ஜம்முனு வாழ காம்கேரின் OTP-197: அதீத சந்தோஷங்களும், தொடர் வெற்றிகளும் கூட விரக்தியை கொடுக்கும்!

பதிவு எண்: 928 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 197
ஜூலை 16, 2021

அதீத சந்தோஷங்களும், தொடர் வெற்றிகளும் கூட விரக்தியை கொடுக்கும்!

பெரிய பெரிய சோகங்களில் இருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள ஒரே வழி என்ன தெரியுமா? இதற்குப் பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொன்னாலும் நான் சொல்லும் ஒரே வழி, ‘நமக்கு அவ்வளவாகப் பிடிக்காத வேலைகளில் (விஷயங்களில்) அதிக கவனம் செலுத்தி வெறித்தனமாக செயல்படுவது’.

இது சாத்தியமா?

நிச்சயம் சாத்தியமே.

எப்படி?

சோகம் என்பது நம் மனதுக்குப் பிடித்தவர்களின் மரணமாக இருக்கலாம், காதல் தோல்வியாக இருக்கலாம், பணி இடத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு நம்மை விட ஜூனியருக்கு சென்றிருக்கலாம், வியாபாரத்தில் நஷ்டமாக இருக்கலாம்… இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். சோகங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

அவற்றை எல்லாம் வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது. பெரும்பாலும் அதற்கு நாம் காரணமில்லாமல் இருக்கலாம். நாம் காரணமாக இருக்கும் பல விஷயங்களுக்கே நம்மால் தீர்வு காண இயலாதபோது நாம் சம்மந்தப்படாமலேயே நம்மை வந்தடையும் சோகங்களையும், தோல்விகளையும் நம்மால் எப்படி வராமல் தடுத்துவிட முடியும்?

ஆனால் நம்மால் செய்ய முடிந்தது என்னவென்றால் நம்மை தஞ்சமடைந்து நம்மை முடக்கிப் போட வந்திருக்கும் தோல்விகளை ஓட ஓட விரட்ட முடியும்.

அந்த சமயத்தில்தான் நமக்கு அவ்வளவாக பிடிக்காத அல்லது பழகாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக திரைப்படங்களில் காதல் தோல்வியாகட்டும் அல்லது எந்த வித சோகமாகட்டும் அவர்கள் உடனடியாக நாடுவது மதுவையும், புகையையுமே. உண்மையில் ‘மது’ என்ன செய்கிறது அவர்களை மறக்கச் செய்கிறது. சில மணி நேரங்கள் அவர்களின் சோகங்களை மறந்து வேறொரு உலகில் வாழ வைக்கும் போதையை தருகிறது. ‘புகை’ அவர்களின் மன அழுத்தத்துக்கு தற்காலிகமாக விடுதலை கொடுப்பதைப் போன்ற மாயையைக் கொடுக்கிறது.

ஆனால் அவை நிரந்தரமாக அவர்களின் உடல் நல சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. அவர்கள் வாழும் நாட்கள் முழுவதும் அவற்றுக்கு அடிமையாகி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் சீரழிக்கிறார்கள்.

இதை அப்படியே மடை மாற்றி, நாம் வழக்கமாக செய்கின்ற விஷயங்களை கொஞ்சம் புறம் தள்ளி வைத்துவிட்டு நமக்கு அவ்வளவாக பழகாத விஷயங்களை எடுத்துவைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடுவது.

உதாரணத்துக்கு, நடைப்பயிற்சி செய்தே உங்களுக்குப் பழக்கமில்லை அல்லது முயற்சித்ததில்லை என்றால் அதை நீங்கள் ஒரு ஆயுதமாக பயன்படுத்துங்கள். வேக வேகமாக கால் மணி முதல் அரை மணி வரை காலை வெயிலில் நடைபயிற்சி செய்யுங்கள்.

மிக முக்கியமாக சோக பாடல்களை கேட்டபடி நடக்கப் பழகுங்கள்.  நேரம் போவதே தெரியாது. யாருக்கேனும் சோகப்பாட்டுப் பிடிக்குமா என நினைக்கிறீர்களா? நிச்சயம் பிடிக்கும். அதாவது சோகமான மனநிலையில் இருக்கும்போது குதூகலமான பாடல்கள் உங்களுக்கு அதீத எரிச்சலை உண்டாக்கும். சோகத்தைப் பிழியும் இசையும், பாடல் வரிகளும் உங்கள் சோகங்களுக்கு வடிகாலாக இருக்கும். அந்தப் பாடல் உங்களுக்காகவே எழுதப்பட்டதைப் போல தோன்றும். உங்கள் மனதை வருடிக் கொடுப்பதைப் போல ஆறுதலாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

பொதுவாகவே நாம் சோகமாக இருக்கும் நேரங்களில் நம் மனதுக்குப் பிடித்தவர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர்கள் ‘இதில் எல்லாம் என்ன இருக்கு?’ என்ற தொனியில் பேசினால் எத்தனை எரிச்சலாக இருக்கும் என நினைத்துப் பாருங்கள். ஆனால் அதுவே அவர்கள் தங்களுக்கும் அதுபோன்ற கஷ்டங்கள் ஏற்பட்ட சூழலை சோகமாக சொல்லி  ‘என்ன செய்வது அதில் இருந்து கடந்து வந்து வாழத்தான் வேண்டும்’ என்ற தொனியில் பேசினால் நமக்கு எத்தனை ஆறுதலாக இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.

இதுதான் சோகப் பாடல்களை கேட்டப்படி நடைப்பயிற்சி செய்யும்போது நம் மனதில் இருக்கும் துக்கங்களுக்கும் சோகங்களுக்கும் அவை நல்ல வடிகாலாக இருப்பதன் லாஜிக்.

உங்களிடம் சைக்கிள் இருந்தால் வியர்க்க வியர்க்க இரண்டு மூன்று தெருக்களைச் சுற்றிச் சுற்றி வாருங்கள். இருபது சுற்று, முப்பது சுற்று என கணக்கு வைத்துக்கொண்டு வேக வேகமாக மிதித்துச் செல்லுங்கள். இப்போது பாட்டு கேட்க வேண்டாம். அது விபத்தை உண்டாக்கும். உங்கள் சோகங்களே நீங்கள் சைக்கிளை மிதிக்கும் வேகத்தை அதிகரித்துக் கொடுக்கும். உங்களால் முடிந்த அளவு ஓட்டிய பின்னர், வீட்டுக்குள் சென்று ஃபேனுக்கு அடியில் உட்காரும்போது உங்கள் சோகங்கள் எல்லாம் ஓடிப் போயிருக்கும் என நான் சொல்ல மாட்டேன். ஆடிப் போயிருக்கும், ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.

ஆம், நம் உணர்வுகள் அத்தனைக்கும் தேவை வடிகால். அது சந்தோஷமாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி.

உங்களுக்கு ஒருவிஷயம் தெரியுமா? உங்கள் சோகங்களைப் பகிர்ந்துகொள்ள ஆட்கள் இல்லாமல் போனால்கூட ஒருவிதத்தில் பரவாயில்லை. காரணம், நம் சோகங்களுக்கான வடிகால் நான் குறிப்பிட்டுள்ளபடி நேர்மறையான வடிகால்கள் ஏராளமாக உள்ளன.

ஆனால் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளக்கூட ஆட்கள் இல்லாமல் தவிக்கும் எத்தனையோ பேர் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமா? அவர்கள் நிலைமைதான் கொடுமையிலும் கொடுமை. வருத்தங்களினாலும் துக்கங்களினாலும் உண்டாகும் மன அழுத்தத்தைவிட தங்களின்  அபரிவிதமான சந்தோஷத்தை, வெற்றியை பகிர்ந்துகொள்ள ஆட்கள் கிடைக்காமல் போனால் அது பெரிய அளவில் மன அழுத்தத்தை உண்டாக்கும்.

அதனால்தான் முந்தைய தலைமுறையில், திரைத் துறையில் ‘நம்பர் ஒன்’ ஹீரோக்களாக வளைய வந்த பெரிய பெரிய நடிகை, நடிகர்கள் எல்லாம் மது, போதைப்பழக்கம் புகைப் பழக்கம் என அடிமையாகி மடிந்த கதையெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். காரணம் அவர்களின் அதீத வெற்றியை அதன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஆட்கள் இல்லாமல் போனதுதான். அவர்களின் வெற்றிகள் கொடுக்கும் பொருளாதார வசதிகளை மட்டும் அனுபவிக்கும் சுற்றத்தினர்களால் அவர்களின் வெற்றிகளின் மகிழ்ச்சியைப் பகிந்துகொள்ளும் மனோரீதியிலான வடிகாலாக இருக்க முடியவில்லை.

வெற்றியை பகிர்ந்துகொள்ள ஆட்கள் இல்லாத போது ஒருவிதமான வெறுமை உண்டாகும். மேலும் மேலும் உழைத்துத்தான் என்ன செய்யப் போகிறோம், யாருக்காக இந்த வெற்றியும் சந்தோஷமும் என்ற விரக்தி உண்டாகும். இதனால் பல தீய பழக்கங்களுக்கு ஆளாக நேரிடலாம்.

செல்போன்களில் உள்ள ‘செல்ஃபி’ எடுக்கும் வசதியைப் போல, தோல்வியில் இருந்து நம்மை நாமே மீட்டுக்கொள்ள ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்றிரண்டைத்தான் சோகப்பாடல்கள், வாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் என இங்கு பட்டியலிட்டுள்ளேன். இதுபோல உங்களுக்கு அதிகம் பழக்கம் இல்லாத கடுமையான வேலைகளில் மனதை கவனம் செலுத்தினால் அது சிறப்பான வடிகாலாக இருக்கும்.

தோல்வியில் / சோகங்களில் இருந்து மீள்வது வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கொடுக்கும். வாழ வேண்டும் என்ற உத்வேகத்தை உண்டாக்கும்.

திரும்பவும் சொல்கிறேன், நம் உணர்வுகள் அத்தனைக்கும் தேவை வடிகால். அது சந்தோஷமாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி. அந்த வடிகால் நேர்மறையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை முழுக்க ஆனந்தம் ஆனந்தம், ஆனந்தமே!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 299 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon