதா?’ என்ற கேள்வியை மட்டும் கேட்டார்.
நான் இல்லை என சொன்னதும் ‘சரி, ஒரு ஆயில் எழுத்தருகிறேன். அதை தடவுங்கள். மூன்று நாட்களுக்கு இரண்டு வேளைக்கான மாத்திரையும் கொடுக்கிறேன். சாப்பிடுங்கள். சரியாகிவிடும்’ என்றார்.
அருகில் இருந்த மருந்துக்கடையில் மாத்திரைகளை வாங்கிக்கொண்டோம்.
வீட்டுக்கு வந்து குளித்து துவைத்து சுத்தம் செய்துகொண்ட பின்னர் டிபன் சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டேன். கைகளுக்கு தைலம் தடவினேன்.
என்ன ஆச்சர்யம் வலி மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.
நேற்று இரவு வலி இல்லாமல் தூங்கினேன். இதோ இப்போது இரண்டு கை விரல்களாலும் லேப்டாப்பில் டைப் செய்துகொண்டிருக்கிறேன்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம். கைவலியை சாக்காக வைத்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்தில், ‘கமலி From நடுக்காவேரி’, ‘The Great Father’, ‘நிசப்தம்’, ‘மதில்’, ‘மலேசியா to அம்னீஷ்யா’ போன்ற சில திரைப்படங்களை OTT- யில் பார்த்தேன்.
வலி இல்லாத உடல் எத்தனை சுகம், அதுவே வரம், அதுவே ஆனந்தமான வாழ்க்கை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
அவ்வப்பொழுது இதுபோல சில பிரச்சனைகள் ஏற்பட்டால்தான் வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். ‘இருக்கும்போதே இல்லாத நிலையை’ கற்பனையிலாவது நினைத்துப் பார்ப்பது கூட ஓர் உளவியலே. அதையும் நான் பல நேரங்களில் நானே எனக்கு பரிசோதித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முறை கற்பனையில் அல்ல. நேரடி அனுபவமாகவே அனுபவிக்க வைத்த இறைவனுக்கு நன்றி சொன்னேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP